போற இடத்துக்கெல்லாம் கூட்டம் வரணும்! பொலிட்டீஷியன்களை மிஞ்சிய சந்தானம்!
சொடக்கு போட்டால், உட்கார்ந்திருக்கிற இடத்தையே மாநில மாநாடு ஆக்கிக் காட்டுகிற அளவுக்கு திமுக கெத்து இருந்தும், அமைதியே நிம்மதி. அடக்கமே சன்னதி என்று இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஆனால், தான் போகிற விழாக்களுக்கெல்லாம் ரசிகர்களையும் முன் கூட்டியே வரவழைத்து விசிலடிக்க வைத்து இன்பம் காண்கிறார் சந்தானம்.
பட்… காலத்தின் கோலம், இருவருமே பிரண்ட்ஸ்.
ஓ.கே. ஓகே. விஷயத்துக்கு வருவோம். கடந்த சில தினங்களுக்கு முன் பிரசாத் லேப் என்ற சிறிய இட அமைப்புள்ள தியேட்டரில், ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. மேலே சொன்னது போல திரட்டி வரப்பட்ட ரசிகர்கள், சந்தானத்தின் முகம் திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரின் சுற்று சுவரே இடிந்துவிழுகிற அளவுக்கு கத்தி தீர்த்தார்கள். பாதி பேர் அங்கிருந்த பத்திரிகையாளர்களின் சட்டையை இழுத்து மூக்கை துடைத்துக் கொள்ளாத குறை.
நல்லவேளை… ஒரு பக்கம் இப்படி ஆர்வக்கோளாறாக நடந்து கொண்டாலும், நன்றி சொல்கிற விதத்தில் நிஜமாகவே கைதட்ட வைத்தார் சந்தானம். தனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பு கொடுத்த சிம்புவை அவர் எல்லா மேடைகளிலும் வணங்குவது வழக்கம். இந்த மேடையில் அந்த வணக்கம் இன்னும் அடர்த்தியாக இருந்தது. “மற்றவங்களுக்கு சிம்பு எப்படியோ? ஆனால் என்னை பொருத்தவரைக்கும் அவர்தான் என் காட் ஃபாதர்” என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.
‘சக்கப்போடு போடு ராஜா’வில் சந்தானம் ஹீரோ என்பதால், காமெடிக்கு விவேக்கை உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் விவேக் நடிக்க வேண்டும் என்று நினைத்ததும் நேரே விவேக் வீட்டுக்கே போய்விட்டாராம் சந்தானம். “நீங்க என் படத்தில் நடிக்கணும். ஒரு காட்சியில் கூட உங்களை மரியாதை குறைவா நடத்த மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்தாராம். அதற்கப்புறம்தான் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறார் விவேக்.
சரி… எஸ்.டி.ஆர் போட்ட பாடல்கள் எப்படி? பேசாம அவர் இந்த வேலையை மட்டும் உருப்படியாக பார்க்கலாம் என்கிற அளவுக்கு ஸ்வீட்…!