இதுக்கு சம்பளம் வாங்கியிருக்கக் கூடாது! உருகிய கானா பாலா
‘சைவக் கோமாளி’ என்றொரு படம். தரணியிடம் பல படங்களில் பணியாற்றிய சுரேஷ் சீதாராம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஹீரோ? நம்ம மொட்டை ராஜேந்திரன்! “இந்தப்படத்தில் ஒரு காட்சி கூட சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது போல இருக்காது” என்று அதிரடியான விஷயத்தை சொல்லி பத்திரிகையாளர் சந்திப்பை ஆரம்பித்து வைத்தார் சுரேஷ் சீதாராம். அதை நிரூபிப்பது போல இருந்தது கானா பாலாவின் பேச்சு.
“நான் சரக்கடிக்க மாட்டேன். லவ் பெயிலியரும் கிடையாது எனக்கு. ஆனா என்னை தேடி வர்ற பாட்டெல்லாம் இப்படிதான் வருது. என்ன பண்ணுறது? நானும் எழுதி பாடிகிட்டுதான் வர்றேன். இந்தப்படத்தில் 108 ஆம்புலன்ஸ் பற்றி ஒரு பாடல் எழுதி பாடணும்னு கேட்டாங்க. ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு. அம்மா ஆஸ்பிடல் வந்திருச்சு இறங்கு’ன்னு பல்லவியோட ஆரம்பிச்சு 108 ஆம்புலன்ஸ் சேவை பற்றி எழுதினேன்”.
“நானும் தமிழ்நாடு முழுக்க எல்லா ஊர்லேயும் போய் கச்சேரி பண்றேன். முதல்ல அவங்ககிட்ட இந்த பாடலை பாடிட்டுதான் மற்ற பாடல்களை பாடவே ஆரம்பிக்கிறேன். ஏன்னா… ஆம்புலன்ஸ் சேவைங்கிறது அவ்வளவு முக்கியமான சேவை. இன்னைக்கு நிறைய பேர் ஆம்புலன்ஸ் போனா, உள்ள யாரு இருக்காங்கன்னு எட்டிப் பார்க்குறாங்க. அப்படியெல்லாம் செய்யாதீங்க. சில பேர், “காலியாதானே போவுது? எதுக்கு சவுண்ட் கொடுத்துகிட்டே போறான்”னு எரிச்சல் ஆவுறாங்க. ஒரு உயிரை குறிப்பிட்ட டயத்துல போய் ஏத்திட்டு வர்றதுதான் முக்கியம். அதனால் பேஷன்ட்டோட வரும்போதுதான் சைரன் போடணும்னு அவசியம் இல்ல” என்று யதார்த்தமாக பேசிக் கொண்டே போனார் கானா பாலா.
கடைசியாக மோடியையும் ஒரு மோது மோதிவிட்டு போனார் கானா.
“நான் இந்த பாட்டுக்கு காசு பணம் வாங்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனால், இப்ப நாடு இருக்கிற சூழ்நிலையில நமக்கும் டைட். என்ன பண்றது?” என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையில்!
https://youtu.be/Te12CuWkPjk