சிம்பு- ஜி.வி.பிரகாஷ் மோதல்? தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து!
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்திற்கு பிறகு, ‘நானும் ஹீரோதான்…’ என்று கான்பிடன்ட்டாக களம் இறங்கிய ஜி.வி.பிரகாஷின் இன்றைய நிலைமை? கொக்கு தலையில் வெண்ணை இல்லை… வெறும் சுண்ணாம்பாகிவிட்டது. அந்த கதையை இன்னொரு செய்தியாக வைத்துக் கொள்வோம். இப்போது இவருக்கும் சிம்புவுக்கும் என்ன பிரச்சனை? அதை பார்க்கலாம்.
மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தை த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் அல்லவா? இந்த படம் முடிவாகும் முன்பே, தனக்கு வாயப்பளித்த முதல் தயாரிப்பாளருக்கு ஒரு படம் இயக்கித்தர நினைத்தாராம் ஆதிக். அதில் ஜி.வி.பிரகாஷ் திரும்பவும் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. இதற்காக ஜிவியிடம் முறைப்படி ஒப்பந்தம் போட்ட மேற்படி தயாரிப்பாளர் ஸ்டீபன், இந்த ஜுலையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு கால்ஷீட் வாங்கி வைத்திருந்தாராம். இந்த நிலையில்தான் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக இருந்த வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் அதிலிருந்து விடுவிக்கப்பட, உள்ளே நுழைந்தார் ஆதிக்.
சிம்புவும் அதே ஜுலையில் தேதி கொடுக்க, சிம்பு ஒஸ்தியா, ஜி.வி.ஒஸ்தியா என்று கணக்கு போட்ட ஆதிக், ஜி.வி.பிரகாஷ் படத்தை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு, சிம்பு படத்திற்கு போய்விட்டாராம். (சிம்புதான் ஒஸ்திங்கிற படத்தில் நடிச்சுருக்கார். அதனால் அவர்தான் ஒஸ்தின்னு கூட நினைச்சுருக்கலாம்) தன்னால் அறிமுகமான ஒரு டைரக்டர், தனக்கே தண்ணி காட்டுவதை எண்ணி வேதனைக்குள்ளான ஸ்டீபன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டாராம்.
ஆதிக்- ஜி.வி.பிரகாஷ் இருவரையும் நம்பி இதுவரைக்கும் இரண்டு கோடி செலவு பண்ணிட்டேன். ஆதிக் ரவிச்சந்திரன் அந்த பணத்தை கொடுத்துவிட்டு, சிம்பு படத்தை இயக்கப் போகட்டும் என்பதுதான் புகாரின் சாரம்சம் என்கிறார்கள். இவர்களின் பஞ்சாயத்து இப்படி கட்டி உருளும் கட்டத்தை நோக்கி நகர, ஜி.வி.பிரகாஷ் ஒரு ஐடியா செய்தாராம். “உங்க படத்துக்கு பதினைஞ்சு நாள். என் படத்துக்கு பதினைஞ்சு நாள். இப்படி மாறி மாறி நடிச்சுக் கொடுப்போமோ” என்று சிம்புவிடம் கேட்க, அவரிடமிருந்து பதிலா வரும்?
மாதம் முழுக்க கால்ஷீட் கொடுத்தாலே, மதியம் நாலு நாள், ராத்திரி மூணு நாள் வர்ற ஆளிடம், பதினைஞ்சு பதினைஞ்சா பிரிச்சுக்கலாம் என்றால்…
ஹ்ம்… இப்படியாக உருவாகிக் கொண்டிருக்கிறது இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க படங்கள்!