ரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி!

ஊடகங்களே வியக்கிற ஊடக ஒளிதான் நம்ம ரங்கராஜ் பாண்டே! ஐயோ பாவம். அவரது பேரறிவும் பெரு முதிர்ச்சியும் ஒரு ரசிகன் லெவலிலேயே நின்று விட்டதுதான் அண்மைகால சோகம்! ரஜினி ரசிகர் மன்ற நிகழ்ச்சி ஒன்றில், தேர்தல் வந்தால் ரசிகர்கள் எப்படியெல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கிற அளவுக்கு ‘ரங்கராஜ் அலைஸ் சோ பாண்டே’ ஆகியிருந்தார் அவர்.

ஒருமுறை சாணக்யா சேனலில் பேசியவர், ‘ரஜினி மனைவி லதா மீது எனக்கு தெரிஞ்சு பெரிசா வழக்குகள் இல்ல. ஏதோ வாடகை பாக்கின்னு ஒரு இஷ்யூ வந்திச்சு. அவ்ளோதான்’ என்று கோரைப்பாயை சுருட்டி கோட்டு பாக்கெட்டுக்குள் வைத்தார். அப்படியொரு அப்பாவி அவர். லதா ரஜினி மீது ‘சுல்தான் தி வாரியர்’ படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி தராத விஷயத்தில், பண மோசடி வழக்கு ஒன்று தொடரப்பட்டு இன்றளவும் தீர்க்கப்படாமலிருப்பது தேர்ந்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டேவுக்கு தெரியாமலிருந்திருக்காது. பட்… நேர்த்திக்கடன் அப்படி பேச வைத்திருக்கும்!

மாவட்ட செயலாளர்களிடம் ரஜினி பேசியதென்ன? என்று சமீபத்தில் சாணக்யாவில் பாண்டே விளக்கியது அருமை. அப்படியே ரஜினியை பற்றி அவர் சொன்ன தகவல்களை கேட்டால் ‘தலை சுத்திருச்சு’ என்று நாம்தான் கிர்ராக வேண்டும். ரஜினி பதவிக்கு ஆசைப்படாதவர், பதவியை வைத்துக் கொண்டு ஆட்டம் போட நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டார், ரஜினியின் நோக்கமே அவர் முதல்வர் ஆவதல்ல. ஊழலை விரும்பாத ஒரு தலைவரை முதல்வராக்குவதுதான் என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை உள்ளே அதுதான் பேசப்பட்டாலும், நிஜத்தில் நடக்க கூடியதா அது? அந்த கூட்டத்தில் ரஜினி இத்தகைய கருத்துக்களை மாவட்ட செயலாளர்களிடம் விவாதிக்க வேண்டிய தேவைதான் என்ன?

ரஜினி தன் மனதில் முதல்வர் ஆக வேண்டும் என்கிற ஆசை வைத்திருக்கவில்லை. இந்த விஷயத்தை நாட்டு மக்களிடம் முதலில் விதைப்பதுதான் அசைன்ட்மென்ட். ‘இந்தியாவிலேயே இப்படியொரு தலைவன் இல்லையே..’ என்று ஜனங்கள் மூக்கில் விரல் வைக்க வேண்டும். அதுவே ஓட்டாக கன்வெர்ட் ஆகும் என்கிற கணக்குதான் அது.

சாதி சங்கத் தலைவர் ஏ.சி.சண்முகமும், அமைதியே உருவான(?) கராத்தே தியாகராஜனும் ரஜினியின் கட்சிக்குள் வந்துவிட்டால், அதற்கப்புறம் அது எப்படி மூக்கில் விரல் வைக்கக் கூடிய கட்சியாக இருக்கும்? போதும் போதாதற்கு மதுரையில் காந்தி வழியில் அரசியல் செய்து வரும் மு.க.அழகிரியும் ரஜினி கட்சிக்குள் ஐக்கியமாகப் போகிறாராம். இந்த ஒரு புரிதலிலேயே தன் இமேஜ் மீது தானே ஃபுல் ஸ்டாப் அடித்துக் கொள்ளும் ரஜினி, இத்தகைய சினிமா கதை ஸ்டன்டுகள் எப்படி மக்களிடம் பரவி அது ஓட்டாக உருமாறும் என்று நம்புகிறார்?

ஐயோ பாவம்… சினிமா ஹீரோக்கள் திரையில் போட்டது போதாது என்று நிஜத்தில் போடுகிற ஸ்டன்டுகளுக்கும் பேக்ரவுன்ட் மியூசிக் தேவைப்படுகிறது. அதை இளையராஜா, ரஹ்மான்களை விட சிறப்பாக செய்து வருகிறார் நம்ம ரங்கு பாண்டி!

Read previous post:
மிஷ்கினின் மேஜிக்! சிக்குவாரா சிம்பு?

Close