சாய்ரட் இயக்குனரின் கள்ளத்தனம்! உள்ளே சிரிக்கும் அநீதி? – பாடலாசிரியர் முருகன் மந்திரம்

பாலிவுட் என்கிற இந்தி சினிமாவின் தலைநகரமான மும்பை தான், மராத்திய சினிமாவிற்கும் தலைநகரம் என்றாலும், இந்தி திரைப்படங்கள் போல மராத்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வணிக எல்லைகளுக்குள் சென்றதில்லை. கடந்த மாதம் வெளியான மராத்திய மொழி திரைப்படம், சாய்ரட்(SAIRAT) அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

சாய்ரட் என்றால் காட்டுமிராண்டித்தனம் என்று பொருளாம்.

நான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது சாய்ரட். இந்தி சினிமாவை மிரள வைத்து… இந்தி சினிமா பிரபலங்களை புகழ வைத்திருக்கிறது, “சாய்ரட்”. அப்படி என்ன தான் கதை… காதல்… காதலைத் தவிர வேறொன்றுமில்லை.

அர்ச்சி (அ) அர்ச்சனா என்கிற பாட்டீல் இன பெண்ணுக்கும் பர்ஸ்யா என்கிற பிரசாந்த் காலே ஆகிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த வாலிபனுக்கும் இடையேயான காதலின் தொடக்கமும் முடிவும் தான் சாய்ரட். அர்ச்சியாக நடித்திருக்கும் அந்த சற்றே பூசி மெழுகிற உடலழகி… துடிப்பான திமிரழகி…. ரிங்கு ராஜ்குருவை கதையின் நாயகன் மட்டுமல்ல… நீங்களும் காதலிக்கத் தொடங்கி விடுவீர்கள். பார்வை. நடை, உடை, பாவனை, என எந்தப்பக்கம் திரும்பினாலும் திகட்டாமல் ரசித்துக்கொண்டே இருக்க முடிகிறது, ரிங்கு ராஜ்குருவை மற்ற ஹீரோயின்களுக்கே உரித்தான எந்த சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் இல்லாமலேயே ரிங்கு ராஜ்குருவை ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே.

புல்லட்டில் பறக்கும்போதும்… குதிரையில் குதிக்கும் போதும்… டிராக்டரை ஓட்டும்போதும்… கிணற்றுப்படிக்கட்டில் ஒதுங்கி வழிவிடும்போதும்…. பெண்மையும் பெண்ணியமுமாக… ரிங்கு… கொண்டாடப்படவேண்டிய நடிகையாக கொண்டாடப்படவேண்டிய கதாபாத்திரமாக… ஒவ்வொரு ஃப்ரேமிலும் திறமை காட்டுகிறார். ஆளுமை மிக்க திறமை. திறமையான ஆளுமை. உயர்சாதிப் பெண்ணின் நடவடிக்கைகள், என்ற கண்ணோட்டத்தில் இருந்து விடுபட்டு பார்த்தால்… இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த பெண் கதாபாத்திரங்களில் ஒருத்தியாக இந்த அர்ச்சியும் இருப்பாள்.

அப்பப்பா… இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்கள்… இணைந்து கொண்டாட வைக்கிறார்கள்… அர்ச்சியின் கதாபாத்திரத்தை. அர்ச்சியின் காதலை. அர்ச்சியின் காதலனை. காதலனின் நண்பர்களை.

பர்ஸ்யா… அர்ச்சிக்கு இணையாக சரியான காதல் துணையாக… இளமைக் குறும்புகள் செய்யும் பருவ அரும்பாக… பர்ஸ்யாவாக நடித்திருக்கும் ஆகாஷ் தோஸர் … அசரடிக்கிறார்.

கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் மணி நேரத்திற்கு காதல்… சாரலாய்… தூறலாய்.. பெருமழையாய்… நம்மை நனைக்கிறது. பல வருடங்கள் ஆயிற்று… காதலையும் நட்பையும் இப்படி இயல்பாய் ஒரு திரைப்படத்தில் பார்த்து. ஒரே திரைப்படத்தில் பார்த்து கதை நாயகிக்கும் கதை நாயகனுக்கும் இம்மியளவும் குறையாமல்… வெளுத்துக்கட்டுகிறார்கள் நண்பர்கள்… நண்பர்களாக நடித்திருப்பவர்கள். நண்பனின் காதலுக்காக…. எந்தக்கள்ளத்தனமும் இல்லாமல் உதவுகிற நண்பர்களைப் பார்க்கும்போது… நாகராஜ் மஞ்சுளே நம்மையே நமக்கு நினைவு படுத்திவிட்டுச் செல்கிறார்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்… ஊரில் வாழ்ந்த காலம்… கண்களில் விரிகிறது.

