நம்பியார் விமர்சனம்
முள்ளங்கி பத்தையாட்டம் எம்.ஜி.ஆர் இருக்கும்போது, முள்ளுச்செடி போல இருக்கும் நம்பியாரை எடுத்து சொறிந்து கொண்டால் என்னாகும் என்பதை ஒரு படமாக சொல்ல நினைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் கணேஷாவின் இந்த நியூ தாட், படம் முடியும்போது குக்கரில் வேக வைத்த குல்பி ஐஸ் போல என்னென்னவோ ஆகிக்கிடக்கிறது.
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வளர்க்கப்படும் ஸ்ரீகாந்தை அநியாயத்துக்கு ‘டைட்’ பண்ணுகிறது பேமிலி. எவ்வளவு நேரம்தான் நல்லவன் போலவே நடிப்பது?மனசுக்குள் உறங்கிக் கிடக்கும் கெட்டவனை தட்டி எழுப்புகிறார் ஸ்ரீகாந்த். அந்த கெட்டவன்தான் நம்பியார். நடுவில் இவரும் சுனைனாவும் எதார்த்தமாக ஒரே இடங்களில் சுற்றி சுற்றி வர, அதையெல்லாம் கவனிக்கும் சுனைனாவின் அப்பா டெல்லி கணேஷ், “ஏம்மா நீ அவனை லவ் பண்ணுறீயா? எப்போதும் ஒண்ணாவே திரியுறீங்க?” என்று மகளை பாடாய் படுத்துகிறார். இல்லேன்னு உண்மையை சொல்லியும் நம்பாத அப்பாவுக்கு பாடம் கற்பிக்க, ஸ்ரீகாந்தை லவ் பண்ண ஆரம்பிக்கிறார் சுனைனா.
ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்துக்குள் உறங்கிக் கிடந்த நம்பியார் வெளியேறி, தன்னையும் தன் சுற்றத்தையும் இஷ்டப்படி இம்சை செய்ய… காதலும் போய், பேமிலியும் போய் தவிக்க விடுகிறது விதி. போதும் போதாததற்கு போலீஸ் வேறு துரத்துகிறது. முடிவு? விட்டால் போதும் என்று ரசிகர்கள் தெறித்து ஓடுவதுதான்!
‘ஸ்ரீகாந்த் படங்களில் அவரை நடிக்க வைப்பது இயக்குனரின் வேலை அல்ல. அவரை நடிக்காமல் பார்த்துக் கொள்வதுதான்’ என்கிற குறைந்த பட்ச ரகசியம் கூட தெரியாத கணேஷாவால், கெட்டப் பெயர் என்னவோ ஸ்ரீகாந்துக்குதான். மீட்டருக்கு மேல் நடித்து வைத்திருக்கிறார். இவருக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சந்தானமும் அந்த மீட்டரை கேட்ச் பண்ணுகிறாரா? படம் முழுக்க இருவரும் பேசி பேசி புல் சார்ஜ்ஜையும் இறக்கிவிடுகிறார்கள். படத்தின் ஆறுதல், ஸ்ரீகாந்துக்கும் சுனைனாவுக்குமான அந்த லவ் எபிசோட்.
ஒவ்வொரு முறையும் ஸ்ரீகாந்தை லெப்ட் ரைட் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் சுனைனா, ஸ்ரீகாந்தின் சாதுர்யமான வெளிப்படையான பேச்சால் மனம் தடுமாறி அவர் வசமே விழுகிற காட்சிகள் நச். இந்த தருணங்களில் கணேஷாவின் வசனங்களில் தெறித்தோடுகிறது சுவாரஸ்யம். ஸ்ரீகாந்த் குடித்துவிட்டு அலப்பறை செய்யும் அந்த நீ…….ளமான காட்சியில் ஆங்காங்கே கட்டிங் போட்டிருந்தால், அந்த களேபரம் கூட படு சுவாரஸ்யமாக வந்திருக்கும். பெற்ற அப்பாவையும், அண்ணியையும், அண்ணனையும் போட்டுத்தாக்கும் ஸ்ரீகாந்த், அதற்கப்புறம் அதே அண்ணனிடம் அடி வாங்கும்போது பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
சுனைனா கேரியரில் இது முக்கியமான படமும் அல்ல. முன்னேற்றம் தருகிற படமும் அல்ல. ஆனால் படம் முழுக்க நீக்கமற வருகிறார் என்பதே சிறப்பு.
தட்டு முட்டு சாமான்களை உருட்டித் தள்ளுகிற வேகத்தில் படம் முழுக்க விளையாடியிருக்கிறார் சந்தானம். இவர் வராத காட்சிகள் இல்லவே இல்லை என்று நினைத்தால், சாமர்த்தியமாக அவரை கோட்டுக்கு வெளியே நிற்க வைக்கிறது திரைக்கதை. அப்பவும் சந்தானத்தின் டப்பிங் குரல் புண்ணியத்தில் உள்ளே என்ட்ரி ஆகிறார் மனுஷன். சந்தானம் குரல் கேட்காத சில நிமிஷங்கள் மட்டும் இடி இடித்து ஓய்ந்த திருப்தி வருகிறது நமக்கு. “அட சந்தானம் படத்துக்கு பிளஸ்சா, மைனஸ்சா?’’ என்றால், தெரியலையே சிவகாமி… என்று பம்முகிறான் ரசிகன்.
நட்புக்காக ஒரு காட்சியில் வந்து போகிறார் ஆர்யா. ஆறுதல்யா!
தூங்கும் பெண்ணே தூங்காதே பாடலில் நான் இருக்கேன்யா ராசா என்று ஆறுதல் படுத்துகிறார் விஜய் ஆன்ட்டனி. ஆற அமர பாடலில் சந்தானத்தையும் பாட வைக்கிறாரா… துள்ளாட்டம் போடுகிறது தியேட்டர். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் எம்.ஜி.ஆர் சிலை மட்டுமா அழகு? படத்தில் எல்லாமே அழகு!
நம்பியார்! படத்திற்கே வில்லனாகிவிட்டாரே…!
https://www.youtube.com/watch?v=RPmOZjuoDNY&feature=youtu.be
-ஆர்.எஸ்.அந்தணன்