சந்தானம் பற்றிய கருத்து! பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் பல்டி!
‘லத்திகா’ படம் திரைக்கு வரும்போதெல்லாம், குவார்ட்டரையும் கோழி பிரியாணியையும் கொடுத்து கூட்டத்தை சேர்த்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். இப்படி சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டிருந்தவரை, ஒரு நடிகராக மாற்றி அவர் திரைக்கு வந்தால் கூலி வாங்காமல் கைதட்டுகிற அளவுக்கு ரசிகர்களை அமைத்துக் கொடுத்தவரே சந்தானம்தான். அவர் மட்டும் ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தில் பவருக்கு வாய்ப்பு கொடுக்காமலிருந்தால், இன்னும் குவார்ட்டரையும் கோழி பிரியாணியையும் சுமந்து கொண்டு திரிந்திருப்பார் மிஸ்டர் பவர்.
சினிமாவில் சம்பாதிக்க ஆரம்பித்தபின், அவர் பேசியது என்ன தெரியுமா? “எனக்கு வர்ற வாய்ப்புகளை சந்தானம் தடுக்கிறார்” என்றுதான்!
அதற்கப்புறம் பல படங்களில் பவர் இருந்தார். ஐயோ பாவம். சிரிப்புதான் வரவில்லை ஒருவருக்கும். ஐயோ பாவம். நிஜம் இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது சீனிவாசனுக்கு. சந்தானம் நடிக்கும் படங்களில் சுத்தமாக ஓரங்கட்டப்பட்ட இவருக்கு மீண்டும் வாய்ப்பு வேண்டும் என்றால், கொள்கையை மாற்றிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
‘சைவ கோமாளி’ என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கும் பவர் சீனிவாசன், அந்த விழா மேடையில் சந்தானமே கதி என்று சரணடைந்தார். “லத்திகா என்ற 100 நாள் படத்தை (?) எடுத்துட்டு வீட்ல இருந்தப்ப என்னை தேடி வந்து வாய்ப்பு கொடுத்தவர் சந்தானம்தான். என்னோட அன்பு தம்பி அவர். கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் நடிச்சதை என்னால் மறக்கவே முடியாது” என்றெல்லாம் பிளேட்டை திருப்பிப் போட ஆரம்பித்துவிட்டார்.
இதெல்லாம் சந்தானம் காதுக்கு போயிருக்குமா? போனாலும், மீண்டும் பவரை அழைப்பாரா? சந்தேகம்தான்!