அயோக்யா! முதல் பப்ளிசிடியை துவங்கி வைத்தார் மருத்துவர் பெரிய ஐயா!
ஆணானப்பட்ட விஜய்க்கே ‘மெர்சல்’ படத்தை ஓடவைக்க ஒரு தமிழிசை சவுந்தர்ராஜனும், ‘சர்கார்’ படத்தை ஓட வைக்க அதிமுக சர்காரும் தேவைப்படும்போது, சுமார் பிசினஸ் லெவலில் இருக்கும் விஷாலுக்கு தேவைப்படாதா என்ன? எதில் கை வைத்தால் யாருக்கு வயிறெரியுமோ, அதில் கை வைத்து ஒரு அதிர்ச்சிக்குரிய டிசைனை வெளியிட்டிருக்கிறார். அவர் நினைத்தது போலவே முதல் குண்டு பாய்ந்துவிட்டது தைலாபுரத்திலிருந்து.
தெலுங்கில் வந்த ‘டெம்பர்’ என்ற படத்தைதான் தமிழில் ‘அயோக்யா’ என்ற பெயரில் எடுக்கவிருக்கிறார்கள். ஒரு கேடு கெட்ட போலீஸ், திடீரென நல்ல போலீசாக மாறுவதுதான் கதை. அப்படியென்றால் அந்த போலீஸ் தன் காவல் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு சரக்கு அடிப்பது சரியான விஷயம்தானே? ஆனால் அதுதான் கூடாது என்கிறார் பா.ம.க தலைவர் ராமதாசு! மருத்துவர் பெரிய ஐயா சடக்கென்று பொங்கியதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால் சினிமாவில் மது குடிக்கிற காட்சி, மற்றும் சிகரெட் குடிக்கிற காட்சிகள் வந்தால் அந்த இடத்தில் எச்சரிக்கை வாசகங்கள் வர வேண்டும் என்றொரு யோசனையை கொண்டு வந்தவரே மருத்துவர் சின்ன ஐயாதான். இப்படி ஐயாக்களின் தொடர் போராட்டங்களுக்கு அவரது கட்சிக்காரர்கள் செவி சாய்க்கிறார்களோ இல்லையோ? சினிமாக்காரர்கள் செவி சாய்க்காவிட்டால் கிழிஞ்சுது லுங்கி!
இதன் பலனை ரஜினிகாந்த் பாபா படத்திலும், விஜயகாந்த் கஜேந்திரா படத்திலும் அனுபவித்ததுதான் வரலாறாச்சே? ரைட்… விஷால் விஷயத்துக்கு வருவோம். அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் இப்படி பீர் குடிப்பது போன்ற காட்சி அமைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. உடனே இந்த போஸ்டரை திரும்ப பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார் பா.ம.க.ராமதாஸ்.
படமே வரல… அதற்குள் பரபரப்பா. சூப்பர் என்று மனம் நெகிழ தைலாபுரம் திசை நோக்கி வணங்கிக் கொண்டிருக்கிறார் விஷால்.
எப்படியாவது படத்தை பெரிய விலைக்கு போக வைச்சுருங்க டாக்டர்ஸ்!