பதற விட்ட பப்ளிக் ஸ்டார்! அடுக்கடுக்கா அஞ்சு படமாம்!

கடை கோடி தமிழனும் தன் தொடையை தட்டி ‘தொலைச்சுப்புடுவேன் பார்த்துக்கோ..’ என்று மிரட்டுகிற அளவுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் தந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஸ்டண்ட், நடிப்பு, ஸ்டைல், என்று நாலாபக்கமும் நின்று அடித்த அவரது சூப்பர் ஸ்டார் சீட்டுக்குதான் இதே கோடம்பாக்கத்தில் தினந்தோறும் போட்டி.

‘போட்டியாவது ஒண்ணாவது? நம்ம சீட்டு நமக்குதான். ஒரு பய டச் பண்ண முடியாது எங்கள…’ என்கிற ‘முரட்டு பீஸ்’களும் இங்கே நிறைய உண்டு. அவர்களில் பவர் ஸ்டார், கோல்டன் ஸ்டார், வின் ஸ்டார், கன் ஸ்டார், அனிமல் ஸ்டார் என்று சிலரை நமக்கு எக்குத்தப்பாக அடையாளம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இவ்வளவு கூட்டத்திலும் தனி ஸ்டாராக ஒருவர் முன் வந்து முறுவலிக்கிறார். அவர்தான் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!

“நீங்க சொல்ற எல்லா ஸ்டாரையும் நானும் கவனிச்சுட்டுதான் இருக்கேன். ஆனால் என் நோக்கம் வேறு. ரூட் வேறு. எதையாவது வித்தை காட்டி ஜனங்களை கவரணும்னு வரல. நிஜமா அர்ப்பணிப்போட நடிச்சு சினிமாவுல ஒரு இடத்தை பிடிக்கணும். அதுக்காக நல்ல நல்ல கதைகளை கேட்க ஆரம்பிச்சுருக்கேன். நடிப்பு பயிற்சி எடுத்துட்டு வர்றேன். இன்னும் ரெண்டு வருஷத்தில், நானும் என் தனி திறமையால் ஒரு இடத்த பிடிச்சுருக்கணும். அதை நோக்கிதான் என்னோட பயணம்…” என்று தெள்ளந்தெளிவாக பேசுகிறார்.

இவ்வளவு தெளிவா பேசுகிற துரை சுதாகருக்கு முதல் படத்திலேயே எதற்கு பட்டப் பெயர்? கேட்டால், கிறுகிறுக்கிற மாதிரி ஒரு பதிலடிக்கிறார் மனுஷன்.

சார்… நாம ஷுட்டிங் ஸ்பாட்ல தொழிலாளர்களிடமும், வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களிடமும் அன்பா அரவணைச்சு பேசினா, அவங்களே ஒரு பட்டப் பெயர் கொடுத்துடுறாங்க. அப்படி வந்ததுதான் ‘பப்ளிக் ஸ்டார்’ங்கற பட்டம். இது நல்லாயிருக்கேன்னு நினைச்ச டைரக்டரும் புரட்யூசரும் போஸ்டர் மற்றும் பப்ளிசிடி ஏரியாவுல அந்த பட்டத்தை யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் என்ன பண்றது? விட்டுட்டேன்.

“என் முதல் ‘தப்பாட்டம்’ நல்லா போயிட்டு இருக்கு. அடுத்து தொடர்ச்சியா அஞ்சு படம் கமிட்டாகிட்டேன். அதுல மூணு படம் ஷுட்டிங் முடிஞ்சுருச்சு. என்னோட வளர்ச்சியை நீங்களும் பார்க்கதான் போறீங்க” என்றார்.

நாங்க நல்லா கேட்கிறோமோ இல்லையோ… நீங்க நல்லா சொல்றீங்க பப்ளிக் ஸ்டார்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குஷ்புவே நமஹ 8 -ஸ்டான்லி ராஜன், குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்!

Close