நீங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றால்… கண்டிப்பாக இந்தக் கதையின் நாயகனாகவும் நண்பர்களாகவும் உங்களை நீங்களே உணர முடியும். நண்பனின் காதல் கதை…. அடுத்த கட்டத்திற்கு நகரும் ஒவ்வொரு நிமிடத்திலும் கூடவே இருக்கும் நண்பர்கள், அதைக் கொண்டாடும் நண்பர்கள்… ஆஹா… உங்களை அப்படியே தமிழுக்கு கூட்டிட்டு வரலாம் நண்பர்களே… அச்சு அசல் தமிழ் முகங்கள்.. தென்னிந்திய முகங்கள்…

பண்ட்ரி (FANDRY) என்ற தனது முந்தைய திரைப்படத்தின் மூலமாக தன்னை கவனிக்க வைத்த நாகராஜ் மஞ்சுளே. சாய்ரட்… வழியாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். மிக அழகான… அழகியல் ததும்பும் திடமான படைப்பாக சாய்ரட் இருக்கிறது. படத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்…

நிற்க….

இவை அனைத்தையும் தாண்டி, “சாய்ரட்”டில் எனக்கு மிகவும் வருத்தத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்திய இரண்டு சம்பவங்கள் இருக்கிறது. அந்த இரண்டு விசயங்களும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல… மிக லாவகமாக கையாளப்பட்டிருப்பதாக திணிக்கப்பட்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். உயர் சாதிப் பெண்ணும் தாழ்த்தப்பட்ட சாதிப்பையனும் மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையில் ஊரை விட்டு, எப்படியோ தப்பிப்போய்… திருமணம் செய்து குழந்தை பெற்று சந்தோசமாக வாழும் போது… பெண் வீட்டாராகிய உயர்சாதி என்று சொல்லப்படுபவர்கள்… அவர்களை தேடி வந்து… திருந்திவிட்டது போல நடித்து… கழுத்தறுத்துக் கருவறுத்து பழிதீர்ப்பதே சாய்ரட்.

கழுத்தறுபட்டு கிடக்கும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து… தலையில் அடித்துக் கதறும் ஐந்து வயதுக்கும் குறைவான அந்தக் குழந்தையின் அரவமற்ற அசைவுகளின் கூச்சல்… இதயத்தையும் கண்களையும் கிழிக்கிறது. ஆணவக்கொலை பற்றி ஒரு திரைப்படம்… கொலையில் என்ன ஆணவக்கொலை.. கௌரவக் கொலை… என்பதை இந்திய தேசம் தான் சொல்ல வேண்டும்.

சாதி விட்டு சாதி திருமணம் செய்பவர்களை கொலை செய்வதை கதையாகக் கொண்ட படம். இந்திய சினிமா தொட விரும்பாத, தொடத் தயங்குகிற, தொட மறுக்கிற கதைக்கரு. அதற்காகவே படத்தின் இயக்குநருக்கு ஒரு மரியாதையான வணக்கம். குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சாதியின் பெயரால் 81 கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

சரி… எரிச்சல் படுத்திய அந்த இரண்டு விசயங்களுக்கு வருகிறேன்…

1. ஒன்று.

தாழ்த்தப்பட்டவர்களை தலித்துகளை ஏழைகளை உணர்ச்சியே இல்லாதவர்களாக சித்தரித்திருப்பது…

திரைப்படத்தின் ஒரு இடத்தில் கதாநாயகின் தம்பியாக வருகிற… ஒரு கொடுக்குப்பையன்… பொடிப்பையன்… கதாநாயகனை விட ரொம்பவே சிறியவன்.. கதாநாயகன் வீட்டுக்கு தேடி வந்து… அப்பா, அம்மா, தங்கை முன்னிலையில் கதாநாயகனை கன்னத்தில் ஓங்கி அறைகிறான். அவனும் வாங்கிக்கொண்டு எந்த உணர்ச்சியும் இல்லாமல் அப்படியே நிற்கிறான். அவனிடம் சிறிய அளவில் கூட எதிர்ப்புணர்ச்சி இல்லை. காட்டவில்லை. காட்டப்படவில்லை. கதையில் எந்த இடத்திலும்… பின்னாலும் நீளவில்லை அது.

