ஐயப்ப பக்தர்களுக்கு 18 ம் படி! வசீகரனுக்கு 10 வது படி! பெருமைமிகு தமிழர் விருது!

ஐயப்ப பக்தர்களுக்கு பதினெட்டாம் படி அனுபவம் போல, இந்த பத்தாம் படி அனுபவத்தை பரவசத்தோடும் பக்தியோடும் எதிர்கொள்ளப் போகிறார் வசீகரன். இந்த பெயர் புலம் பெயர்ந்த சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கோடம்பாக்கத்தின் குட்டி குட்டி சேனாதிபதிகளுக்கும் கூட நெருக்கமான பெயர்.

கடந்த ஒன்பது வருடங்களாக நார்வே தமிழ் திரைப்பட விழாவை சிறப்பாக நடத்தி வரும் வசீகரன், 2019 ம் ஆண்டு தனது பத்தாவது நார்வே தமிழ் திரைப்பட விழாவை சீறும் சிறப்புமாக நடத்தப் போகிறார்.

வெறும் கண்துடைப்புக்காகவோ, கைதட்டல்களுக்காகவோ நடத்தப்படுகிற விழா அல்ல இது. இந்த நிகழ்வின் வீரியத்தை கடந்த கால அனுபவங்களின் வாயிலாக சொன்னால் இன்னும் எளிதாக இருக்கும். அண்மையில் தான் இயக்கிய ‘திருமணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் இயக்குனர் சேரன்.

‘நான் நார்வேயில் நடைபெறும் குறும்பட போட்டி ஒன்றில் நடுவராக பங்கேற்று இருந்தேன். அப்போதுதான் ஒரு குறும்படத்தை பார்க்க நேர்ந்தது. சுற்றிலும் வீடோ, மக்கள் நடமாட்டமோ இல்லாத ஒரு மரத்தில் தூக்கு மாட்டிக் கொள்கிறான் ஒருவன். அந்த சடலத்தை பாதுகாக்க அனுப்படுகிறான் ஒரு போலீஸ்காரன். சுமார் அரைமணி நேரம், அந்த பிணமும் போலீஸ்காரனும் மட்டும்தான்.

தன் திறமைமிக்க நடிப்பால் அந்த அரைமணி நேரத்தையும் தக்கவைத்தார் ஒரு நடிகர். அவர்தான் விஜய் சேதுபதி. அப்போது அவர் பெரிய நடிகர் இல்லை. அவர் நடித்த எந்த படமும் வெளியாகவும் இல்லை. நான் தர வேண்டிய எல்லா மார்க்குகளையும் அந்த ஒரு படத்திற்கே கொடுத்தேன். அந்த நினைவுகளை இப்போதும் தன் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி என்றார். அப்படியொரு விழாவை நடத்தி, சேரனை அழைத்திருந்தவர்தான் மிஸ்டர் வசீகரன்.

தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த கலைஞனை அன்றே தன் அரங்கத்தில் பெருமை படுத்திய விருதுதான் வசீகரனின் நார்வே தமிழ் திரைப்பட விருது.

நார்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற “தமிழர் விருதுகள்” தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாது சர்வதேச திரைப்படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. சர்வதேச திரைத் திறமையாளர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.

கடந்த 9 வருடங்களாக தமிழ் சினிமாத் துறையில் சாதித்தவர்கள், தமிழ்நாட்டில் வாழும் கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள், உலகம் முழுவதும் வாழும் தமிழ் கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், சர்வதேச மொழி பேசும் திரைப்படங்கள் என அனைத்துக்கும் தமிழர் விருதுகள் வழங்கி வருவதாக கூறுகிறார் வசீகரன்.

அடுத்த ஆண்டில் இருந்து இவற்றோடு 10 சிறந்த “சாதனைத் தமிழர்கள்” என்ற விருதினையும் வழங்கி கௌரவிக்க இருக்கின்றோம். இது புலம்பெயர்ந்த எமது தமிழர்களின் புதிய பாதை ! எமது வளர்ச்சியில் அடுத்த கட்டமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் சினிமா துறை தவிர்ந்த, ஏனைய துறைகளில் தனித்துவமாக சாதித்து, தடம் பதித்த தமிழர்களை இனம்கண்டு, பாராட்டி, மதிப்பளிக்க இருக்கின்றோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஐந்து கண்டங்களில் பத்து நாடுகளைத் தெரிவு செய்து, பத்து சாதனையாளர்களுக்கு “சாதனைத் தமிழர்” என்ற சிறந்த “தமிழர் விருதுகளை” வழங்கி, மதிப்பளிக்கும் பணியினை செய்யவிருக்கின்றோம்.

தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச் சொல்லி, கலை, பண்பாடு, வரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி, நெருக்கிய தொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா தொடர்ந்தும் வளர்த்து வருகின்றது. நோர்வேயிய அரசின், ஒஸ்லோ, லோரன்ஸ்கூ நகரசபைகளின் மிகப் பெரிய அங்கீகாரத்தினை பெற்று சிறப்பான விழாவாக உருவெடுத்துள்ளது.

2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 20 அதி சிறந்த திரைப்படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருப்பது, எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. தமிழ்ப் படங்களின் உயர்ந்து வரும் தரம் மற்றும் மக்களின் வாழ்க்கை நெறிமுறையில் தமிழசினிமா ஆற்றும் வகிபாகம் அளப்பெரியது என்று நம்புகின்றோம். நான்கு நாட்கள் உயர்ந்த நாட்டில் ஒரே கூரையின் கீழே ஒன்றிணைவோம் வாருங்கள் என்று அழைக்கிறார் வசீகரன்.

நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் நான்கு நாட்கள் – நிகழ்ச்சி நிரல்:

நாள் 1: 25.04.2019 வியாழக்கிழமை நேரம்: 17.00 மணி (Rommen Scene)

குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் திரையிடல்

நாள் 2: 26.04.2019 வெள்ளிக்கிழமை நேரம்: 17.00 மணி (Rommen Scene)

குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் திரையிடல்

நாள் 3: 27.04.2019 சனிக்கிழமை நேரம்: 17.00 மணி (Lillestrøm Kultursenter)

“தமிழர் விருது” வழங்கும் விழாவுடன் நள்ளிரவுச் சூரியன் கலைமாலை.

நாள்: 4: 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை நேரம்: 13.00 மணி (Utsikten Selskaplokale)

மதிய உணவுடன், கலந்துரையாடல், விருந்தினர்கள் சந்திப்பு – சர்வதேச திரைப்படங்கள் திரையிடல்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொங்கலுக்கு அஜீத்! தீபாவளிக்கு விஜய்!!

Close