தேவைக்கு மட்டும் ரஜினி வேணுமாம்… சப்போர்ட் கமலுக்குதானாம்! ஆர்.கே.சுரேஷை வறுக்கும் நெட்டிசன்ஸ்!
ரஜினியும் கமலும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்துவிடுவார்களோ என்கிற அச்சத்தையும், ஆச்சர்யத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது அவ்விருவரது அரசியல் கேட் வாக்! வருங்கால அரசியலில் கலைஞர், எம்ஜிஆர் ஆக இவ்விருவரும் மாறக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், முதலில் முந்திக் கொண்ட கமலுக்கு திரையுலகத்திலிருந்தே ஆஹா ஓஹோ சப்போர்ட்டுகள். அதில் முதல் சப்போர்ட் நம்ம ஆர்.கே.சுரேஷ்.
‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமியை கதற கதற விரட்டுவாரே… அவரேதான் இவர். முள் கரண்டி லுக், அதில் பஞ்சாமிர்தத்தை அள்ளியது போல பேச்சு என்று இருவேறு இமேஜ் கொண்ட நடிகர்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். பேச்சு சினிமாவை தாண்டி அரசியல் பக்கமே அதிகம் வீசியது. “ரஜினி பல வருஷமா வர்றேன் வர்றேன்னு சொல்கிறாரே ஒழிய வந்தபாடில்லை. அவர் வந்தாலும், முன்ன மாதிரி மக்கள் சப்போர்ட் இருக்குமா தெரியாது. ஆனால் கமல் அப்படியல்ல. வர்றேன்னு சொன்னார். இதோ- அதற்கான எல்லா வேலைகளையும் பளிச்சுன்னு ஆரம்பிச்சுட்டார். கமல் கட்சி ஆரம்பிச்சா அவருக்கு திரையுலத்திலிருந்து குரல் கொடுக்கிற முதல் ஆள் நானாகதான் இருப்பேன்” என்றார் ஆர்.கே.சுரேஷ்.
சின்னப்படங்களை எடுத்து நஷ்டப்பட்டதுதான் மிச்சம். தர்மதுரைன்னு ஒரு வெற்றிப்படத்தை எடுத்த நான், அந்த பணத்தை தியேட்டர் சைடிலிருந்து வாங்கவே ஒரு வருஷம் ஆகிருச்சு தெரியுமா? இனி எடுக்கிற படங்கள் பெரிய ஹீரோக்களை வைச்சுதான் என்று சினிமா பற்றியும் சில விஷயங்களை பேசியவருக்கு, அவர் பேசிய கொஞ்ச நேரத்திலேயே எதிர்ப்பு வலுத்ததுதான் ஆச்சர்யம்.
வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் சொல்லப்படும் கருத்து என்ன தெரியுமா?
‘தர்மதுரை’ என்ற ரஜினியின் பட டைட்டில் வாங்குவதற்கு மட்டும் ரஜினி ஆதரவு வேணும். ஆனால், கட்சி ஆரம்பிச்சா இவர் கமல் பக்கம் நிப்பாராமா? நல்லாயிருக்குப்பா இவரு நியாயம்? என்கிறார்கள்.
அதானே?