பென்சில் விமர்சனம்
வகுப்பறைகளில் பாடம் இருக்கிறதோ, இல்லையோ? ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு ‘படம்’ இருக்கிறது. நல்ல நடிகர்களும், நல்ல இயக்குனர்களும், நல்ல தயாரிப்பாளர்களும் கிடைத்தால், பள்ளிக்கூடம், பசங்க, சாட்டை என்று மனசுக்குள் கான்கிரீட் வலுவோடு உட்கார்ந்து கொள்கிற படங்கள் அமையும். இல்லையென்றால் என்னாகும்? இந்த கேள்விக்கு விடை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட படம்தான் பென்சில். அழுத்தமில்லாததாகவும், அழிந்து போகக்கூடியதும்தான் பென்சிலின் தன்மை. பொருத்தமாகதான் வைத்திருக்கிறார்கள் தலைப்பை!
பளபள ஸ்கூல், பார்ஷ் மாணவர்கள் எனும்போதே, இந்த கதை நமக்கு இல்லை என்ற மனநிலைக்கு ஆளாகிவிடுகிறான் ரசிகன். அதற்கப்புறம் அவர்கள் கே.பி.சுந்தராம்பாளை வைச்சு கச்சேரி நடத்தினாலும், காபரே பீலிங்தான் வந்து தொலையும். அது பிரமாதமாக வந்திருக்கிறது படத்தில்.
செவ்வாய் கிரகத்தில் மனுஷன் வாழலாமா என்று ஆராய்ச்சி செய்கிற மாணவன்தான் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். அதே ஸ்கூலில் திருட்டு கேமிரா வைத்து நீச்சல் குளத்தில் குளிக்கிறவர்களை படம் பிடித்து ஆராய்கிறது இன்னொரு உலக்கை. அவர்தான் புதுமுகம் ஷாரிக் ஹசன். லவ்வா… இல்ல வேற ஏதாவதா? அதை மனம் விட்டு சொல்லுவாரா, சொல்ல மாட்டாரா? என்றெல்லாம் குழப்பி வைக்கிற மற்றொரு மாணவியாக ஸ்ரீதிவ்யா. ஒரு கட்டத்தில் ஸ்கூலில் ரவுடியாக திரியும் ஹசன் வகுப்பறையில் வைத்தே கொல்லப்படுகிறார். கொலைப்பழி ஜிவி பிரகாஷ் மீது விழுமோ என்று அச்சம் ஏற்படுத்துகிறது சூழ்நிலை. பேசிக்கலாகவே துப்பறியும் கதைகளை படிக்கிற ஸ்ரீதிவ்யாவுக்கு, சங்கடத்தில் இருக்கிற ஜி.வி.பிரகாஷை காப்பாற்ற வேண்டிய கடமை வருகிறது. இருவரும் சேர்ந்து நிஜ கொலைகாரனை கண்டுபிடிப்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி ஜவ்வு.
படம் முடிந்து வெளியே வரும்போது, அவரவர் சர்டிபிகேட்டை கிழித்துப் போட வேண்டும் என்று நினைக்கிறளவுக்கு அபாயம் இருப்பதால், ரசிகர்கள் நாலு நாள் கழித்தே வீட்டுக்கு செல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜிவிபிரகாஷ் அறிமுகமான முதல் படம். தட்டுத்தடுமாறி இப்போதுதான் வந்திருக்கிறது. ஒரே மூச்சில் திறமையை காட்டிவிட வேண்டும் என்று தவியாய் தவித்திருக்கிறார் ஹீரோ. பால் பொங்கி பக்கத்து பாத்திரம் நிறைகிற அளவுக்கு நடித்திருப்பதால், கண்ட்ரோல் பட்டனை தட்டியே ஆக வேண்டிய நிலையிலிருக்கிறது அந்த வேகம்.
இந்த படத்தின் ஒரே ஆறுதல் ஸ்ரீதிவ்யாதான். அவர் ஸ்கிரீனுக்குள் என்ட்ரி ஆனாலே ஏசி டபுள் குளிரை கொட்டுகிறது. இவரும் ஜி.வி பிரகாஷும் ஹசன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்துவிடுகிறார்கள். முகத்தில் ஒரு பதற்றம் வேண்டுமே? பிணத்தை வைத்துக் கொண்டு புன் சிரிப்போடு லெக்சர் எடுக்கிறார் ஸ்ரீதிவ்யா. அதுவரைக்கும் கூட பரவாயில்லாமல் போய் கொண்டிருந்த படம், அங்கே விழுகிறது பிணமாக!
அதற்கப்புறம் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ய வரும் ஊர்வசி, அந்த ஏரியாவை சுற்றிப்பார்க்க கிளம்பி ஆறு நாள் ஆன பின்பும் நடந்து கொண்டேயிருக்க, முன் வரிசை பின் வரிசையெல்லாம் குப்புற விழுந்து கொட்டாவியே விட ஆரம்பித்துவிடுகிறது. ஆவிட் எடிட்டிங்கில் மவுசை தொலைத்தாரோ என்னவோ எடிட்டர் ஆன்ட்டனி?
படத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்க எத்தனையோ சுச்சுவேஷன்களும், அதற்கான வி.டி.வி கணேஷ்களும், டி.பி.கஜேந்திரனும் இருந்தும் ஒன்றுமே நடக்கவில்லை. சுத்தம்!
ஒரு கொலையை யார் செய்திருப்பார்கள் என்று ஆடியன்சை சந்தேகப்பட வைத்து, சுற்றியடிக்கிற விதத்தில் மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறார் டைரக்டர் மணி நாகராஜ்.
திருமுருகன் சுஜாவாருணி ரொமான்ஸ் அளவோடு காட்டப்பட்டதால் நிம்மதி.
இசை ஜி.வி.பிரகாஷ். மியூசிக் ஒரு பக்கமும் லிரிக் இன்னொரு பக்கமுமாக கயிறு இழுக்கும் போட்டி நடத்தியிருக்கிறது. கதாநாயகி பெயர் ப்ரியா. ஜி.வி.பிரகாஷ் ஜப்பானில் நின்று கொண்டு கோக்க்க்க்க்க்கில்ல்லா கோக்க்க்க்க்க்கில்ல்லா என்று குதிக்கிறார். எதையாவது எழுதி நிரப்ப வேண்டும். அது கோகிலாவோ, கோக்க்கில்ல்ல்லாவோ?
நல்லவேளை… கோபி அமர்நாத்தின் கேமிரா அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர விடாமல் ரசிக்க வைக்கிறது.
பென்சில்? இரண்டு பக்கமும் ரப்பர்!
-ஆர்.எஸ்.அந்தணன்
பின் குறிப்பு- இந்த படத்தை திருட்டு விசிடி எடுத்துவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஐயோ பாவம் திருட்டுவிசிடிக் காரர்கள்.