தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாய் பல்லவி தேங்க்ஸ்!

ஒருவழியாக கோடம்பாக்கத்தின் வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார் சாய் பல்லவி. மலையாளத்தில் ஒரே படம்தான். டாப் கியரில் கிளம்பியது அவரது வேகம். அதற்கப்புறம் வரிசை கட்டி நின்ற அத்தனை அழைப்புகளுக்கும் படு பயங்கர நிதானம் காட்டி வந்தார்.

அஜீத், விஜய், தனுஷ் படங்களில் நடிக்க அழைத்தபோதெல்லாம் நாகரீகமாக நோ சொன்ன சாய் பல்லவி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ படத்திற்கு மட்டும் யெஸ்…. சொன்னது எப்படி? வேறென்ன, கதையிலிருந்த வெயிட்தான். ஆச்சர்யம்… இப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்திருக்கிறார் பல்லவி.

சென்னை வந்த அவர், கரு படம் குறித்த தனது கருத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். “நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான். தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் நிறைய பொறுப்புகள் இருந்தது. முதல் படத்தை நல்ல படமாக பண்ணனும்னு நினைச்சேன். அதனால் தான் இவ்வளவு தாமதம். படத்தில் நடிக்கும் போது உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றி விட்டோம். பேபி வெரோனிகாவோடு நடிக்கும் போது எனக்கு தான் பிரஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தவர் இயக்குனர் விஜய்” என்றார்.

“சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்த படத்துக்காக அணுகினோம். அவர் முதலில் மறுத்து விட்டார். பின் கதையை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே சாய் பல்லவி தான்” என்றார் ஏ.எல்.விஜய்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரு கோடி பேரின் நம்பிக்கையா? நடிகர் சொல்லும் புதிய தகவல்

Close