ராமானுஜன் – விமர்சனம்
கணக்கே பேச்சு, எண்களே மூச்சு என்று வாழ்கிற ஒருவனுக்கு தமிழன் கொடுக்கிற ‘டார்ச்சர்’ என்ன? வெள்ளைக்காரன் கொடுக்கிற ‘ஃபியூச்சர்’ என்ன? இதுதான் கதை. இல்லையில்லை… வாழ்ந்த ஒரு மனுஷனின் வரலாறு! படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது இப்படிதான் தோன்றுகிறது, ‘வெள்ளையனே… நீ வெளியேறாமலே இருந்திருக்கலாம்!’
கும்பகோணத்து குழந்தை ராமானுஜனில் ஆரம்பிக்கிறது படம். பால் வடியும் முகம், கணக்கு பாடத்தில் கொதிக்க கொதிக்க கேட்கிற கேள்விகள் என்று தன்னை சுற்றியிருக்கிறவர்களை அறிவால் அதிர வைக்கிறான் சிறுவன். ‘பூஜ்யம் மாம்பழத்தை பூஜ்யம் பேருக்கு கொடுத்தால் ஈவு ஒன்று வருமா சார்?’ என்று அந்த குழந்தை கேட்க, ‘அதிக பிரசங்கி உட்கார்றா…’ என்கிறார் வாத்தியார். பூஜ்யம் என்பது வெறும் சூனியம் அல்ல என்பதற்கு அப்போதே அவன் கொடுக்கிற விளக்கம் அசர வைக்கிறது. அதே கேள்விக்கான விடையை பிற்பாடு லண்டன் அறிஞர்கள் கொண்டாடுகிற போது, நாம் எவ்வளவு பெரிய கற்காலத்தை கடந்து வந்திருக்கிறோம் என்பது புரிகிறது.
ராமானுஜன் என்ற பொக்கிஷம் விதைக்கப்பட்டதும், புதைக்கப்பட்டதும் இங்கேதான்…. இதே நம் மண்ணில்தான்… என்று தெரிய வருகிற போது, நெஞ்சு நிமிர்கிறது. அழிந்து போன ஒரு கோடியை, மில்லியனை, பில்லியனை, இன்னமும் ‘எண்ணில்’ அடங்கா அந்த பெருமதிப்பை, ஒரு வரலாற்று படமாகவும், பொழுதுபோக்கு சித்திரமாகவும் வடித்தெடுத்த இயக்குனர் ஞான.ராஜசேகரனுக்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் எழுந்து நின்று சல்யூட் வைக்க வேண்டிய நேரம் இது!
குழந்தை ராமானுஜன் போர்ஷன் அவ்வளவு கச்சிதம். அதிலும், கோவிலில் சுண்டலை வாங்கிக் கொண்டு கிளம்பாமல் அந்த அண்டாவையும் தொன்னையையும் கணக்கிட்டு அதற்குள் எத்தனை கடலைகள் அடங்கும் என்பது வரைக்கும் மனக்கணக்கு போட்டு, ‘கடைசியா வர்ற எட்டு பேருக்கு சுண்டல் இருக்காதே, என்ன பண்ணுவேள்?’ என்று கேள்வி எழுப்புவதையும், அதே போல கடைசியாக வரும் எட்டு பேர் சுண்டல் வரிசையில் அம்பேல் ஆகி நிற்பதும்… கற்பனையோ, நிஜமோ, கைத்தட்டல்களுக்குரிய காட்சி.
இப்படியொரு மழலை மேதை வளர்ந்து பெரியவன் ஆகி எந்நேரமும் கணக்கு கணக்கு என்று சித்தம் முழுக்க எண்களாக மாறி நிற்க, பெற்ற அப்பாவே சிலேட்டை பிடுங்கி எறிகிற காட்சியும், ‘ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா எல்லா சரியா போயிரும்’ என்று அவனை இல்லற பந்தத்திற்குள் தள்ளி விடுவதும் பேரதிர்ச்சி. யானையை கூட கோணிப்பையில் பிடித்து விடுகிற ஆட்களாச்சே என்கிற உண்மையை மிக எளிதாக புரிய வைக்கிறார் இயக்குனர் ஞான.ராஜசேகரன்.
