நடிப்புக்கு முழுக்கு! ப்ரியா ஆனந்தின் எண்ணத்தை மாற்றிய இயக்குனர்.
“நடிப்புக்கு முழுக்கு” என்ற முடிவை ப்ரியா ஆனந்த் எடுத்ததன் பின்னணியில் எந்தவித வியப்பும் இருக்க போவதில்லை. சமீபத்தில் வந்த தோல்விகள் அவரை அப்படியொரு எண்ணத்தை நோக்கி தள்ளியிருக்கலாம். இவருக்கு பெரிய படங்கள் வருவதில்லை. வருகிற மிடில் கிளாஸ் படங்களும் ஓடுவதில்லை. இவரும் கவுதம் கார்த்திக்கும் நடித்து கடைசியாக வந்த ‘முத்துராமலிங்கம்’ படம் தந்த ஒரு அனுபவமே போதும். அவரை இப்படி நினைக்க வைக்க.
“போதும்டா சாமீய் உங்க சங்காத்யம்” என்று சொந்த ஊருக்கு பேக்கப் ஆகவிருந்த ப்ரியா ஆனந்திடம் கடைசி நேரத்தில் கதை சொன்னாராம் த.செ.ஞானவேல். அதுதான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம். மிடில் பெஞ்ச் பசங்களின் கதை. இதில் முதல் பெஞ்ச் மாணவியான ப்ரியா எப்படி மிடில் பெஞ்ச் பையன் ஒருவனிடம் காதல் வயப்படுகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறாராம் ஞானவேல்.
“இந்தக் கதையை கேட்டதும் சினிமாவுக்கு முழுக்கு போடுகிற எண்ணத்தை தவிர்த்துவிட்டேன். கூட்டத்தில் ஒருத்தன் எனக்கு நல்லப் பெயரை வாங்கித்தரும்” என்றார் ப்ரியா ஆனந்த். பொதுவாக பட பிரமோஷன்கள் என்றால், சாமர்த்தியமாக தவிர்த்துவிடுகிற வழக்கம் பல ஹீரோயின்களுக்கு இருக்கிறது. ஆனால் இவர் இந்த படத்தின் பிரஸ்மீட் இருக்கிறது என்றதும் மும்பையிலிருந்து பிளைட் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.
சற்றே பூசியது போலிருக்கும் ப்ரியா, படத்திலும் அதே பப்ளி கன்னங்களுடன்தான் நடித்திருக்கிறார். இவரை ஒரு மாணவியாக நினைப்பதற்கு மனசு கஷ்டப்பட்டாலும், த.செ.ஞானவேலின் கதை அந்த மனக் கஷ்டத்தை போக்கும் என்று நம்புவோமாக!
பின்குறிப்பு- இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் நடித்து ஆறேழு படங்கள் வந்தாச்சு. ஒன்றும் ஓடிய மாதிரி தெரியவில்லை. அப்படியும் பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வருகிறதென்றால், அது என்ன ரகசியமாக இருக்கும்?