பெட் அனிமல் ஆனார் பிரேம்ஜி? லொள் லொள் ‘லொள்’ளு!
நாள் முழுக்க நாயா சுத்த சொன்னாலும், நாய் என்னய்யா நாய்? பேயா கூட சுத்துவேன் என்பவர்தான் பிரேம்ஜி. என்ன ஒண்ணு… மாலை நேரமானால் சரக்கு ஞாபகம் வந்துவிடும். சரக்குக்கும் தொந்தரவு இல்லாமல், படத்திற்கும் பிரச்சனையில்லாமல் பிரேம்ஜியை நாயாக்கிவிட்டார்கள் ஒரு படத்தில். என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே… என்று அலுத்துக் கொண்ட பிரேம்ஜி, அதுகுறித்து விளக்கம் கொடுத்தார். ஆமாம்… கன்பார்ம். பிரேம்ஜிக்கு நாய் வேஷம் போட்டுட்டாங்க!
அரவிந்த் ஸ்ரீதர் இயக்கும் ‘சிம்பா’ என்ற படத்தில் நாயாக நடிக்கிறார் பிரேம்ஜி. பல இடங்களில் நாம பார்த்திருப்போம். ஒரு விலங்கு பொம்மைக்குள் இருந்து யாராவது ஒருவர் வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பார். அப்பல்லாம் சர்வ சாதரணமா கடந்து போன எனக்கு இப்போ அவங்களை பார்த்தால் ஒரு பரிதாபம் வரும். ஏன்னா என்னையும் அப்படிதான் பொம்மைக்குள் இறக்கிவிட்டுட்டாங்க. முகம் மட்டும்தான் பிரேம்ஜி. மற்றதெல்லாம் நாய் என்கிறார் பிரேம்ஜி.
இது என்னய்யா புது கான்செப்ட்? வேறொன்றுமில்லை. படத்தின் ஹீரோ பரத் சிறுவயதில் தாய் தந்தையை இழந்துவிடுவார். தனிமையில் இருக்கும் அவரை பரத்தின் தாத்தாவே வளர்ப்பார். திடீரென அவரும் இறந்துவிட, தனிமை உலகத்தில் தவிக்கும் பரத், கஞ்சா அடிக்க ஆரம்பித்துவிடுவார். ஒரு கட்டத்தில் அவரே கற்பனையாக யோசித்துக் கொள்ளும் எல்லாம் நிஜத்தில் அவர் முன் வந்துவிடும். அப்படி தாத்தா வளர்த்த நாய் ஒன்று, பிற்பாடு தாத்தாவாகவே வரும். அவர்தான் பிரேம்ஜி. டூ இன் ஒன்? ஆமாம்… தாத்தாவும் இவரே. நாயும் இவரே.
காதல், பாசம், சென்ட்டிமென்ட் என்று மும்முனை வெயிட் இருந்தாலும், படம் என்னவோ காமெடி வகையை சேர்ந்தது! வெகு காலம் கழித்து பரத் ஹீரோவாக நடித்து வெளிவரப்போகும் படம் இது. பானுமெஹ்ரா, சுவாதி டிக்சித் என்று இரண்டு கொழுக் மொழுக் மெழுகு பெண்களையும் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் நாயை கட்டிப்பிடித்துக் கொஞ்சிக் கொண்டேயிருப்பாராம். அதாவது பிரேம்ஜியை!
இப்படியெல்லாம் வாய்ப்பு கிடைச்சா, நாய் என்ன? அதற்கும் கீழே கூட ‘எற்………..றங்கி’ நடிப்பார் பிரேம்ஜி!