பொன்மகள் வந்தாள் – விமர்சனம்

ஓடிவந்து ஹெல்ப் பண்ணா எம்.ஜி.ஆரு…! ஓயாம அழுதா சிவாஜீ…! வில்லத்தனமா சிரிச்சா நம்பியாரு…! வெள்ளந்தியா சிரிச்சா சிவகுமாருன்னு வகை பிரிச்சு வச்சுருக்கு ஜனங்க மனசு. இதுல லேட்டஸ்ட்டா இணைந்தவர்தான் ஜோதிகா! கண்டிப்பான டீச்சர், கணவனே வியக்குற ஆர்.ஜேன்னு பெண்கள் ஏரியாவுல புது புதுக் கொடிகளை ஏற்றி வருவதுதான் ஜோ-வின் ரீ என்ட்ரி ஸ்டைல்! ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் லாயர்!

பதினைந்து வருஷங்கள் கழித்து ஒரு வழக்கை தூசு தட்டி எடுக்கும் ஜோ போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவள் குற்றவாளியல்ல, நிராபராதி என்று நிரூபிக்கிறார். சுட்டுக் கொல்லப்பட்டவருக்கும் ஜோதிகாவுக்கும் என்ன தொடர்பு? நிஜ வில்லன் யார்? இதெல்லாம்தான் பொ.ம.வ!

கொலை, விசாரணை, வழக்கு, வாதம்… என்று நீதிமன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் சுற்றி வரும் கதைகளில் வண்டி வண்டியாக ஸ்கிரிப்ட் பேப்பர்கள்தான் இருக்கும். இந்த படத்திலும் அப்படியே. பக்கம் பக்கமாக கொடுக்கப்பட்ட வசனங்களை கண்ணீரும் கம்பலையும் கலந்து கம்பீரமாக பேசுகிற ஜோதிகாவுக்கு அவ்வளவு தமிழ் வார்த்தைகளும் சவால் சவால்! மணிரத்னம் படம் மாதிரி மளக் மளக் என முடியாமல், இழு இழுவென இழுத்தால், ஐயோ பாவம் அவர்தான் என்ன செய்வார்? ஆனாலும் பிரித்து மேய்ந்திருக்கிறார் ஜோ. தன் ஒவ்வொரு படத்திலும் சுமார் ஐந்து நிமிடம் நீளும் ஒரு குளோஸ்-அப் எமோஷனலை இந்தப்படத்திலும் டீல் பண்ணியிருக்கிறார். தியேட்டராக இருந்தால் கைதட்டல்கள் குவிந்திருக்கும். (OTT ன் ஒரே கஷ்டம் இதுதான்)

படத்தில் பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று பல அனுபவஸ்தர்கள் இருந்தாலும், சுவாரஸ்யத்தை ஸ்வாகா பண்ணுகிறார்கள் அத்தனை பேரும். நல்லவேளை… பார்த்திபனின் போட்டு வாங்குகிற டயலாக்குகள் மட்டும் ரசனை. ஆனால் அது கண்டிப்பான நீதிமன்றமா, இல்ல பஞ்சாயத்து போர்டு ஆபிசா என்று குழம்புகிற அளவுக்கு நீதித்துறையை மேலோட்டமாக கையாளும் இவர்களின் போக்கு, சித்தன் போக்கு சிவன் போக்கு மட்டுமல்ல, கொடூரமான ரத்தப் போக்கு!

ஒரு ரணகள பிளாஷ்பேக் இருக்கப் போகிறது. அது எப்போது வரும் என்று காத்திருக்க வைத்து அந்த பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுகிறார் இயக்குனர். நிஜமாகவே வலியேற்படுத்துகிற ஏரியா. க்ளைமாக்சில் யாருமே யூகிக்க முடியாத ஒரு திருப்பத்தை தர முற்படும் இயக்குனர் ப்ரடிரிக், அந்த ட்விஸ்ட்டில் மட்டும் கைதட்ட வைக்கிறார்.

வெறும் வாத பிரதிவாதங்களை மட்டுமே வைத்துக்கொண்டு எவிடன்ஸ்சை கோட்டை விடுகிற கோர்ட், கடைசி நிமிஷம் வரைக்கும் தமாஷ் பண்ணுகிறது.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், ராம்ஜியின் அழகூட்டும் ஒளிப்பதிவும் படத்தை முட்டுக் கொடுக்க உதவியிருக்கிறது.

தியேட்டர்களை பகைத்துக் கொண்டு ஆன் லைனில் நேரடியாக வெளியான முதல் தமிழ்ப்படம்! தப்பித்தது யார் என்பது தனி சப்ஜெக்ட்!

பொன்மகள் வந்தாள்- குறுந்திரையில் ஒரு குறுவை சாகுபடி!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொல்லாத ஆசை புகையாப் போச்சு!

Close