வட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்!

தமிழ்சினிமாவை உருட்டிக் கொண்டிருக்கும் சக்கரங்களில் முக்கிய சக்கரத்தில் ஒன்று தனியாக கழன்று வட நாட்டுக்கு ஓடினால், வண்டி என்னாகும்? இந்த வருத்தம் விசும்பலாக துவங்கி அழுகுரலாக மாறுவதற்கு முன் ஐயா அஜீத் அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் ப்ளீஸ்.

சாதாரணமாகவே பெரிய பட்ஜெட் சினிமாக்களின் ஷுட்டிங் தமிழ்நாட்டில் நடப்பதில்லை. இளிச்சவாயர்கள் இங்குதான் வரணும் என்று நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியை கட்டி வைத்திருக்கிறார்கள் ஆந்திராவில். தொழிலாளர்களுக்கு கூலி பறிபோய் கொண்டிருக்கிறது நாள்தோறும். ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்ளிட்ட அத்தனை டாப்பர்களும் தங்கள் சவுகர்யத்தை அண்டை மாநிலங்களில் தேடக் கிளம்பிவிட்டார்கள்.

அதில் இன்னும் ஒரு ஸ்டெப் முன்னே வைத்திருக்கிறார் அஜீத். சினிமாவில் பெருமளவு பணத்தை இழந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்து இன்டஸ்ட்ரியின் இங்க்குபேட்டராக மாறிய அஜீத்தை எல்லாரும் பாராட்டியதை இப்போதும் மறக்க முடியாது. அதற்கப்புறம் சத்யஜோதி, வாகினி என்று தமிழில் படம் எடுக்கிறவர்களுக்கே முன்னுரிமை கொடுத்தார். இப்போது திடீரென ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு கால்ஷீட் கொடுத்தது கூட தவறில்லை. அது அவர் உயிரோடு இருக்கும் போது கொடுத்த வாக்குறுதி.

ஆனால் ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூருக்கு மேலும் இரண்டு படங்களில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டாராம். அஜீத் வளரும் போது அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலர் இப்போது கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களில் ஒருவரை செலக்ட் செய்து கால்ஷீட் கொடுத்தால், அவர்களுக்கும் மறுமலர்ச்சி வரும். ஆனால் வட நாட்டு சப்பாத்திக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை, தென்னாட்டு இட்லிக்கும் பொங்கலுக்கும் கொடுக்க அவர் ஏன் தயங்குகிறார் என்பதுதான் தெரியவில்லை.

Read previous post:
கண்ணீரில் குடும்பங்கள்! கை கொடுக்கும் கலையுலகம்!

Close