சைனாவுலேயும் நம்ம படம்! எஸ்.ஜே.சூர்யா குஷி
கதை திரைக்கதை இயக்கம் இவற்றுடன், நட்பு என்கிற நாலாவது ஐட்டத்தையும் சேர்த்துக் கொண்டால், அதுதான் தமிழ்வாணன்- எஸ்ஜே.சூர்யா ஸ்பெஷல். இத்தனைக்கும் தமிழ்வாணன் இயக்கி எஸ்.ஜே.சூர்யா நடித்த கள்வனின் காதலி, அவ்வளவு சிறப்பான படமெல்லாம் இல்லை. அதற்கப்புறம் ‘மச்சக்காரன்’ என்ற படத்தையும் இயக்கி ‘நான் இன்னும் மங்கிப் போகல’ என்று நாட்டுக்கு சொன்னவர் தமிழ்வாணன்.
பல வருடங்கள் கழித்து இருவரது நட்பும் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு திரும்பியிருக்கிறது. இந்த முறை எல்லாமே ஸ்பெஷல்தான். முக்கியமாக இவர்கள் காம்போவில் வரப்போகும் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். (இதைவிட பொருத்தமாக ஒரு தலைப்பு வைக்கவே முடியாதுல்ல?) அமிதாப் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் படமும் இதுவேதான்.
இந்தப்படம் குறித்த அறிவிப்பை பிரஸ்சிடம் பகிர்ந்து கொண்டார் எஸ்.ஜே.சூர்யா.
“நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் ‘உயர்ந்த மனிதன்’. இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்த படத்துக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவர்களுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே தெம்பை கொடுத்தது. இந்த படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சைனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது” என்றார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.