குஷ்புவே நமஹ 8 -ஸ்டான்லி ராஜன், குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்!

தனக்கு திமுக மிக சரியான கட்சி என எண்ணி அதில் 2010ல் ஒரு மே மாதத்தில் இணைந்தார் குஷ்பூ, சூரிய கட்சியில் அந்த அழகு சூரியன் இணைந்தது. குஷ்பூ போன்ற வசீகர முகத்தின் தேவை திமுகவிற்கும் இருந்தது. திமுகவில் அவருக்கு பொறுப்புகள் கொடுக்கபட்டன. திமுக மேடை என்பது வெறும் முகத்தை காட்டிவிட்டு வரும் இடமல்ல, அங்கு நிறைய பேசவேண்டும், அதற்கு நிறைய வாசிக்க வேண்டும்

குஷ்பூ கடுமையாக வாசிக்க தொடங்கினார், எந்த கூட்டம் என்றாலும் அதற்கு அவரின் தயாரிப்பு மிக கடுமையானதாக இருந்தது. சில நேரம் நூலகங்களிலே அவரை காண முடிந்தது. அவரின் இயல்பான தைரியமான குணத்தினால் மேடையில் அவருக்கு சிக்கலே இல்லை, மிக அட்டகாசமாக அசத்தினார். அவரின் தைரியமான பேச்சுக்கு கூட்டம் கூடியது, நல்ல வரவேற்பும் இருந்தது.

“அம்மையார் ஜெயலலிதா” என ஜெயலலிதாவினை விமர்சித்தபொழுது தமிழகம் ஆர்ப்பரித்தது. இவ்வளவு தைரியமாக கலைஞரை தவிர யார் விமர்சிக்க முடியும்? என திமுகவினரே வியந்தார்கள்.

கட்சியில் தனக்கொரு இடத்தை பிடித்தார் குஷ்பூ, அவருக்கான வட்டம் பெரிதாகிகொண்டே சென்றது. திமுக தலமையும் அவரை ஊக்குவித்தது. சுதந்திரம் அடைந்து இந்நாள்வரை தமிழக அரசியல் அந்த கருணாநிதி எனும் ஒற்றைமனிதரை வைத்துதான் நடக்கும். ஒன்று அவரை ஆதரிக்கவேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் , இரண்டுமல்லாமல் வேறு ஒன்றும் தமிழகத்தில் சாத்தியமே இல்லை.

தமிழக அரசியலில் வெற்றிகொடி நாட்டியவர்கள் எல்லாம் ஒன்று அவர்முன் பணிந்து நின்றிருப்பார்கள் அல்லது அவரால் ஒதுக்கிவைக்கபட்டிருப்பார்கள். அவ்வளவு பெரும் அரசியல் அடையாளம் கலைஞர்

அந்த கருணாநிதி குஷ்பூவினை கட்சியில் சேர்த்து பெரும் பொறுப்புகளை கொடுக்க ஆரம்பித்தார் என்றால் குஷ்பூவிற்கு இருந்த மக்கள் அபிமானத்தை அவர் உணர்ந்திருந்தார். 2011 தேர்தலில் திமுகவின் பெரும் வலுவான பிரச்சார பீரங்கியாக மாறியிருந்தார் குஷ்பூ, பெரும் கூட்டம் அவருக்காக திரண்டது. பெரும் மாநாடுகள் போல அவரின் கூட்டம் இருந்தது.

தேர்தலில் ஏராளமான காரணங்களால் திமுக தோற்றிருந்தாலும், குஷ்பூவின் பிரச்சாரமும் அவரின் உழைப்பும், அவருக்காக கூடிய கூட்டமும் பெரும் செய்திகளாயின‌

ஒரு கட்டத்தில் திமுகவின் மகா முக்கியமான உரையினை ஆற்ற அவர் குஷ்பூவிற்கு வாய்ப்பு கொடுத்தபொழுதுதான் திமுகவில் குஷ்பூ வந்திருக்கும் உயரம் அனைவருக்கும் புரிந்தது

கட்சிக்கு வந்து வெகு சில காலமாக இருந்த பலரை ஓரம்கட்டி அந்த வாய்ப்பினை பெற்றார் குஷ்பூ

அதாவது திமுகவின் மிக பெரும் கொண்டாட்டதில் ஒன்று முப்பெரும் விழா. அண்ணா, பெரியார் பிறந்தநாள் திமுக தொடக்கவிழா என்ற மூன்றையும் சிறப்பிப்பார்கள், பெரும் விழா அது.

அந்த உரையினை ஆற்றத்தான் குஷ்பூவிற்கு வாய்ப்பு கிடைத்தது, திமுகவில் மிகபெரும் கவுரவம் அது. மகா அனுபவம் வாய்ந்த கலைஞர் அந்த அளவிற்கு குஷ்பூ திமுகவிற்கு உறுதுணையாக இருப்பார் என கணித்திருந்தார்.

குஷ்பூவின் இந்த பெரும் உயரம்தான் அவருக்கு கட்சிக்குள் சிலரின் முணுமுணுப்பினையும் ஏற்படுத்தியது. ஆனாலும் எதிர்ப்பிலே எங்கும் வளர்ந்தவர் குஷ்பூ, அதனால் அனாசயமாக எதிர்ப்புகளை தாண்டி அரசியலில் நின்றார். ஒரு பக்கம் கட்சி என்றாலும் மறுபக்கம் சினிமா தயாரிப்பு , சீரியல் என மிக பிசியாகவே இருந்தார் குஷ்பூ. ஒரு நொடியும் அவர் சும்மா இருக்கவில்லை. குஷ்பூவால் திமுக புதுபலம் பெற்றுகொண்டிருந்தது, 2ஜி ஈழம் போன்ற பல பிரச்சினைகளைகளுடன் திமுக ஓடிகொண்டிருந்த அந்த நேரத்தில் மறுபடி அதே கண்கள் குஷ்பூவினை நோக்கின

எந்த கண்கள்?

