மாவீரன் கிட்டு / விமர்சனம்

தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இது. “பழசை ஏன்யா கிளர்றாரு? அதான் ஒடுக்கப்பட்ட சனங்கள்லாம் முன்னேறிகிட்டு வர்றாங்கள்ல?” என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னும் கறை படிந்த கிராமங்களும், ஆணவக் கொலைகளும் தொடரத்தானே செய்கின்றன? அவற்றுக்கெல்லாம் சங்கு ஊதலாமே? என்றொரு பதிலாக இந்த படைப்பு அமைந்திருக்கலாம்.

கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு கல்லூரிக்கு செல்கிறார் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞன் விஷ்ணு விஷால். மாநிலத்திலேயே முதல் மாணவன் என்கிற அந்தஸ்தும் இவருக்கு இருக்கிறது. ஆனால் ‘எங்கே கலெக்டர் ஆகிவிட்டால்?’ என்கிற அச்சத்தில் தவிக்கும் ஆதிக்க சாதிக் கும்பல் ஒன்று, தந்திரமாக விஷ்ணு மீது கொலைப்பழி சுமத்தி ஸ்டேஷனில் வைத்து சுளுக்கெடுக்கிறது. பொய் வழக்கு போட்ட இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்யக் கோரியும், பிணத்தை பொதுவழியில் எடுத்துச் செல்ல அனுமதி கோரியும், அந்த ஊரின் புரட்சி இளைஞர் பார்த்திபன் தலைமையில் போராடுகிறது ஒடுக்கப்பட்ட சாதி. யாருக்கு வெற்றி என்பது க்ளைமாக்ஸ். இந்த வெற்றிக்கு கிட்டு எடுத்த முடிவு என்ன என்பதுதான் சதாரணமான க்ளைமாக்சை அசாதாரணமாக்குகிறது. நடுநடுவே சேர்க்கப்பட்ட காதல், ட்ரையான பேரீச்சம் பழங்களுக்கு நடுவே திணிக்கப்பட்ட செக்கச்செவேர் செர்ரி!

கிட்டு கேரக்டருக்கு மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது விஷ்ணுவின் அமைதியான முகம். இவ்வளவு அழுத்தமான கதையில் நடிக்கப் போகிறோம். இதுதான் நமக்கு லைஃப் டைம் அச்சீவ்மென்ட் என்று நினைத்திருந்தால், ரெண்டு மாசம் மெனக்கெட்டு 87 களின் ஸ்டைல்படி முடி வளர்த்திருக்கலாம். ஆனால் அலட்சியம்… ஒரு விக்கை வைத்துக் கொண்டு வருகிறார். பாதிநேரம் அதுவே நம் கண்களை உறுத்துவதால், விஷ்ணுவின் மார்க்கில் சிலவற்றை உருவ வேண்டியிருக்கிறது. தன் சாதி சனம் மொத்தமும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பசியும் போராட்டமுமாக கிடக்கும் போது, இவர் மட்டும் ஸ்ரீதிவ்யாவுடன் டூயட் ஆடி திரிவதெல்லாம் திரைக்கதையின் பெரும் வீழ்ச்சி. அதுமட்டுமா? கலெக்டருக்கு படிக்கிற ஒருவன், அந்த போராட்ட வியூகத்தை அவனல்லவா வகுத்திருக்க வேண்டும்?

ஆனால் சக மாணவியை பாம்பு கடித்தபின் அவளை காப்பாற்ற மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தடை ஓட்டம் போல தூக்கி சுமக்கும் அந்த காட்சி, புல்லரிக்க வைக்கிறது. பொருத்தமாக யுகபாரதியின் வரிகளும் இமானின் ட்யூனும் அமைந்து கொள்ள… அந்த மாணவி விஷம் இறங்கி கண் விழிக்கும்போதுதான் ரிலாக்ஸ் ஆகிறது தியேட்டர். பலே சுசீந்திரன் அண் டீம்.

நிஜமாகவே இப்படத்தின் தலைப்பை ‘மாவீரன் சின்ராசு’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். அந்த கருப்பு சட்டையும், ஊடுருவி பார்க்கும் விழிகளுடன் பேசும் அழுத்தமான வசனங்களுமாக அசர விடுகிறார் பார்த்திபன். வெறும் எழுத்துக்களாக இருக்கும் டயலாக், பார்த்திபன் வாயிலிருந்து வெளிப்படும்போது, தீ பிழம்பாவதுதான் இந்த கேரக்டரின் அடர்த்தி!

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை மிக தீர்மானமாக எடுத்துக் கொண்டு ஆரம்பிக்கிறது படம். முடிகிற வரைக்கும் எந்த இடத்திலும் ‘நோ காம்ப்ரமைஸ்’ என்பதில் உறுதியாக இருந்த சுசீந்திரனை பாராட்டுவதா, கடிந்து கொள்வதா? ஏன் இந்தப்படத்தில் சூரியை வைத்துக் கொண்டு காமெடியை கட் பண்ணினாரோ? யாரும் அந்த ஊரில் சிரிக்கக் கூடாது என்பது சட்டமா, அல்லது இந்த கதையில் நகைச்சுவை இருந்தால், தவறாகிவிடுமா? ஐயோ பாவம் சூரி. கூட்டத்தில் ஒருவனாக வந்து, கும்பலோடு கும்பல் ஆகியிருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா வழக்கம் போல பேரழகு. தன்னுடன் படிக்கும் மாணவன் மீது காதல் வயப்படுவதை மனசுக்குள் அடக்கி வைக்காமல் அப்பாவிடமே சொல்லி அனுமதி வாங்குகிற அழகும், காதலனின் கண் பார்த்து காதலை சொல்கிற துணிச்சலும் அப்படியே அந்த கேரக்டருக்குள் நுழைந்து ‘பாடம்’ ஆகியிருக்கிறார்.

கலைஞர் டி.வி பெரைராவுக்கு அற்புதமான கேரக்டர். ‘உன்னை விட நல்ல பையன் என் பொண்ணுக்கு எவன் கிடைக்கப் போறான்?’ என்று காதலுக்கு க்ரீன் சிக்னல் போடும்போதே அவருக்கு ரெட் சிக்னல் போட்டு விடுகிறார்கள். அளவோடு வருகிறார். மனமெல்லாம் நிறைகிறார்.

ஹரிஷ் உத்தமனும் பொருத்தமான தேர்வு. இவர் சீற சீற, விஷ்ணு மீது நமக்கு ஏற்படுகிற அனுதாபம்தான் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

இமானின் இசையில், எல்லா பாடல்களும் இனிமை. சர்க்கரை தூக்கல்! பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால் பாட்டு போட்டுவிட்டாரே என்பதற்காக காபியில் மிக்சரை கொட்டிய மாதிரி, கண்ட இடத்திலும் சொருகியிருக்கிறார்கள்!

கொட்டாவிக்கு முன்பே கூட்டத்தை நிறைவு செய்த மாதிரி, மு.காசி விஸ்வநாதனின் எடிட்டிங் படத்தின் அளவை மிக நேர்த்தியாக முடிவு செய்திருக்கிறது.

நிறைவான ஒரு கதை, ஆனால் அரைகுறையான பிரசன்ட்டேஷனுடன்…

-ஆர்.எஸ்.அந்தணன்

https://youtu.be/ak7iNwZe9zw

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Parandhu Sella Vaa – Mann Meedhu | HD Lyric Video

https://www.youtube.com/watch?v=CEmo3QYvwxc  

Close