அதைப்போலவே இன்னொரு இடத்தில் ஆறு ஏழு பேர் கொண்ட ஒரு கும்பல்… கதாநாயகியோடு சேர்ந்து நான்கு பேர் கொண்ட இவர்களை தாக்குகிறது. கதாநாயகியைத் தவிர ஒருவர் கூட. எதிர்த்து திருப்பி அடிக்க முயற்சிக்கவில்லை. 7 பேர், நான்கு பேர் தான் கணக்கு. ஆனால்… வெறுமனே அடியை மட்டும் வாங்கிக்கொண்டு கூச்சலிடுவதாகவே படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதில் கதை நாயகனின் நண்பர்களில் ஒருவர் இஸ்லாம் வாலிபன் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.

அதைப்போலவே இன்னொரு சம்பவம்…

கதை நாயகியின் அதே சொந்தத்தம்பி… அதே அக்காவும் அக்காவின் காதலனும் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கிறான். வகுப்பறைக்குள் வகுப்பு நடக்கும்போது சத்தமாக போன் பேசுகிறான். வாத்தியார்… எச்சரிக்கிறார். எழுந்து வந்து வாத்தியாரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு கன்னத்தில் அறைந்துவிட்டு திமிராக செல்கிறான் அவன். வாத்தியாரிடம் நோ ரியாக் ஷன்… நோ கோபம். சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார். புரிந்திருக்குமே… வாத்தியாரும் தலித் வேறென்ன….

ஒரு பொடிப்பையன் கன்னத்தில் அடிக்கிற நிமிடத்தில் சற்றும் எதிர்ப்புணர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு அவர்கள் உணர்ச்சியற்ற பிண்டங்களா? தலித்துகள் நிலை இப்படித்தான் எதிர்க்க முடியாமல்… எதிர்த்துப்பேச முடியாமல் இருக்கிறது… என்று படம் பார்ப்பவர்களை யதார்த்தம் என்ற பெயரால் ஏமாற்றும் பசுத்தோல் போர்த்திய புலியாகவே நாகராஜ் மஞ்சுளே… தெரிகிறார் எனக்கு… இந்தக் காட்சிகளில்.

ஏன்…? ஏன் அப்படித் தோன்ற வேண்டும்..?

தன்னை விட, தான் சார்ந்த இனத்தை விட சாதியிலும் செல்வாக்கிலும் பணத்திலும் அரசியலிலும் மிக கனமாக உள்ள குடும்பத்தில் உள்ள ஒரு பெண் மீது தாறுமாறாக காதல் வயப்படுகிறான், கதாநாயகன். அதாவது தெரிந்தே நல்ல பாம்பிடம் கையைக் கொடுப்பது… தெரிந்தே தீயில் குதிப்பது.. எந்தப் பயமும் இல்லாமல் ஊரில் செல்வாக்கான இந்துத்துவ பணக்கார அரசியல்வாதி / ஊர்த்தலைவர் ஒருவரின் மகளை துணிந்து காதலிக்கிறான். அவள் தோழிகளோடு தனியாக குளிக்கும் கிணற்றில் குதிக்கிறான். அவள் வீட்டுக்குள் நுழைகிறான். அவளோடு ஊரை விட்டு ஓடுகிறான். அனைத்திலும் அவன் கூடவே இருக்கிறார்கள் நண்பர்கள். காதல் உணர்வுக்கு சற்றும் குறையாத நட்பு உணர்வோடு இருக்கிறான்.

