ஹீரோவை அவமானம் செய்தாரா நயன்தாரா? படத் தயாரிப்பாளர் மறுப்பு
படத்தில் நயன்தாரா இருந்தால் போதும், அவர் ஒரியா, உகாண்டா நாட்டு மொழிகளில் நடித்திருந்தால் கூட நம்மூருக்கு டப்பிங் அடித்து கல்லா கட்டும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நால்மொழி நாயகியான அவரை நம்பி இன்னொரு படம் வரப்போகிறது. படத்தின் பெயர் செல்வி. இப்படம் ஆந்திராவில் பாகுபங்காரம் என்ற பெயரில் தயாராகியிருக்கிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியிடப் போகிறார்களாம். தமிழில் இப்படத்தை பத்ரகாளி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. மொழி மாற்றத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறார் ஏஆர்கே ராஜராஜா.
அந்த்ரக்கி நமஸ்காரம் என்று தெலுங்கில் பேச ஆரம்பித்து, ஆங்கிலத்தில் விழுந்து புரண்டு, தமிழில் கரையேறிய தயாரிப்பாளர் சொன்னதில் நமக்கு விளங்கியது ஒன்றே ஒன்றுதான். “ஆரும் நயன்தாரவை தப்பா நெனக்காதீங்கோ. அவங்க ரொம்ப நல்லவெங்கே” என்பதுதான். ஏனிந்த கான்டாக்ட் சர்டிபிகேட்? இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கவிருக்கும் சில தினங்களுக்கு முன்புதான் பிரபல நாளிதழ் ஒன்றில், செல்வி படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார் நயன்தாரா என்றொரு செய்தி வந்தது. ஹீரோ வெங்கடேஷ் மீதுள்ள கோபத்தில்தான் அவர் இவ்வாறு செய்ததாகவும் அதில் செய்தி வர, போனை போட்டு நயன்தாரா அழுதாரோ என்னவோ? பகிரங்கமாக மறுத்தார் பத்ரகாளி பிரசாத்.
“இந்த படத்திற்கு நயன்தாரா அவ்ளோ ஒத்துழைப்பு கொடுத்தாச்சு. இப்படியொரு நியூஸ் தமிழ்நாட்ல வந்திருச்சுன்னு தெரிஞ்சதும், ஆந்திராவுல அல்லாரும் அப்செட். ப்ளீஸ். அப்படியெல்லாம் இல்லேன்னு ஒரு நியூஸ் போட்ருங்கோ” என்றார் வருத்தத்துடன்.
போட்டாச்!