சத்தமா வெடிங்க தம்பி… மிஷ்கின் கூட்டத்திலிருந்து ஒரு மின்னல்

மிஷ்கினின் பாடி லாங்குவேஜ் இருக்கே… அதை நடு ராத்திரியில் நினைத்துக் கொண்டாலும் தூக்கிவாரிப் போடும்! கூலிங் கிளாஸ் போட்ட குண்டாஸ் போலவே பேசுவார். நடப்பார். நிற்பார். சிந்திப்பார். அவரை அரை மணி நேரம் அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல் கவனித்து வந்தாலே பார்ப்பவர்களுக்கு ஜுரம் வரும். ஜன்னி கூட வரும்! அப்படிப்பட்ட ஒரு விசேஷமான விந்தையான பாடி லாங்குவேஜுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவராக இருக்கிறார் ஸ்ரீகணேஷ். (ஸ்ரீகணேஷுக்கும் மிஷ்கினுக்கும் என்னய்யா கனெக்ஷன்?)

இந்த ஸ்ரீகணேஷ் மிஷ்கினின் அசிஸ்டென்ட். ஒரு பதற்றம் இல்லை. பேச்சில் பெருமாள் கோவில் தயிர் சாதம் வழிகிறது. அடக்கம். அமைதி. இவரா இந்தப்படத்தை எடுத்தார் என்பது போல இருக்கிறது ட்ரெய்லர். (அங்க நிக்குறாரய்யா குருநாதர் மிஷ்கின்) இவர் இயக்கிய 8 தோட்டாக்கள் படம் ஏப்ரல் ரிலீஸ்.

ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிற துப்பாக்கி ஒன்று திருடு போய்விடுகிறது. சென்னையில் வெவ்வேறு இடங்களில் எட்டு முறை வெடிக்கும் அந்த தோட்டாக்களால் நடைபெறும் ரகளை ரணகணங்கள் என்ன? இதுதான் படம். நாசர், டி.சிவா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்க, புதுமுகம் வெற்றி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரது அப்பா வெள்ளை பாண்டியன்தான் படத்தின் தயாரிப்பாளர். அப்படியென்றால், பையனுக்காக கதையை வளைத்து நைத்திருப்பார்களோ? அந்த டவுட்லதான் ஆசிட் ஊற்றுகிறார் ஸ்ரீகணேஷ்.

பொதுவாக இப்படி அப்பாக்கள் தயாரிக்கும் படத்திற்காக கதையை சேதாரமாக்குகிற பிசினசே இங்கு இல்லை என்கிறார் அவர். வெற்றியும் ஒரு தீவிரமான சினிமா ரசிகர். படம் எடுக்குறோம்ங்கிற பேர்ல உப்புமா கிண்டிவிடக் கூடாது என்பதில் படு தீவிரமாக இருந்தவர், பல பேரிடம் கதை கேட்டாராம். எந்த கதையிலும் திருப்தியில்லை. அப்போது கிடைத்தவர்தான் ஸ்ரீகணேஷ். இவர் சொன்ன கதையில் அவ்வளவு சுவாரஸ்யமும், திருப்பமும் தெரிய… உடனே பிக்ஸ் பண்ணிவிட்டார்கள்.

“படத்தை பார்த்துட்டு மிரண்டுட்டேன். நல்ல படங்களை, தரமான படங்களை மட்டுமே தேடி தேடி வெளியிடும் வழக்கம் எங்கள் நிறுவனத்திற்கு இருக்கிறது. துருவங்கள் பதினாறு படத்தை பார்க்கும் போது எப்படி பீல் பண்ணி அப்படத்தை வெளியிட முன் வந்தேனோ, அதே கான்பிடன்ட் இந்த படத்தை பார்க்கும் போதும் வந்துச்சு” என்கிறார் 8 தோட்டாக்கள் படத்தை வெளியிடும் சக்திவேல் பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேல்.

துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு 22 வயசு. அவரை விட ஒரு வயசு கம்மி இந்த ஸ்ரீகணேஷுக்கு. திறமைசாலிகளை தேடி வந்தாவது கை கொடுப்பான் ரசிகன்.

சத்தமா வெடிங்க தம்பி…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்!

Close