பாச உணர்வும் நட்பு உணர்வும் காதல் உணர்வும் பெருக்கெடுக்கிற, கதைநாயகனுக்கு கோப உணர்வும் பழி வாங்கும் உணர்வும் சிறிதளவு கூட எட்டிப்பார்க்காதா? தன்னையும் மீறி வராதா? ஆக… தலித்துகளின் நிலை இதுதான் என்று யதார்த்தம் பேசுவதின் மூலமாக அவர்களுக்கு எதிர்ப்புணர்ச்சி கிடையாது என்று காட்ட நினைத்திருப்பதாகவே நான் உணர்கிறேன். அல்லது எதிர்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய முற்படுவதாகவே பார்க்கிறேன்.

உயர்சாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும், கதை நாயகி குதிரையில் வருகிறாள், டிராக்டர் ஓட்டுகிறாள், புல்லட் ஓட்டுகிறாள், துப்பாக்கி எடுத்து சுடுகிறாள். அவளின் தம்பி வாத்தியாரை, கதை நாயகனை கன்னத்தில் அடிக்கிறான்… ஆளுமையும் அதிகாரமும் அவர்களுக்கு கூடவே பிறந்ததுபோலவும்…. இவர்களுக்கு அதெல்லாம் கிடையாது என்பது போலவும் செயற்கையான ஒரு புத்திசாலித்தனமான திணிப்பு…. என்றே தோன்றுகிறது கதை நாயகனும், வாத்தியாரும் எதிர்த்து ஒரு பார்வை கூட பார்க்க மாட்டார்களா என்ன? தானாட விட்டாலும் தன் சதையாடும்… என்பதைப் போல… கண்களில்… முகத்தில்… ஒரு சின்ன வன்மமும் கோபமும் கூட எட்டிப்பார்க்காதா என்ன?

முதல் பாதி படத்தில் இது விஷம் என்றால்… பின் பாதி படத்தில் இதற்கு சற்றும் குறையாத இன்னொரு உளவியல் விஷத்தை திணித்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே…

2. இரண்டு

தலித்கள் மீதான தவறான பார்வையை உறுதி செய்தல்…

எப்படியோ தப்பித்து ஊரை விட்டு ஓடி.. இவர்களைப் போலவே ஓடி வந்த சீனியர்… ஒரு பெண் அடைக்கலம் கொடுக்க… மிக மோசமான ஒரு சூழலில் தங்கள் இல்லற வாழ்க்கையை கதை நாயகனும் கதை நாயகியும் தொடங்குகிறார்கள். ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போவதற்கும் கூட முடியாமல்… அய்யோ.. அந்தப்பெண் படும் பாடு இருக்கிறதே. பெண்ணாகப் பிறப்பது பெரும் பாவமடா என்ற வலி எழுகிறது. அதன் பின் மெல்ல மெல்ல வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

ரெண்டு பேரும் ஒரே கல்லூரியில் ஒரே பாடத்தையே படிக்கிறார்கள். ஆனால் கதை நாயகி கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள். கதை நாயகன் கையேந்தி பவனில் வேலை செய்கிறான். இத்தனைக்கும் அவன் அதிக மார்க் வாங்கியிருப்பதை வாய்பிளந்து ஒரு காட்சியில் பார்த்தவள் தான் இந்தக் கதை நாயகி. பின் ஏன் அவனுக்கு கையேந்தி பவன், அவளுக்கு கம்பெனி. சரி, பரவாயில்லை விட்டு விடுவோம்.

ஒரு காட்சியில் மிக மன வேதனையில் கதாநாயகி, தன் தோழியிடம் சொல்கிறாள், எங்கள் வீட்டில் அனைவருமே நல்லவர்கள் என்று.

ஒருமுறை கதாநாயகி தன் காதலுடன் ஓடி வரும்போது இவர்களை பிடித்து காதலனையும் நண்பர்களையும் அடித்து துவைத்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார்கள் அவளது அப்பாவின் அடிபொடிகள் / உறவினர்கள். கதைநாயகியிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டு, கதை நாயகனும் நண்பர்களும் கதை நாயகியை கற்பழிக்க முயன்றதாக அவள் பெயரிலேயே கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறார்கள். ஆனாலும் நல்லவர்கள்???? சரி, பரவாயில்லை விட்டு விடுவோம்.

