ரஜினி ட்விட்! தாமதம் ஏன்? அட… இதுவா காரணம்?

பூசாரிய கேட்டுதான் பூமி சுத்தணும்னா சூடம் எதுக்கு? சொக்கநாதர் எதுக்கு? இப்படியொரு டவுட்டை கிளப்பிவிட்டு விட்டது ரஜினியின் மவுனமும் அதற்கப்புறமான அவரது திடீர் கோபமும்.

சாத்தான்குளம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட விஷயத்தில் நாடே பேரதிர்ச்சிக்கு ஆளாகியது. நீதி வேண்டும் என்று பேசாத உள்ளமே இல்லை. ஆனால் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பிறகும் மவுனம் காத்தார் ரஜினிகாந்த். சமூகத்தின் எல்லா மட்டத்தை சேர்ந்தவர்களும் தத்தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். திரையுலகத்தில் கமல், சூர்யா, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பல்வேறு நடிகர் நடிகைகளும் தங்கள் கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர். பின்னணி பாடகி சுசித்ரா முதலில் பொங்கியெழுந்ததுடன், மேற்படி விஷயத்தை ஆங்கிலத்தில் ட்விட் செய்து வட இந்தியாவுக்கும் போகச் செய்தார்.

ஆனால் “யூனிபார்ம் போட்ட காவலர்களை தாக்குவது குற்றம், அவர்களை மன்னிக்க முடியாது” என்று சில மாதங்களுக்கு முன் ட்விட் போட்ட ரஜினி, இந்த விஷயத்தில் உடனே ரீயாக்ட் செய்திருக்க வேண்டுமல்லவா? மாறாக அமைதியாகவே இருந்தார். அவரது ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் மூலமாக ஒரு தகவல் வெளியானது. ரஜினி உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினரிடம் போனில் பேசி ஆறுதல் சொன்னார் என்பதுதான் அது. அதற்கப்புறம் சில மணி நேர தாமத்திற்கு பிறகுதான் ரஜினியின் பிஆர்ஓ மூலம் தகவல் வெளி உலகத்திற்கு வந்தது. கட்… ரஜினி ஏன் கொடூர சம்பவத்திற்கு காரணமான அந்த காவலர்கள் மீது கண்டனம் தெரிவித்து ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஒருவேளை இது கூட காரணமாக இருக்கலாம். நாளொன்றுக்கு பத்து முறையாவது ரங்கராஜ் பாண்டேவுக்கு போன் அடித்துவிடுகிறாராம் ரஜினி. கிட்டதட்ட ரஜினியின் அறிவிக்கப்படாத ஆலோசகராகவே இருக்கிறார் பாண்டே. இந்த சாத்தான்குளம் விஷயத்தில் முதன் முதலில் வீடியோ மூலம் கருத்து தெரிவித்த பாண்டே, இந்த கொடூர சம்பவத்தை விவரித்திருக்கிறார். அதில், “விசாரணைக்கு அவ்விருவரையும் போலீஸ் அழைத்து செல்ல வந்தபோது போலீசோடு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த வாக்குவாதத்தின் காரணமாக அவர்கள் இருவரும் தாக்கப்பட்டிருக்கலாம் என்கிற பொருள்படதான் அவரது பேச்சும் இருக்கிறது.

பூசாரி ஒரு முடிவுக்கு வந்துவிட்ட பின், கடவுளுக்கு அவர் எப்படிப்பட்ட கருத்தை விதைத்திருப்பார்?

நல்லவேளையாக டி.வி சேனல்கள் விசாரணைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகளை வெளியிட்டன. அதில் போலீஸ் அழைத்ததும் எவ்வித மறுப்பும் சொல்லாமல் கிளம்பி செல்கிறார் ஜெயராஜ். அப்பாவை அழைத்துச் சென்று விட்டார்களே என்று அதிர்ந்த மகன் பென்னிக்ஸ் அதற்கப்புறம் தன் நண்பர்களுடன் பைக்கில் செல்கிறார். இதில் எவ்வித வாக்குவாதத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

இதற்கப்புறம்தான் ரஜினிக்கே உண்மை புரிந்திருக்கும். ஒரு கருத்தை வெளியிடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த இன்னொரு இடி. விசாரணைக்கு போன மாஜிஸ்திரேட்டையும் மிரட்டும் தொணியில் நடந்து கொண்டிருக்கிறது போலீஸ்.

இனிமேல் சும்மாயிருப்பது நமது இமேஜுக்கு அழகல்ல என்பதை புரிந்து கொண்ட ரஜினி, சத்தியமா-விடவே-கூடாது என்றொரு ஹேஷ்டேக் உருவாக்கி, பரபரப்பான ஒரு ட்விட்டை வெளியிட்டார். அதில், “தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது”. என்று கூறியிருந்தார்.

அட்வைசர் கருத்து சரியா இருந்திருந்தா ‘அண்ணாத்த’ கருத்தும் சரியா இருந்திருக்கும்.

இனிமேலாவது முழிச்சோங்க ரஜினி சார்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்! புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா!

திக்கெட்டும் பரவிக்கிடக்கிற திருட்டு பாய்ஸ், இப்போது டிக் டாக்கிலும் குடி புகுந்துவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் நின்று அருவா சுற்றுவது, ஆஸ்பிடல் குளுக்கோஸ் பாட்டிலை அப்படியே குடிப்பது,...

Close