நட்பதிகாரம் / விமர்சனம்
ராஜ்கிரண் வாயில் சிக்கிய நல்லி எலும்பு மாதிரி, காதலை மென்று துப்பி விட்டது தமிழ்சினிமா. இதற்கப்புறமும் ஒரு காதல் படம் எடுத்தால் அதில் ஏதாவது புதுசாக இருக்க வேண்டுமே? மண்டையை பிய்த்துக் கொண்டு கணக்கு போட்டதில், டைரக்டர் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த ஈவு, விடை எல்லாம்தான் இந்த நட்பதிகாரம்! நீங்க எவ்வளவுதான் யோசிச்சாலும் ‘கள்’ அவ்வையார் காலத்தை சேர்ந்ததாக இருக்கும். ‘கலயம்’தான் கம்ப்யூட்டர் காலத்ததாக அமையும்! அப்படிதான் அமைந்தும் இருக்கிறது.
இரண்டு காதல் ஜோடிகள். அவர்களுக்குள் ஏற்படும் பிணக்கு கணக்குகளால் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் ஜோடி மாறி நிச்சயதார்த்தம் செய்துவிடுகிறார்கள் பெற்றோர். அதற்கப்புறமாவது அவர்களுக்குள் அண்டர்ஸ்டான்டிங் ஏற்பட்டதா? காதல் ஜோடிகள் கணக்கை நேர் செய்து கொண்டார்களா? ஒரு சிக்கலான கதையை சிரச்சேதம் செய்யாமல் அழகுபட கொடுத்திருக்கிறார் ரவிச்சந்திரன். காதலிப்பவர்களும், காதலிக்க ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டிருப்பவர்களும், காதல் தோல்வியடைந்தவர்களும், இருட்டில் ஓர சீட்டாக தேடி அமரத் துடிக்கிற ஜோடிகளும் கூட தேடித் தேடி பார்க்க வேண்டிய படம்! என்ன ஒன்று…? படத்தில் வரும் ஜோடிகளின் ‘பார்ஷ்’ கலாச்சாரம்தான் கடலோர சுடுமண் மாதிரி ஒட்டாமலே இருக்கிறது.
அதற்கு படத்தின் முதல் காதல் காட்சியே உதாரணம். தெருவோரத்தில் கேரம் ஆடிக் கொண்டிருக்கும் ராஜ்பரத்திடம், காரில் போய் கொண்டிருக்கும் தேஜஸ்வி காரை நிறுத்தி தம் பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி கேட்கிறார். சிகரெட் பற்றுகிறதோ, இல்லையோ? காதல் பற்றிக் கொள்கிறது இருவருக்கும். அதற்கப்புறம் பார் பப் என்று சுற்றுகிறார்கள். இன்னொரு ஜோடி என்ன பண்ணுகிறது? அதுவும் கிட்டதட்ட பொருந்தா ஜோடிதான். நாட்டியத்தை உயிராக நினைக்கும் ரேஷ்மிக்கும், பார் பப் என்று திரியும் பணக்கார இளைஞன் அம்ஜத்கானுக்கும் லவ். நாட்கள் நகர நகர ரேஷ்மிக்கும், ராஜ்பரத்துக்கும் சற்றே நெருக்கம் வருகிறது. ஆஹா… ஜோடியை மாற்றி ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால்? சுற்றி பாதுகாப்பு சுவர் எழுப்பி, அதற்குள் கலாச்சாரக் கோவில் கட்டுகிறார் டைரக்டர்.
ஓங்குதாங்காக இருக்கிறார் ராஜ்பரத். அசப்பில் தெலுங்கு ஹீரோ ராணா போலவே இருப்பதால், பார்த்து பழகிய உணர்வோடு படத்திற்குள் ஐக்கியமாகிறோம். தனக்கு தெரியாமலே தன் தோழி ரேஷ்மி மேனனுடன் நிச்சயதார்த்தம் ஆகிவிடுவதை கேள்விப்படும்போது அவர் முகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும் கவலை, கடைசி வரை ஸ்டேன்ட் பை மோடிலேயே இருப்பது கூட சிறப்புதான். இவருடைய ஓங்குதாங்கான உயரத்திற்கு ஆக்ஷன் ஹீரோவாக கூட வரலாம். முயலுங்கள் பரத்.