பணப்பிரச்சினை… வசதியாக வாழ முடியவில்லை. அதனால் அவர்களுக்குள் பிரச்சினை என்ற வரையில் ஒன்றும் தவறில்லை. இருவரும் படித்திருக்கிறார்கள். வேலைக்குப் போனால் போதுமான சிறிய அளவு வசதிகளோடு வாழ்ந்து விட முடியும்… பணப்பிரச்சினை தீர்ந்துவிடும்.

ஆனால் மனப்பிரச்சினை…. என்ன மனப்பிரச்சினை.. இங்கே எதற்கு மனப்பிரச்சினை????

கையேந்தி பவனில் கதாநாயகன்… கம்பெனியில் கதாநாயகி… இப்படி அங்கேயும் இவர்களை உயர்த்தி, தாழ்த்தி விளையாடும் திரைக்கதை அடுத்து தொடுவது… கதைக்கு தேவையே இல்லாத ஒன்றை.

சாதி விட்டு சாதி கல்யாணம்.. காத்திருந்து… எத்தனை வருடங்கள் ஆனாலும் வன்மம் தீர்க்கும் பழி. கொலை. இதுதான் கதையின் மையக்கரு. இந்தக்கதையில் எதற்கு நாகராஜ் மஞ்சுளே செல்வராகவன் கதாபாத்திரத்தை கடன் வாங்கி இடையில் திணித்து இருக்கிறார் என்று தெரியவில்லை.

கதை நாயகனுக்கு கதை நாயகி மீது சந்தேகம் வருகிறதாம்… வேறு யார் கூடவோ பழகுகிறாள் என்று… அதனால் அவளது மொபைலை அடிக்கடி சோதித்து பார்ப்பானாம். அவள் படம் பார்க்க அழைக்கும் போது நீ போயிட்டு வா என்று அனுப்பி விட்டு… தியேட்டரில் வந்து சந்தேகத்தோடு பார்ப்பானாம்… நாலு பேர் மத்தியில் நடு ஹோட்டலில் வைத்து சண்டை போடுவானாம். நடுரோட்டில் வைத்து அடிப்பானாம். அசிங்க அசிங்கமாக திட்டுவானாம். கிட்டத்தட்ட சைக்கோ போல நடந்துகொள்வானாம்.

இயக்குநரைக் கேட்டால்… எந்த சாதியாக இருந்தாலும் ஆண் மனநிலை இதுதான் என்று சொல்ல முயற்சித்திருக்கிறேன் என்றோ… அதீதக் காதல் அப்படி செய்ய வைத்தது என்றோ சமாதானம் சொல்லக் கூடும்… ஆனால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. தலித் இளைஞர்களை காதலித்தால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று ஊர் உலகத்திற்கு அறிவிக்க இந்தப்படம் முயற்சி செய்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

மேலோட்டமாக பார்த்தால் இந்தப்படம் ஆணவக்கொலை பற்றி பேசுகிறது என்று எடுத்துக்கொண்டாலும்… இந்தப்படம் செய்யும் பிரச்சாரம் என்பது… காதலித்து ஓடிப்போனால் இப்படித்தால் பாடாய்ப்படுவீர்கள் என்று சொல்வதாக அல்ல.

இந்தப்படம் செய்யும் பிரச்சாரம் என்பது… தலீத் இளைஞர்களை காதலித்தால் இப்படித்தான் பாடாய்ப்படுவீர்கள்… அவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று ஒரு தவறான பரப்புரை, செய்து தவறான மதிப்பிடலை முன்னிறுத்துவதாகவே நான் உணர்கிறேன். ஏனெனில்… இந்தக் கதையை வெறுமனே ஏழை, பணக்காரக் காதலாகவே எடுத்துவிட முடியும்…

எதற்காக இந்தப்படத்திற்கு சாதி… ?

படைப்புகளும் படைப்பாளிகளும் ஓரளவிற்கேனும் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். சாய்ரட் படத்தை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எடுத்து வெளியிட பெரும் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. ஒரு பெரிய கம்பெனி நான்கு தென்னிந்திய மொழிகளின் உரிமையை வாங்கி விட்டது என்று சொல்கிறார்கள்.

கலையின் மூலமாக

தவறான மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிப்பதும்..

விஷ விதைகளை விதைப்பதும்…

படைப்பாளிகள் தங்களுக்கு செய்யும் துரோகம்.

