திருடப்பட்ட கதையில் நயன்தாரா! திருட்டுக் கொடுத்தவர் புலம்பல்!
“‘குள்ள நரி திருடக்கூடாது. திருடவே கூடாது” என்பதுதான் சிறுவர்களுக்காக ஒளிபரப்பாகும் ‘டோராவின் பயணங்கள்’ மையக்கரு. ஆனால் ‘டோரா’ என்றொரு படத்தை எடுத்து அதை இம்மாதம் திரையிட திட்டமிட்டிருக்கும் ஹீரோயின் நயன்தாரா, தயாரிப்பாளர் சற்குணம், டைரக்டர் தாஸ் ராமசாமி ஆகியோருக்கு, இந்த குள்ளநரி டயலாக்கை நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் சேட்டிலைட் ஸ்ரீதர்.
ஆமாம்… யாருப்பா இவரு?
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சேட்டிலைட் மற்றும் எப்.எம்.எஸ் ஏரியாக்களுக்கு படங்களை வாங்கிக் கொடுத்து தமிழ்சினிமா வியாபாரத்திற்கு உறுதுணையாக இருந்தவர். நாமே ஒரு சினிமாவை இயக்கினாலென்ன என்ற ஆசையில் கதை எழுதி, ‘அலாவுதீனும் அற்புத காரும்’ என்ற பெயரில் அப்படத்தை துவங்கினார். இதற்காக ஒரு கார் வாங்கி, அதை ஒரு பேய் கார் போலவே மாற்றியும் இருக்கிறார். ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுத்ததுடன், வசனத்தை பிரபல இயக்குனர் அகத்தியனிடமும் எழுதி வாங்கியிருக்கிறார்.
ஒரு முறை இப்பட வேலைக்காக பொள்ளாச்சி போயிருந்தபோது, அங்கே டைரக்டர் சற்குணமும் அவரது உதவி இயக்குனர்களும் ‘நையாண்டி’ பட டிஸ்கஷனுக்காக வந்திருந்தார்களாம். அங்கு களவு போயிருக்கலாம். அல்லது இந்த கதையை இன்டஸ்ட்ரியில் பல பேரிடம் சொல்லியிருக்கிறார் ஸ்ரீதர். அங்கிருந்து போயிருக்கலாம் என்பதுதான் இவரது ஐயப்பாடு.
சரி… பைனல் மேட்டர் என்ன?
சமீபத்தில் டோரா படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களை பார்த்தேன். அதுமட்டுமல்ல. என் படத்திற்கு பைனான்ஸ் பண்ணவிருந்த ஒருவர், அதான் டோரா கதையும் உன் கதையும் ஒண்ணாயிருக்கே? நான் எப்படி பைனான்ஸ் தர்றது என்று கூறிய பிறகுதான் சுதாரித்துக் கொண்டேன் என்கிறார் ஸ்ரீதர்.
என் சொந்த வீடு, கார், எல்லாவற்றையும் விற்று இந்த படத்திற்காக போட்டிருக்கேன். இதுவரைக்கும் முப்பது லட்சத்திற்கு மேல செலவு பண்ணியிருக்கேன். எந்நேரமும் இந்த படத்திற்காகவே உழைச்சதால் என் மனைவி கோபித்துக் கொண்டு டைவர்ஸ் வாங்கிட்டு போயிட்டா. எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறதே இந்த படத்திற்காகதான். இப்போ இதையும் இழக்க சொல்றீங்களா? என்று கண்ணீர் வடிக்கும் ஸ்ரீதர், உறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்.
என்னவாம்?
“உரிய நியாயமோ, நிவாரணமோ கிடைக்கலேன்னா டோராவுக்கு முட்டுக்கட்டை போடுவேன். முதலில் வழக்கு போடுவேன்” என்பதுதான் அந்த முடிவு.
கோடம்பாக்கம் இன்னும் என்னென்ன கொடுமைகளை சந்திக்கப் போவுதோ?
https://youtu.be/qkXXMgkoT1o