இத வச்சு எப்படிதான் செல்ஃபி எடுத்தாங்களோ? சிவகார்த்திகேயன் வியப்பு!

செல்போனில் ‘முன் கேமிரா’ வந்தாலும் வந்தது. பின்னாலிருக்கும் ஆபத்தே தெரியாமல் பிடறி அடிபட விழுந்து, இறைவனடி சேர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. கடல் அலையோடு செல்பி எடுத்தவன், கடலோடு போன கதையும், மலை உச்சியில் செல்பி எடுத்தவன், மறு ஜென்மம் தேடிப் போனக் கதையும் அன்றாட நியூஸ் ஆகிவிட்டது.

மனுஷன் டிரஸ் இல்லாம கூட இருந்திடுவான். கேமிரா போன் இல்லாமல் இருக்கவே மாட்டான் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட நமக்கு பெரும் வியப்பாக அமைந்திருக்கிறது அந்த கேமிரா அருங்காட்சியகம். சென்னை விஜிபி கடற்கரையில் இந்த அருங்காட்சியத்தை நிர்மாணித்திருக்கிறார் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர்.

அந்த காலத்துல லூமியர் சகோதரர்கள் பயன்படுத்திய கேமிராவின் மாதிரி வடிவம் ஒன்றை வைத்திருந்தார்கள். புயல் வெள்ள நேரத்தில் ஒரு குடும்பமே அதற்குள் ஒதுங்கி சமைத்து சாப்பிட்டு நிம்மதியாக உறங்கிவிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு பெரிசு! இந்த அருங்காட்சியத்தை துவங்கி வைக்க வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கேமிராவை பார்த்துவிட்டுதான் அதிகம் வாயடைத்துப் போனார். இவ்ளோ பெரிய கேமிராவை வச்சு எப்படிதான் அந்த காலத்துல செல்பி எடுத்துகிட்டாங்களோ? என்று அவர் கூற, வந்திருந்த அத்தனை பேரும் கெக்கே பிக்கே என்று சிரித்தார்கள்.

இந்த கேமிரா மட்டுமா அங்கு இருந்தது? முதல் 3டி கேமிரா, பிஸ்டல் கேமிரா, வக்கிங் ஸடிக் கேமிரா, என்று வரிசை கட்டி வைத்திருந்தார்கள். அதிலும் இந்த பிஸ்டல் கேமிரா இருக்கிறதே… பகீர் டைப். ஒருவனை சுடும்போது தோட்டா அவன் உடம்பில் பாய்கிற அந்த கடைசி நிமிஷம் அவன் கண்ணில் தெரியும் மரண பீதியை எடுக்குமாம். அதற்கப்புறம்தான் இதிலிருந்து குண்டு பாயுமாம்.

ஹிட்லர் கால கேமிரா ஒன்று… தீப்பெட்டி சைசில் இருக்கும் இந்த கேமிராவை புறாவின் கழுத்தில் கட்டிவிட்டுதான் எதிராளி படையை போட்டோ எடுக்க வைப்பாராம் ஹிட்லர். ஒரு முறை பறக்க விட்டால், ஒரு முறைதான் படம் எடுக்குமாம் இது. ஹிட்லரின் போரில் பெருமளவுக்கு கை கொடுத்தது இந்த கேமிராவும், அப்போது பறந்த புறாக்களும்தான்.

நாம் ஆரம்பத்தில் சொன்ன அந்த பெரிய்…ய கேமிராவின் பெயர் மம்மோத். இதே அருங்காட்சியத்தில் பதினொரு கிராம் எடையுள்ள கேமிராவும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான கேமிராவை வைத்து பிரமிப்பூட்டியிருக்கும் ஸ்ரீதர், இந்த அருங்காட்சியத்தை திறந்து வைக்க, பி.சி.ஸ்ரீராமை அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும். அதை திருத்தமாக செய்திருந்தார் அவர். இங்கு வந்து எல்லா கேமிராவையும் வியப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருந்த பி.சி., தனியா இன்னொரு நாள் வந்து ஒவ்வொரு கேமிராவையும் அனுபவிச்சு பார்க்கணும் என்றார்.

சென்னை மட்டுமல்ல, சிங்கப்பூர், ஐதராபாத், பெங்களூர் என்று இந்த அருங்காட்சியகத்தை பல இடங்களில் திறக்கப் போகிறார் ஓவியர் ஸ்ரீதர்.

செல்போனை வச்சுகிட்டு ‘கிளிக்கு கிளிக்கு’ன்னு பந்தா பண்றவங்களுக்கெல்லாம், தெரியட்டும்… இந்த கையடக்கக் கேமிராவின் பிரமாண்டமான வரலாறு!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காக்க காக்க பார்ட் 2 வேகம் பிடிக்கும் முயற்சி!

கலி காலம், பனி காலம் மாதிரி, இது பார்ட் 2 காலம் போலிருக்கிறது. டப்பா படமாக இருந்தாலும், அப்படம் முடியும் போது பார்ட் 2 வுக்கான ஒரு...

Close