காலாவை வீம்புக்கு ரிலீஸ் பண்ணலை! கன்னட ரசிகர்களிடம் ரஜினி!
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமெல்லாம் தமிழ்நாட்டுக்குதான். ஆனால் கர்நாடகா போன்ற மாநிலங்கள், நீ சொல்றத சொல்லு. நாங்க செய்யறதை செய்வோம் என்பது போலதான் நடந்து கொள்கின்றன. காலாவும் அதற்கொரு பெஸ்ட் உதா‘ரணம்’.
கர்நாடகா உயர்நீதிமன்றமே காலா ஓடும் தியேட்டர்களில் பாதுகாப்பு கொடுக்க சொன்ன பின்பும், “சட்டம் ஒழுங்கு கெட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல” என்கிறார் சி.எம். குமாரசாமி. (சின்ன மனுசன் என்பதன் சுருக்கம்தான் சி.எம்.) இப்படி ஒருபக்கம் இவர் சொல்லிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காலா ரிலீசுக்குண்டான வேலைகளை சுறுசுறுவென கவனித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இதற்கிடையில் காலாவை துணிச்சலுடன் வெளியிட முன் வந்திருக்கிறாராம் கன்னட விநியோகஸ்தர் கனக்புரா என்பவர். 130 தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இப்படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று கலகக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ரஜினி. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தவர் தனது சார்பில் விடுத்த கோரிக்கை இதுதான்.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று தெரியவில்லை. அணைக்கட்டுகள் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கனும் என்பது எனது கருத்து. இதற்காக காலா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று கூறுவது சரியில்லை”.
“காலா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்போருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே ஆதரவாக இருப்பது புரியவில்லை. அவர்களே எதிர்ப்பது சரியாக தெரியவில்லை. திரைப்பட வர்த்தகசபை என்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் கஷ்டப்பட கூடாது என்பதை உறுதி செய்யும் ஒரு அமைப்பு. கர்நாடகாவில் காலா படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று நாங்கள் முயல்வது வீம்புக்காக இல்லை. உலகம் முழுக்க காலா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அது ஏன் என்ற கேள்வி எழும். அது கர்நாடகாவிற்கே நல்லா இருக்காது. காலா திரைப்படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஹைகோர்ட் படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவு கொடுத்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய அரசு உதவ வேண்டும். முதல்வர் குமாரசாமி எந்த நிலையில் இருப்பார் என தெரிகிறது. இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இப்படி தமிழில் பேசிய ரஜினி அதற்கப்புறம், “கன்னட சகோதரர்களே நான் எந்த தப்பும் செய்யவில்லை. படம் பார்க்க வரும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காதீங்க. படம் ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்க” என்று கன்னடத்திலும் தனது கருத்தை பதிவு செய்தார்.