கண்ணீரில் குடும்பங்கள்! கை கொடுக்கும் கலையுலகம்!
விஜய், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் உதவிக்கரம்!
கஜா புயலின் கோர தாண்டவம் இப்போதுதான் மெல்ல மீடியா மூலம் உலகத்தின் கதவுகளை தட்டி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், ‘ஆன் லைனில் பணம் அனுப்பும் வசதியை உருவாக்கிய தமிழக அரசு அதை இன்னும் எளிமையாக்கியிருக்கலாம்’ என்று கூறி வருகிறார்கள்.
வழக்கம் போல, சினிமாவுலகம் என்ன செய்தது? என்ற கேள்வி எழுந்தது. நல்லவேளை… எல்லா விஷயங்களையும் சற்று தாமதமாகவே கேட்டுணரும் கலையுலகம், இதையும் அப்படியே எதிர் கொண்டது. இருந்தாலும் தங்கள் ஈகை குணத்திற்கு இன்னும் ஒரு உதாரணமாக இந்த கஜா பாதிப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நடிகர்களும் கலைஞர்களும்.
முதலில் கொடுத்தது சிவகுமார் பேமிலி. 50 லட்ச ரூபாயை புயல் நிவாரண நிதியாக அறிவித்தார் சூர்யா. விஜய் சேதுபதி 25 லட்சமும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் மற்றும் 10 லட்சம் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்களையும் அனுப்பியிருக்கிறார்கள்.
இயக்குனர் ஷங்கர் தமிழக முதல்வரின் நிவாரண நிதி மூலமாக பத்து லட்சம் ரூபாய் நிதி உதவியை (ஆன்லைன் RTGS மூலம்) இன்று வழங்கினார்
50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தனது ரசிகர் மன்றத்தின் மூலம் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி.
தமிழனுக்கு எங்கு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக நிற்கும் ஜிவிபிரகாஷ்குமார் லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வருகிறார்.
கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.
கேரள வெள்ளத்தின் போது எப்படி தனது ரசிகர் மன்றங்களுக்கு நேரடியாக பணம் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வைத்தாரோ, அதே போல பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு ரசிகர் மன்றத்திற்கும் தலா நாலரை லட்சங்களை அனுப்பி உதவ செய்திருக்கிறார் விஜய்.
இன்னும் உதவி செய்வோர் பட்டியல் நீளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.