அவ்வளவு பெரிய மேதை ஒரு அரிசி மண்டியில் வேலைக்கு போய் நிற்பதெல்லாம் ரத்த கண்ணீர். நல்லவேளையாக இடைவேளைக்கு சற்று முன்பாக அவனை லண்டனுக்கு அனுப்புகிறது கதை. அங்கு நடைபெறும் காட்சிகளில்தான் திறமையிருக்கிற எவரையும் வெள்ளைக்காரர்கள் துச்சமாக நினைப்பதில்லை என்று புரிய வருகிறது. மனைவியை பிரிந்த ஏக்கத்திலும், உடல் நோய்வாய்ப்பட்ட துக்கத்திலும் தற்கொலைக்கு முயலும் ராமானுஜத்தை வெள்ளைக்காரர் ஹாரி காவல் நிலையத்திற்கே சென்று மீட்டு வருகிற காட்சி அசத்தல். படத்தில் நிறைய வெள்ளைக்காரர்களின் நடமாட்டம் இருந்தாலும், ஹாரி என்னவோ… கலக்குகிறார். எல்லா வெள்ளைக்காரர்களும் நேரடியாக தமிழ் பேசுவதை சற்றே தவிர்த்திருக்கலாமே இயக்குனரே… சப் டைட்டில் ஆகாது என்றாலும், பின்னணியில் மெல்லிசாக ஆங்கிலம் ஒலித்திருந்தால் அந்த நெருடல் தவிர்க்கப்பட்டிருக்குமோ?
படத்தில் நடித்திருக்கும் ஈ காக்காய் துரும்பு எறும்பெல்லாம் கூட தன் பங்கை மிக கச்சிதமாகவே செய்திருக்கிறது. அவ்வளவு முக்கியமான வரலாற்று பதிவில் மாமியார் மருமகள் பிணக்கு துருத்திக் கொண்டு நிற்காமல் மேலோட்டமாக அதே நேரத்தில் அழுத்தமாக பதித்திருக்கும் இயக்குனருக்கு ஓரு சபாஷ். அந்த கேரக்டர்களில் வாழ்ந்திருக்கும் சுஹாசினிக்கும் பாமாவுக்கும் தனி பாராட்டுகள். ராமானுஜமாக நடித்திருக்கும் அபினய், இதற்கப்புறம் எதிலும் வில்லனாக தலைகாட்டி இந்த கேரக்டரின் பெருமையை குலைக்காமல் இருக்க வேண்டும்.
பெரிய பெரிய மேதைகள் எல்லாம் அற்ப ஆயுசில் போய் விடுகிறார்கள். ராமானுஜரின் குடும்பம் அவரை பாதுகாத்திருந்தால் இன்னும் நிறைய ஈக்குவேஷன்கள் கிடைத்திருக்குமே என்ற எண்ணம் எழாமலில்லை. அவரது இறுதி சடங்கும் பாரதியை போலதான் என்கிற உண்மையும் சுடுகிறது. அவன் கடல் கடந்து போயிட்டு வந்திருக்கான். அந்த தோஷம் நம்மளையும் தொத்திக்கும் என்று இறுதி சடங்கில் கலந்து கொள்ளாமல் எழுந்து ஓடுகிறவர்கள் மத்தியில், சொற்பமாக வந்து நிற்கும் பெரியவர்கள் சொல்கிற டயலாக்கில் மனசை பிசைகிறார் வசனக்காரர். ‘அவரை எடுத்துப் போட நாம சிலர்தான் வந்திருக்கோம். அதனாலென்ன? அவருக்கு எல்லா நம்பரும் பிடிக்கும்’
ஒரு வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது எழுதப்படும் திரைக்கதைக்கு இணையானது டெக்னிகல் சுத்தம்! ஒளிப்பதிவாளர் சன்னி ஜோசப், இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம், எடிட்டர் பி.லெனின், காஸ்ட்யூம் டிசைனர் சகுந்தலா ராஜசேகரன் இன்னும் படத்தில் பங்காற்றிய அத்தனை பேரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ராமானுஜனை எண்கள் வழி நடத்தியதை போல, இந்த ராமானுஜன் படத்தையும் எண்ண முடியாத அளவுக்கு கலெக்ஷன் வந்து வழி நடத்தட்டும்… எல்லா பள்ளிகளிலும் எல்லா பூங்காக்களிலும் திரையிட்டு ராமானுஜனை பெருமைபடுத்த வேண்டிய கடமை அரசுக்கும் இருக்கிறது!
-ஆர்.எஸ்.அந்தணன்