தங்கள் படைப்புகளுக்குச் செய்யும் துரோகம்.

இந்த சமூகத்திற்கு செய்யும் துரோகம்.

இந்திய நாட்டிற்கு செய்யும் துரோகம்.

இது ஒரு சம்பவம்… ஒரு செய்தியின் அடிப்படையில் மட்டுமே இந்த படத்தை எடுத்திருக்கிறேன் என்று நாகராஜ் மஞ்சுளே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால்… ஒரு காட்டுமிராண்டித்தனத்தை பதிவு செய்தவர், நான் குறிப்பிட்டிருக்கும் விசயங்களை, உளவியல்களை கள்ளத்தனமாக செய்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். தமிழுக்கு இந்தக் கதையை மாற்றுபவர்கள் நான் மேற்குறிப்பிட்டுள்ள விசயங்களில் சிறப்புக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

நாகராஜ் மஞ்சுளே இதை கள்ளத்தனமாக செய்திருக்க மாட்டார் என்று நிஜமாகவே நம்புகிறேன். கள்ளத்தனமாக செய்திருந்தாலும் நல்லத் தனமாக செய்திருந்தாலும் என் பார்வையில் “இப்படியும்” தோன்றியது என்பதை என் தனிப்பட்ட கருத்தாகவே பதிவு செய்கிறேன்.

– முருகன் மந்திரம்

5 Comments
 1. Suman says

  நீங்கள் நடத்துவது சினிமா இணையதளமா இல்லை ஜாதி சங்கமா.

 2. Raj says

  Avanaa Nee?

 3. சுகுமாரன் க says

  அழகான விமர்சனம்.

  -பொடிப்பையன்… கதாநாயகனை விட ரொம்பவே சிறியவன்.. கதாநாயகன் வீட்டுக்கு தேடி வந்து… அப்பா, அம்மா, தங்கை முன்னிலையில் கதாநாயகனை கன்னத்தில் ஓங்கி அறைகிறான். அவனும் வாங்கிக்கொண்டு எந்த உணர்ச்சியும் இல்லாமல் அப்படியே நிற்கிறான். அவனிடம் சிறிய அளவில் கூட எதிர்ப்புணர்ச்சி இல்லை. காட்டவில்லை.-

  நீங்க சிட்டியில வளர்ந்தவரா என்பது எனது முதல் கேள்வி. நிஜம் தங்களுக்கு உரைக்கவில்லை. ஜாதி என்பதற்கு அடுத்தது மெஜாரட்டி. அதாவது பெரும்பாண்மையினர். பல கிராமங்களில் உயர் ஜாதியினர் அதிகளவில் சுற்றுப்புற கிராமத்திலும் இருக்கிறார்கள். அது போல அவர்கள் வசதி படைத்தவர்கள். கதை நாயகன் ஏன் எதிர்ப்பு காட்டவில்லை என்பதுதானே தங்களின் கேள்வி. கதை நாயகன் அந்தப் பொடிப்பையனை அடிக்க நொடிப்பொழுது தாண்டாது. அல்லது போலீஸில் புகார் தரலாம். அதன்பிறகு ஊரில் உள்ள பெரும்பாண்மையினர் ஒன்று சேர்வர். நாயகனின் வீட்டோடு தாழ்த்தப்பட்ட அனைவரின் வீடுகளையும் அடித்து நொறுக்குவர். பின் போலீஸிடம் பண செல்வாக்கை காட்டி புகாரையை மாற்றுவர். இதுதான் இங்கு பல காலமாக நடக்கிறது.

  சில இடங்களில் ஊர் கலவரம் நடக்கிறதை கேள்விப்பட்டிருப்பீர். அங்கு தாழ்த்தப்பட்டவர்கள் ஓரளவு அதிகமாக இருப்பர். ஓரளவிற்கேணும் அதிகமாக தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் நியாயத்தை தடடி கேட்கலாம். ஆனால அப்படி பல இடங்களில் இல்லை. இதுதான் உண்மை.

  1. eugenemathew says

   Ithu oru mosamana vemmarchanam……. உடுமலை பேட்டை சம்பவம் நினைவிருக்கிரதா….

 4. eugenemathew says

  Mr.sugumar ku wises

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Saaindhaadu movie song ‘Ghazal Mazhaiye’

Close