வாங்கம்மா! இப்படி பண்ணுங்கம்மா!
எதன் அருமையும் அது இல்லாதபோதுதான் தெரியும் என்பார்கள். அப்படிதான் ஆகியிருக்கிறது இந்த விஷயமும்! ஒரு காலத்தில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, அதை நடத்தி வந்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்காகவே பெரிய ஹிட்டடித்தது. எதிரிலிருக்கும் மனிதர்களின் துக்கங்களை தன் துக்கமாகவே கருதி அவர் காட்டிய எக்ஸ்பிரஷன், அப்படியே அந்த நிகழ்ச்சிக்குள் நேயர்களை கடத்திக் கொண்டு போனதை உலகம் நன்கு அறியும்.
அதுமட்டுமல்ல, சும்மா துக்கடா பஞ்சாயத்தை கூட சுடு சட்டியில் போட்டு கொதிக்கிற பக்கோடா நிலைமைக்கு ஆளாக்குகிற சாமர்த்தியம் இருந்தது அவருக்கு. அவரது சாமர்த்தியான பேச்சில் சில கொலைகள் கூட வெளிச்சத்துக்கு வந்ததை அவ்வளவு ஈசியாக மறந்துவிட முடியாது. ஆனால் அவரது பேவரைட்டான, “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”வை வைத்துக் கொண்டு அவரை ஓவராகவே டீஸ் பண்ணிவிட்டது உலகம்! அவ்வளவு ஏன்? இந்த தேர்தலில் முதல் விளம்பரமே அவரது என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா டயலாக்தான்!
சரி… இப்போதென்ன நிலவரம்? லட்சுமி ராமகிருஷ்ணன் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியிலிருந்து விலகியதை தொடர்ந்து நடிகை சுதா சந்திரனை வைத்து குப்பை கொட்டி வந்த சேனல், பொறுக்க முடியாமல் மீண்டும் பழைய கோலத்துக்கே புள்ளி வைக்க ஆரம்பித்துவிட்டது. அவர்களே முன் வந்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினார்களாம். “திரும்ப நீங்களே வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுங்க” என்று கேட்டுக் கொள்ள, பெரிய மனசு பண்ணி ஒப்புக் கொண்டிருக்கிறார் இவரும்.
இன்று சென்னையில் அதற்கான ஷுட்டிங் ஆரம்பித்துவிட்டது. என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா என்று ஆரம்பத்தில் முறுக்கிக் கொண்டு போன லட்சுமி இறங்கி வந்தது முதல் சந்தோஷம். அதைவிட பெரிய சந்தோஷம், “வாங்கம்மா இப்படி பண்ணுங்கம்மா” என்று எவ்வித முகக் கோணலும் இல்லாமல் அந்த சேனல் அழைத்ததே… அதுதான்!