ரயில் சென்ட்டிமென்ட்தான் காரணமாம்! தோள் தப்பிய தொடரி?
ஒரு நீண்ட ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்டில் தொற்றிக் கொண்டு தொங்குகிற சீசன் கால பயணியாக அமையவில்லை பிரபுசாலமனின் தொடரி. இப்படம் தியேட்டருக்கு வந்த நாளில், இது மட்டும்தான் ஸோலோ பர்பாமென்ஸ். ‘ஆண்டவன் கட்டளை’ மறுநாளே திரைக்கு வந்தாலும், தன்னை நிரப்பிக் கொண்டு ஃபுல்லாக வழிந்ததில் தொடரிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
அந்தப்படத்திற்காக ஏராளமாக செலவு செய்த சத்யஜோதி நிறுவனம், ஒரு விஷயத்தில் தெம்பாக இருந்தது. அது பிரபுசாலமனின் முந்தைய ஹிட்டுகளோ, இமானின் இசையோ கூட அல்ல. இதற்கு முன்பு சத்யஜோதி எடுத்த படங்களில் வந்த ரயில் சென்ட்டிமென்ட்.
யெஸ்… ‘மூன்றாம்பிறை’ படத்தில் கமல் அந்த ரயில்வே ஸ்டேஷனில் விழுந்து புரளுவார். அதுவரைக்கும் கமல் ஊட்டிய ‘ரசம் மம்மம், தயிரு மம்மம் போன்றவற்றை ருசியோடு சாப்பிட்டு அவரிடம் கதை கேட்டு தூங்கிய ஸ்ரீதேவி, எவ்வித பாதிப்பும் கொள்ளாமல் தன் குடும்பத்தோடு அந்த ரயிலில் கிளம்பிப் போய்விடுவார். கமல் தவித்த தவிப்புக்காகவே தாறுமாறாக ஓடிய படம் அது.
அதற்கப்புறம் இதயம். என்ற படம். முரளிதான் ஹீரோ. தன் ஒருதலைக்காதலை ஹீரோயின் ஹீராவிடம் சொல்லி விடுவதற்காக அவர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடோடி வர, எவ்வித சலனமும் இல்லாமல் ரயில் கிளம்பிவிடும். முரளியின் தாறுமாறான தவிப்புக்காகவே அந்தப்படம் வெள்ளி விழா ஹிட்-
இப்படி ரயிலும் வெற்றியுமாக தான் தயாரித்த படங்களில் கல்லா கட்டிய சத்யஜோதி நிறுவனம், தொடரியின் கலெக்ஷனையும் அதே சென்ட்டிமென்ட்டோடு பார்த்தால்….
அதில் ஆச்சர்யம் என்ன வேண்டிக் கிடக்கு?