மிஷ்கினின் மேஜிக்! சிக்குவாரா சிம்பு?

‘இலைக்கு இந்தப்பக்கம் சாம்பார் ஊற்றி நீ சாப்பிடு. அந்தப்பக்கம் நான் ரசம் ஊற்றி சாப்பிடுறேன்’ என்று பழகிய பத்தாவது நிமிஷத்திலேயே பாசத்தை கொட்டிவிடுவார் மிஷ்கின். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், அக்ரிமென்ட் போட்ட அஞ்சாவது நிமிஷத்திலேயே வாடா போடா நட்புக்குள் கொண்டு வந்துவிடுவது மிஷ்கினின் ராஜதந்திரங்களில் ஒன்று.

‘எனக்கு மட்டும் ஆண்டவன் இன்னும் 25 வருஷத்தை எக்ஸ்டர்ன் பண்ணினான்னா, அதை விஷால் கூட வாழ்ந்து செத்துடுவேன் என்று அடித்துவிட்டதெல்லாம் மிஷ்கினின் பெரு நாக்கு புராணங்களில் முக்கியமானது. ‘நான் யாருக்காக சம்பாதிக்கிறேன். அவ்வளவு பணமும் எங்க சாருக்காகதான்’ என்று தனது குருநாதர் வின்சென்ட் செல்வா பற்றி ஒரு மேடையில் அளந்த(?) மிஷ்கின் அந்த மேடையை விட்டு இறங்கிய அடுத்த செகன்ட்டே எரேஸ் பண்ணிவிட்டு எஸ்கேப் ஆனதெல்லாம் காலத்தின் ‘கவுனிங்கோ புள்ளீங்களா’ மொமென்ட்!

அப்படியாப்பட்ட மிஷ்கின் அடுத்ததாக கதவை தட்டிய இடம் சிம்பு. ஒழுங்கா ஷுட்டிங் வர்றாரா பாரு. வந்தா வளைச்சுக்கலாம் என்று சிம்புவை நோக்கி ஒரு பெரும் இயக்குனர் கூட்டமே தவமிருந்து காத்திருக்க… அந்த சந்தர்ப்பத்தை அநேகம் பேருக்கு வழங்கி வருகிறார் சிம்பு. மாநாடு படப்பிடிப்பு தொல்லையோ, சொதப்பலோ இல்லாமல் நடந்து வருவதுதான் அத்தனை இயக்குனர்களையும் ஷேக் பண்ணியிருக்கிறது. சில தினங்களாக மாநாடு ஷுட்டிங் ஏரியாவில் நடமாடிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின்.

சிம்புவும் ஒரு கதையை கேட்டிருக்கிறாராம். ‘அட நல்லாயிருக்கே, முழுசா சொல்லுங்க’ என்று கூறியிருப்பதாகவும் தகவல். ஆனால் பிடாரி கோயில்ல, கிடாரிக்கு சாமி வந்தா என்னாகும்? அப்படியொரு ஆபத்து இவ்விருவரின் காம்பினேஷனில் நடந்து தொலையும் வாய்ப்புகள் இருப்பதால், பல தயாரிப்பாளர்கள் பற்கள் நடுங்க, கண்கள் செருக அந்த விபரீத அனுபவத்திற்காகவும் காத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்ப அதிர்ச்சி.

1 Comment
  1. Saravanakumar says

    என்னதான் சொல்லுங்க, இந்த எழுத்து நடை எத்தனை வீடியோ போட்டாலும் வருமா.. அந்தணன் சார்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல!

Close