அட இதையெல்லாமா க்ளைம் பண்ணுவீங்க? வெட்கக்கேடு!
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி ‘கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு?’ ரேஞ்சில் அமைந்திருப்பதை தமிழகம் அறியும். தியேட்டர்கள் ஃபுல்லாகி ஓவர் புளோ ஆவதை இப்போதுதான் கண்ணார கண்டு வயிறார மூச்சுவிட்டு மகிழ்கிறது தியேட்டர். கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வரும் ஜனங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதுதான். அதற்காக பொய்யும் புரட்டுமாக எதற்கு செய்தி தர வேண்டும்?
நேற்று சினிமா நிறுவனம் சார்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் ஒரு காட்சியை மனதில் கொண்டு அரசு பேருந்துகளில் காய்கறிகளை இலவசமாக ஏற்றுவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அட ஞானக்கிறுக்கனுங்களா… அதுவா நிஜம்?
கால வரையறை அற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியிருக்கிறது லாரி உரிமையாளர் சங்கம். இதனால் காய்கறிகள் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதோடு விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கிறார்கள். தற்காலிக நிவாரணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் அரசு, மாற்று ஏற்பாடாக அரசு பேருந்துகளில் காய்கறிகளை இலவசமாக ஏற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. அதற்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் காட்சிக்கும் என்ன சம்பந்தம்?
எல்லாத்தையும் பட விளம்பரமா க்ளைம் பண்ணுவதற்கு ஒரு கள்ள மனசு வேண்டும். அதுதான் இங்கேயும் நடந்திருக்கிறது.
என்னத்தை சொல்ல?

