சரவணன் இருக்க பயமேன் / விமர்சனம்
கடல் மணல்ல கொழுக்கட்டை பிடிக்கணும்னு ஆசைப்பட்டால், விரலுக்குதான் வீக்கம் வரும்! கிட்டதட்ட அப்படியொரு நிலைக்கு ஆளாகியிருக்கிறார் கழகத்தின் வருங்கால வைப்பு நிதியான உதயநிதி! எழில் என்கிற காலி டப்பாவுக்குள், வாசம் போன பெருங்காயமாக அடைக்கலம் ஆகியிருக்கிறார்கள் இப்படத்தில் நடித்த அத்தனை பேரும்! விளைவு? ஒருவருக்கும் பத்து பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத படமாக வந்திருக்கிறது ச.இ.ப!
உதயநிதி மாதிரியான பெரும் செல்வந்தர்கள், பணத்தை எண்ணி படத்தில் போடுகிற நேரத்தில் கொஞ்சத்தை நல்ல கதை கேட்பதற்காகவும், நல்ல இயக்குனர்களை தேடி பிடிப்பதற்காகவும் ஒதுக்கியிருந்தால், இப்படியொரு ஓனிக்ஸ் வண்டி, ரெட் ஜயன்ட் வாசலில் வந்து பஞ்சராகி நின்றிருக்க துளி கூட வாய்ப்பில்லை. பட்… காலம் -கெரகம் -துயரம் -துன்பம், எழில் என்கிற ‘லாங் லாங் எகோ’ இயக்குனரை உதயநிதிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.
நல்லவேளை… ரெஜினா என்ற சிக்கன் சிக்ஸ்ட்டீ பைவ் இருப்பதால், கொஞ்சூண்டு விமோசனம்!
ஊரில் வெட்டியாக சுற்றிவரும் உதயநிதி தந்திரமாக சூரிக்கு கிடைக்க வேண்டிய தேசிய கட்சியின் பதவி ஒன்றை கைப்பற்றுகிறார். இந்த நேரத்தில் சூரியை நைசாக ஒட்டகம் மேய்க்க துபாய்க்கு அனுப்பிவிடுகிறார்கள். திரும்பி வரும் அவருக்கு கட்சிபதவியை விட்டுக் கொடுக்காத உதயநிதி, கட்சி பணியையும் காதல் பணியையும் எப்படி ஒரு சேர காப்பாற்றுகிறார் என்பது ஒரு பகுதி.
இவர் காதலிக்கும் ரெஜினாவை, அவருடைய அப்பா மன்சூரலிகான் சாம்ஸ்சுக்கு கட்டித்தர துடிக்க… அதை சிருஷ்டி டாங்கே ஆவியின் உதவியுடன் எப்படி முறியடிக்கிறார் உதயநிதி என்பது செகன்ட் ஹாப் வளவள…
இது அரசியல் படமாக துவங்கி, காதல் படமாக மாறி, நடுநடுவே ஆவிப்படமாக உருமாறி, கடைசியில் ‘நாலும் கெட்டான்’ வகையில் முடிவதுதான் படுபயங்கர ஷாக். இந்த லட்சணத்தில் ஆவி சென்ட்டிமென்ட் வேறு. (அந்த ஆவிதான் எல்லார் மீதும் ஏறுகிறதே… அப்படி ஏறி தினமும் போய் அம்மா கையால் சாப்பிட்டு தொலைய வேண்டியதுதானே?)
உதயநிதியின் நடிப்பில் பெரிய ஸ்பார்க் இல்லையென்றாலும், இந்த படத்திற்கு இது போதும் என்கிற வகையில் ஓ.கே தான். பாடல் காட்சிகளில் முன் எப்போதும் விட நன்றாக ஆடியிருக்கிறார். பைட் சீன்களும் காமெடி வகையில் சேர்ந்து கொள்வதால், ஜஸ்ட் பாஸ் என்கிற வகையிலேயே அதையும் டீல் பண்ணுகிறார்.
ரெஜினா எப்போதும் சண்டைக்கோழியாக முறைத்துக் கொண்டே திரிந்தாலும், கனவுக்காட்சி வேறு… நிஜக்காட்சி வேறு என்று டிபரன்ஸ் காட்டி துன்புறுத்தாமல் எல்லா காட்சியிலும் ‘காத்தாட’ வருவது கண்கொள்ளா மிரட்சி.
சிருஷ்டி டாங்கேவும் உதயநிதியும் காதலிக்கிறார்கள். பின் இறந்துவிடும் சிருஷ்டி ஆவி, உதயநிதி கண்ணுக்கு தெரியவர… உன் ஆவியை ரெஜினா உடம்புக்குள் கொண்டு போ. ரெண்டு பேரும் குடும்பம் நடத்தலாம் என்று ஐடியா போடுகிறார் உதயநிதி. (உஸ்…யப்பா முடியல!) தண்ணிக்குள் போட்ட முட்டைகோஸ் போல தளதள சிருஷ்டி, கவர்வதால் சற்றே நிம்மதி.
இந்தப்படத்தில் சூரி இருக்கிறார். ஐயோ பாவம். அவர்தான் என்ன செய்வார்? சப்பாத்தி மாவில் இடியாப்பம் செய்ய சொன்னது போல சரியான நெருக்கடி அவருக்கு! இருந்தாலும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.
யோகிபாபு மட்டும் தன் பேச்சு திறமையால் தியேட்டரை கட்டிப் போடுகிறார். என்னாவொரு டைமிங்? சிறப்பு…
சாம்ஸ், மன்சூரலிகான், ரோபோ சங்கர், ரவிமரியா என்று சுமார் ஒரு டசன் நடிகர்கள் ஆவி போக கத்தி தீர்க்கிறார்கள்.
‘லாலா கடை சாந்தி’ என்று ஒரு பாடலில் தியேட்டரை ஆட விட்டிருக்கிறார் டி.இமான். இதற்கு ஆடிய நடிகை நிஷா, இதற்கு முன் பல படங்களில் பல்லாயிரம் முறை ஆடி ரசிகர்களை அலுத்துப்போக வைத்தவர். இந்த நல்ல ட்யூனுக்கு காஸ்ட்லியான ஒரு ஆட்டக்காரி கூடவா கிடைக்கவில்லை எழில்? (பர்ஸ்ட் காப்பி சிக்கனம், ஹ்ம்ம்…)
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ புகழை வச்சு, ‘பணம்னு வந்துட்டா கொள்ளைக்காரன்’ ஆகியிருக்கிறார் எழில்! சினிமாவை கொஞ்சமாவது நேசிங்கய்யா…
இல்லேன்னா…. ‘நல்ல நல்ல இயக்குனர்கள் இருக்க எழில் ஏன்’ என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிற காலம் வரும்!
ஸோ சேட்!
-ஆர்.எஸ்.அந்தணன்
https://www.youtube.com/watch?v=zME2XilCFGw