அந்த இன்னொரு ஹீரோ அம்ஜத்கானை ஏற்கனவே ‘புகைப்படம்’ படத்தில் பார்த்த ஞாபகம். ராஜ்பரத் அமைதி என்றால், இவர் ஆர்ப்பாட்டம். காதலியை கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காக ரிஜிஸ்தர் ஆபிசுக்கு வரச்சொல்லிவிட்டு, திடீரென அப்பாவுக்கு பிரச்சனை என்று வெளிநாட்டுக்கு ஓடினாலும், இந்த ஐபோன் ஈமெயில் காலத்தில் ஒரு வினாடி கூடவா நேரம் ஒதுக்கி தகவலை பாஸ் பண்ண முடியாது? (இடிக்குதே ட்யூட்) தன்னிடம் உண்மையை சொல்ல வரும் ராஜ்பரத்திற்கு காது கொடுத்து கேட்கிற அளவுக்கு மனப்பக்குவம் இல்லாமலிருப்பதும், அப்படி தொடர்ந்து முயலும் அவரை நண்பர்களை கொண்டு தாக்குவதுமாக சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்கிறார் மனுஷன்.
இதற்கு முன் சில படங்களில் நமக்கு அறிமுகமானவர்தான் ரேஷ்மி மேனன். தாய் போல இருந்து வளர்த்த தந்தை எம்.எஸ்.பாஸ்கரிடம் சொல்லாமல் காதலனுடன் ஓடிப்போக துணியும் அவரது துணிச்சல், அந்த காதலை அப்பாவிடம் சொல்வதில் இல்லையே? என்று கவலைப்பட வைக்கிறார். இவரது அறிமுகக் காட்சியில் ஜீன்ஸ் படத்தில் வரும் நித்தியஸ்ரீ யின் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலுக்கு பரத நாட்டியம் ஆட விட்டிருக்கிறார் டைரக்டர். ஜீன்ஸ் படத்தில் அந்த நல்ல பாடலை கெடுத்து குட்டிச்சுவராக்கியிருப்பார் ஷங்கர். அந்த ஏக்கத்தை இங்கு போக்கியிருக்கிறார் டைரக்டர் ரவிச்சந்திரன்.
அப்புறம் தேஜஸ்வி. ஆள் கொழுக் மொழுக். ‘காட்டி’ நடிப்பதில் கரை கண்டவராகவும் இருப்பதால், இன்னும் கொஞ்ச காலத்திற்கு கோடம்பாக்கத்தில் வண்டி நன்றாக ஓடும்!
தன் மகளின் விருப்பம் தெரியாமலே ஜோடி மாற்றி நிச்சயம் செய்துவிட்டோமே என்று கலங்கும் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ வைத்திருக்கிறார்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் எல்லா காட்சிகளும் பேரழகு. பப்களின் அரை இருட்டை அதற்கேற்ற லைட்டிங்களுடன் பிரமாதப்படுத்தியிருக்கிறார். தீபக் என்ற புதியவரின் இசையில் பாடல்களும் இனிமை. உறுத்தாத பின்னணி இசையால் கவனிக்கவும் வைக்கிறார்.
‘சந்தேகம் மட்டும் வந்திச்சு..? லவ் அவ்ளோதான்’ என்பதை காலத்திற்கேற்ப சொல்லிய விதத்தில் ரவிச்சந்திரனை பாராட்டினாலும், வண்டி 20 கி.மீ வேகத்தை தாண்டலையே சார்? அடுத்த படத்திலேயாவது கொஞ்சம் அதிகாரமா ஆக்சிலேட்டரை மிதிங்க!
-ஆர்.எஸ்.அந்தணன்