முன்பு கற்பு பற்றி பேசியதாக சொல்லி எல்லா நீதிமன்றத்திலும் நிறுத்திய அதே கண்கள்.

அந்த அளவு குஷ்பூ மீது அவர்களுக்கு தீரா கோபம் இருந்தது, அவர் திமுகவிற்கு வந்தபின் அது அதிகமானது அதனால் இப்படி அவமானபடுத்தி மகிழ்ந்தது அக்கொடிய கூட்டம் இம்முறை மிக மிக குதர்க்கமாக, கோணல் புத்தியாக , சீழ்பிடித்த சிந்தையாக யோசித்தார்கள். அறிவினை சுத்தமாக இழந்து குஷ்பூவினை அவமானபடுத்தவேண்டும் என்பதற்காகவே எழுதினார்கள்.

ஒரு முன்னணி வாரப் பத்திரிகை அந்த கயமைக்கு துணை சென்றது. இரண்டாம் மணியம்மை என‌ குஷ்பூ மீது சேறு வீசி மகிழ்ந்தது. திமுக பாசறை சலசலத்தது, பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. கொஞ்சமும் ஏற்கமுடியாத இந்த செய்தியினை எதிர்த்து தமிழகமே கண்டித்தது. குஷ்பூ கண்ணீர் விட்ட நேரமதுதான், அவரின் ரசிகர்களுக்கு நெஞ்சில் ரத்தம் வந்த நேரமும் அதுதான்.

யாருக்கு குரு இல்லை? இந்திரா காந்திக்கு இருந்தார்கள், ஜெயலலிதாவிற்கு இருந்தார்கள் அப்படி கலைஞரும் குஷ்பூவிற்கு குருவாகத்தான் இருந்தார். ஆனால் இவரை மட்டும் குறிவைத்து அவதூறு பரப்பியவர்களின் கொடூரம் குறுக்கு புத்தி எப்படிபட்டதாக இருக்கவேண்டும். பின் ஒருவழியாக அவற்றை கடந்துவந்தார் குஷ்பூ. கட்சிக்குள் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. கிட்டதட்ட பாஜகவில் சுஷ்மா சுவராஜ் போல திமுகவிற்கு பெரும் தூணாக மாறியிருந்தார் குஷ்பூ.

விரைவில் அவர் மேல்சபை எம்பி ஆகலாம் போன்றதொரு நிலை இருந்தது. திமுகவின் முண்ணணி தலைவராகவும் ஆகியிருந்தார். குஷ்பூ எந்த உள்நோக்கம் கொண்டோ, கட்சியில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றோ உழைக்கவில்லை. கட்சி தலமை சொன்னதை ஒரு தொண்டராகத்தான் செய்தார். ஆனால் அவரின் வளர்ச்சி பலரின் கண்களை உறுத்தின‌. அவரை குறித்துகொண்டார்கள், இவரின் மக்கள் அபிமானம் அதிகம், இப்படியே விட்டால் மிக விரைவாக திமுகவின் பெரும் தலைவராகிவிடுவார் எனும் அச்சம் உள்ளே உள்ளவர்களுக்கு ஏற்பட்டது.

அப்பொழுது திமுகவில் அடுத்த தலைவர் யார் என சர்ச்சை எழுந்த நேரம், பலவிதமான சர்ச்சை வந்தபொழுது குஷ்பூவும் அதுபற்றி பேசவேண்டியதாயிற்று. மனதிற்கு சரியென்றால் எதற்கும் அஞ்சாமல் உண்மையினை சொல்லும் துணிச்சல் கொண்டவர் குஷ்பூ

அவர் தனக்கே உரித்தான துணிச்சலில் சொன்னார், “திமுக ஒரு ஜனநாயக இயக்கம், அங்கு அடுத்த தலைவர் முறைப்படித்தான் தேர்ந்தெடுக்கபடுவார், யூகங்களுக்கு பதில் சொல்லமுடியாது” ஒரு அரசியல் கட்சியின் தலைவரில் ஒருவராக அவர் இப்படித்தான் சொல்ல முடியும், அதனைத்தான் சொன்னார். அதற்குள் திமுகவினர் பொங்கி எழுந்தார்கள், அவர் வீட்டு மேல் கல்வீசும் அளவிற்கு தரம் தாழ்ந்தார்கள்.

கலைஞரின் தொண்டர்கள் அப்படி செய்யகூடியவர்கள் அல்ல, இது வேறு ஏதோ தூண்டுதலில் திமுகவினர் என சொல்லபட்டவர் செய்த ரகளைகள். குஷ்பூ வீட்டு கண்ணாடி கற்களால் நொறுங்கியது, பெரும் கலவரம் நடந்த இடம் போல அவர் வீடு ஆனது. ஆனால் குஷ்பூ கொஞ்சமும் அசரவில்லை, தன் கருத்தில் உறுதியாக நின்றார். அந்த சம்பவம் அவருக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான்

கட்சி கலைஞர் கட்டுபாட்டில் இல்லை, அவர் கட்டுபாட்டில் இல்லாத கட்சியால் தன் உயிருக்கு கூட ஆபத்துநேரலாம்.

அவர் திமுக குறித்து முடிவெடுக்கும் நேரம் நெருங்கிற்று

(பூ பூக்கும்)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்! கண்டுகொள்ளாத அஜீத்!

Close