தியேட்டர்களில் தேசிய கீதம்! கமல் எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் சினிமாவை பார்ட் டைம் தொழிலாக்கி பல மாதங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அரசியல் முறை பயணமாக அவர் இந்தியாவை சுற்றி வருவது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது. அது அரசு முறை பயணமாகுமா என்கிற ஆவலில் நுனி நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

டெங்கு கொசுவை கூட சமாளித்துவிடலாம். இந்த திடீர் கொசுவை என்ன செய்வது என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கோஷ்டிகள் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க, இன்டர்நேஷனல் மீடியாவையே கூட தன் வீட்டுக்கு வரவழைக்கிற அளவுக்கு நாள் தோறும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் கமல்.

இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமி கமல்ஹாசனை பேட்டியெடுத்திருக்கிறார். அப்போது கமல் கூறிய பதில்கள் மிக முக்கியமானவை. அவை நறுக்கென்று கீழே-

1. நான் மோடி, சந்திரபாபு நாயுடு, சித்தராமையாவை சந்திக்க உள்ளேன்…

2. எனது கட்சிக்கு வருமான வரி கட்டும் மத்திய தர வர்க்கத்தினர் பணம் கொடுப்பார்கள்.

3. ரஜினியின் ஐடியாலஜியில் எனக்கு சில மாறுபாடுகள் வந்தாலும் இருவரும் சேர்ந்து எல்லைகளை வகுத்து கூட்டாக அரசியல் செய்ய முற்படுவோம்….

4. தேசிய கீதம் பாடலை பொது இடங்களில் போடும்போது மரியாதை செலுத்த வேண்டும் எனும் கட்டாய உத்தரவை எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்த அளவில் பொது இடங்கள் பீச், பார், உணவகங்கள். சினிமாவிற்கு சிலர் குடித்து விட்டு வருவதால் அது மதிப்பிற்குரிய இடமல்ல…

5. ரஜினி புதுக் கட்சி தொடங்கினால். அது குறித்த எனது கருத்தை அவரிடம் தனியாகச் சொல்வேன். இந்தப் பேட்டியில் சொல்ல மாட்டேன்.

6. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை முதலில் வரவேற்றாலும் அதை இன்னும் நன்றாக திட்டமிட்டு நிறைவேற்றி இருக்கலாம் என்றுதான் சொன்னேன். பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சரியானதே…

7. இந்துத் தீவிரவாதம் என நான் கூறவில்லை. மொழி மாற்றம் செய்யும்போது தவறாக கூறிவிட்டார்கள்.

8. பினராய், மம்தா, கெஜ்ரிவால் சந்திப்புகளால் நான் பிஜேபி எதிர்ப்பாளராக பார்க்கக் கூடாது. எல்லோரையும் சந்திக்க உள்ளேன். மோடி உட்பட…

Read previous post:
நயன்தாராவின் ஓரவஞ்சனை! சினிமா ஏரியாவில் முணுமுணுப்பு

Close