கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரம்! மனம் திறந்தார் சிவகார்த்திகேயன்!
“என்னடா… அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ் பாண்டே, நேற்று சிவகார்த்திகேயனையும் பேட்டியெடுத்தார்.
குழந்தையின் தொட்டிலை இதமாக ஆட்டுகிற மாதிரியான தாலாட்டுதான் அந்த முழு பேட்டியுமே! பாண்டேவின் அடிக்கெல்லாம் சிவா தாங்க மாட்டார் என்பதை ஊர் உலகமே அறியும். அதை மனதில் கொண்டே சாதுவாக கேள்வி கேட்டு சமர்த்துப் பிள்ளையாக அனுப்பி வைத்தார் சிவகார்த்திகேயனை.
அவர் ஏன் அழுதார் என்பதுதான் அந்த பேட்டியின் பிரதான கேள்வி. ஆனால் சாமர்த்தியமாக அதை கடந்தார் சிவா. ஆனால் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு அவர் சொன்ன பதில், சிவாவுக்குள்ளிருக்கும் ஒரு மனிதாபிமானியை அடையாளம் காட்டியது. “அந்த சம்பவம் நடந்த பிறகு நான் காவல் துறையில் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் நான் கொடுக்கல. இத்தனைக்கும் என்னை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க வசதியாக வீடியோவெல்லாம் இருந்திச்சு. ஆனால் நான் புகார் கொடுக்கல.
“எங்கப்பா சிறைத்துறை அதிகாரியாக இருந்தப்ப நான் ஜெயிலுக்கு போய் பார்த்திருக்கிறேன். ஜெயில் வாழ்க்கை என்பது எவ்வளவு கொடூரமானது, அங்கேயிருந்து வெளியில் வர்றவங்க அதற்கப்புறம் என்ன மனநிலையோடு வர்றாங்க என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அதனால்தான் நான் அப்படியே அதை மறந்துட்டு என் வேலையை பார்க்க போயிட்டேன்” என்றார்.
அந்த பேட்டி முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் சொல்ல வந்தது ஒன்றே ஒன்றுதான். “நான் சண்டை சச்சரவை விரும்பாதவன். எல்லாருக்கும் நல்லவனா அன்பானவனா இருக்கணும். அது போதும்” என்பதுதான்!
அப்படியே ஆகட்டும் சிவா!
To listen audio click below:-