பசங்க 2 விமர்சனம்

பசங்களை கசங்க விடுகிற கல்விக் கொள்கை மீது ஓங்கி அடித்திருக்கிறார் பாண்டிராஜ். ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்! படமெங்கும் பலூன்களை பறக்க விட்டதைப்போல குழந்தைகள்! அவர்களின் குறும்புகள்! ‘புத்தக மூட்டைக்குள் பூக்களை அடைக்காதீங்க’ என்கிற லட்சிய முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் டைரக்டர். எத்தனை குடும்பங்கள் இவர் பின்னே செல்லப் போகிறதோ? வாழ்க பாண்டிராஜ்.

இரண்டு தம்பதிகள். வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் அவர்களுக்கு தங்கள் வீட்டு சுட்டிக்குழந்தையால் பிரச்சனை பிரச்சனை எந்நேரமும் பிரச்சனை. எந்த பள்ளிக்குப் போனாலும், நாலே வாரம்தான். பொறுக்க முடியாமல் “டிசி வாங்கிட்டு போயிருங்க” என்கிறது பள்ளி நிர்வாகம். அப்படியொரு பிள்ளையை வைத்துக் கொண்டு தொல்லை தாங்க முடியாமல் துவளும் பெற்றோர், இருவரையும் ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள். அதற்கப்புறமும் நிம்மதியானால்தானே? ஹாஸ்டல் நிர்வாகமும் இவர்களை சமாளிக்க முடியாதென அனுப்பி விட, அந்த நேரத்தில்தான் ‘என்ட்ரி’ கொடுக்கிறார்கள் குழந்தை மருத்துவர் சூர்யாவும், அவரது மனைவி அமலாபாலும்! என்ன நடக்கிறது என்பது செகன்ட் ஹாஃப்!

படத்தில் லீட் ரோல் செய்திருக்கும் கவின், நயனா, அபிமான் மட்டுமல்ல. கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் குழந்தை கூட, நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் அவ்வளவு யதார்த்தமாக ஒத்துழைத்திருக்கிறது. அதுவும் கவின் நயனா குறும்புகளை நினைத்து நினைத்து மயங்கலாம். இன்டர்வியூவில் நயனா ஒரு கதை சொல்கிறாளே… அழகு! இராமயணக் கதைக்குள் ஸ்பைடர் மேன், டோரா என்று யார் யாரோ வருகிறார்கள். அவளது அற்புதமான அந்த உலகத்தின் மீது, புத்தகப் பையையும் மார்க்கையும் எறிகிறார்களே என்கிற கவலையே வந்துவிடுகிறது நமக்கு. அதே நயனாதான் கிளைமாக்சை தாங்கிப்பிடிக்கிற குழந்தையும். அதற்காக மண்டையை பிய்த்துக் கொண்டு சீனை திணிக்காமல் அதன் போக்கில் விட்டுவிடுகிற பாண்டிராஜுக்கும் ஒரு பாராட்டு.

போர்டில் எழுதப்பட்டிருக்கும் கணக்கு சமன்பாடுகள், கவினை பார்த்து சிரிக்க… “என்னையா பார்த்து சிரிக்கிறே?” என்று அவன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஓடுவதும், தெருவில் சாவுக் குத்து கேட்டால், தன்னையறியாமல் ஆடுவதுமாக கலக்குகிறான்!

கார்த்திக்- பிந்துமாதவி ஒரு தம்பதியாகவும், முனிஸ்காந்த்- வித்யா இன்னொரு தம்பதிகளாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோடிகளில் முனிஸ் தம்பதிக்கு சற்று கூடுதல் மார்க்! அதிலும் திருட்டு பழக்கத்தை வைத்துக் கொண்டு அதை விடவும் முடியாமல், தொடரவும் சகிக்காமல் போராடும் முனிஸ், அவரும் ஒரு குழந்தை போலவே தெரிகிறார் நம் கண்களுக்கு.

முதல் பாதியில் யதார்த்தமாக நகரும் கதை, சூர்யா அமலாபால் உள்ளே வந்ததும் கொஞ்சம் சினிமாவை பூசிக் கொண்டதை தவிர்த்திருக்கலாமோ பாண்டிராஜ்? சூர்யாவும் தேவைக்கு அதிகமாகவே நடித்துவிட்டாரோ? இருந்தாலும் அவரது ‘குழந்தை கவர்தல்’ எபிசோட் படம் பார்க்க வரும் குழந்தைகளை கவரக்கூடும்.

பெரிய பெரிய நடிகர்களையெல்லாம் ஜஸ்ட் லைக் தட், திரையில் நிமிஷ நேரம் மட்டும் நடமாட விட்டிருக்கிறார் டைரக்டர். வருகிற அந்த கொஞ்ச நேரத்தில் ஸ்கோர் அடிக்கிறார்கள் அவர்களும். குறிப்பாக சமுத்திரக்கனி. “சார்… ஒரு கவர்மென்ட் ஸ்கூல் வாத்தியாரா இருந்துகிட்டு நீங்களே தனியார் ஸ்கூல்ல உங்க பிள்ளைகளை சேர்த்தா, கவர்மென்ட் ஸ்கூலை யார் நம்புவா?” என்பதெல்லாம் நெத்தியடி டயலாக்ஸ். “எல்லாரும் ஃபர்ஸ்ட் மார்க்கணும்னு வாங்கணும்னு இந்த ஸ்கூலுக்கு வந்தாலும், ஒரு பர்ஸ்ட் மார்க்தானேப்பா…” என்று குழந்தை கேட்கும் கேள்விக்கு பதிலேது? ‘‘அவன் கெட்ட வார்த்தை பேசல. கேட்ட வார்த்தையதான் பேசுறான்…’’ இப்படி படம் முழுக்க ஆரோக்கியமான வசனங்களால் விளையாடியிருக்கிறார் பாண்டிராஜ்!

இருபது வருஷங்களுக்கு முன் பள்ளிகள் எப்படியிருந்தன. ஆசிரியர்கள் எப்படியிருந்தார்கள் என்பதற்கு படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக் ஓட்டப்பந்தயம், அருமையான உதாரணம்.

பாலசுப்ரமெணியெம் ஒளிப்பதிவு செயற்கை பூசிக்கொள்ளாமல் நம்மை திரைக்குள்ளேயே இழுத்துக் கொள்கிறது. அரோல் கரோலி பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கிறார். பிசாசு படத்தில் ஜமாய்த்த அவருக்கே உரித்தான அந்த வயலின் பிட், இந்த படத்திலும் ஆங்காங்கே தொடர்வது அழகு.

குறைந்த டாக்டர் ஃபீஸ்! வாழ்நாளுக்கு தேவையான வைத்தியம்!! – பசங்க 2

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Azhagu Kutti Chellam Official Theatrical Trailer

Close