ஸ்கெட்ச் / விமர்சனம்

கதைக்காக உயிரையும் கொடுப்பார்… கதை கேட்காமல் நடித்து உயிரையும் எடுப்பார்… என்று இருவேறு பிம்பங்கள் உண்டு விக்ரமுக்கு! இதில் ‘ஸ்கெட்ச் ’ எவ்வகை என்பவர்களுக்கு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு குங்குமத்தின் கலரை ஆராய்ந்த எபெக்ட்தான் வாய்க்கும். ஏன்? அதற்கு நீங்கள் ஸ்கெட்ச் பார்த்திருக்க வேண்டும் முதலில்.

பைனான்ஸ் பணத்தில் கார் வாங்கும் நபர்கள் அதை கட்டாமல் விட்டால், அவர்களுக்கே தெரியாமல் காரை லபக் செய்து பைனான்ஸ் கம்பெனியிடமே திரும்ப சேர்க்கும் தொழில்தான் ஸ்கெட்சுக்கு. (படத்தில் விக்ரமின் பெயரே ஸ்கெட்ச் தான்ங்க) அப்படி அவர் தூக்குவது வடசென்னையையே கதி கலங்க வைக்கும் ஒரு ரவுடியின் காரை. ‘நம்ம காரு மேலேயே கைய வச்சுட்டானே’ என்று நறநறக்கும் ரவுடி, விக்ரமின் ஒவ்வொரு நண்பராக போட்டுத்தள்ள… கடைசியில் விக்ரம் முறை. ரவுடியிடமிருந்து விக்ரம் தப்பித்தாரா? நிஜத்தில் போட்டுத்தள்ளுவது யார்? இதெல்லாம்தான் மிச்ச மீதி.

அப்ப தமன்னா யார்? நடுவில் வரும் டூயட்டுகள் ஏன்?

அதெல்லாம், ரவுடியாக இருந்தாலும் காதலிப்பேன் என்று அடம் பிடிக்கும் தமிழ்சினிமா ஹீரோயின்களின் மெழுகு வார்ப்புதான் அன்றி வேறென்ன?

நீட்டிக்கப்பட்ட வாரண்டி பீரியடில் இருக்கிறார் விக்ரம் என்பது பளிச்சென தெரிந்தாலும், தன் நடிப்பாலும், நம்ப முடியாத துடிப்பாலும் மிரள விட்டிருக்கிறார் சீயான். முக்கியமாக சண்டைக்காட்சிகளில் அதே பழைய விக்ரம். புஜ பலங்கள் புடைசூழ போட்டு தாக்குறார் ரவுடிகளை. மறுபுறம் காதல். இங்குதான் ஒன்றுக்கு மூன்று மேக்கப் மேன்கள் தேவைப்படுகிறார்கள் அவருக்கு. இருந்தாலும் சமாளிப்ஸ்சில் சதம் அடிக்கிறார் மனுஷன். கடைசியில் அந்த ரவுடியை கொலை செய்யப் போடும் ஸ்கெட்ச், மெய்யாலுமே சூப்பர்மா!

தமன்னாவின் ‘விம் பார் வெளுப்பு’ இந்த படத்தில் இன்னும் ஓவர். ஹாலிவுட் படம் பார்க்குறோமோ என்கிற உணர்வை கூட ஏற்படுத்திவிடுகிறது அவரது நிறத் தோற்றம். பட்… இந்த ஐயராத்து பெண் வருங்கால மாமியாருக்கு முன் விக்ரமை நிறுத்தி, நான் இவரைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று சொல்வதெல்லாம் கொழுப்பும்மா கொழுப்பு.

பல படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீபிரியங்கா இந்தப்படத்தில் தமன்னாவின் தோழி. அழுத்தமான காட்சிகள் இல்லாவிட்டாலும் அவரது இருப்பு கவனிக்க வைக்கிறது.

மசாலா படங்களின் க்ளிஷே காட்சிகள் இப்படத்தில் தொடர்ந்தாலும், சில காட்சிகளில் ‘அட’ போட விடுகிறார் டைரக்டர் விஜய் சந்தர். முக்கியமாக விக்ரம் அந்த வடசென்னை ரவுடியை போட்டுத்தள்ளும் காட்சி. செம த்ரில். அதற்கப்புறம் அந்த க்ளைமாக்ஸ் சொல்லும் நீதி. படம் முழுக்க நம்மை திசை திருப்பி விடுகிற திரைக்கதை, க்ளைமாக்சில் வந்து வேறொரு ‘டேர்ன்’ அடித்து நிற்பது நிஜமாகவே அதிர்ச்சிதான். பலே விஜய் சந்தர்.

எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்கள் இனிமை. ஆனால் படத்தின் ஸ்பீடா மீட்டர் கேபிளை அறுத்துத் தள்ளுகிறதே… அதுதான் அண் சகிக்கபுள்.

ஒரு கண்ணை மூடி ஸ்டைலாக ஒரு கையை உயர்த்தி ஸ்கெட்ச் போடுகிறார் விக்ரம். ஒருவேளை இது நல்லாயிருக்கே என்பதற்காக கதை பண்ணியிருப்பார்களோ?

படத்தின் முக்கால்வாசி நேரம், வண்டியை சாவி போடாமலே உதைத்துக் கொண்டிருக்கிறார் டைரக்டர்! மீதி நேரம் செம த்ரில்லுடன் ஒரு விர்…….ர்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. senthil says

    good review. couple of fight scenes are good. but vikram seem to be getting older. regular kollywood masala, nothing to write about this sketch.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Oor Muttham Enna Vilai – Video | Enga Kaattula Mazhai

https://www.youtube.com/watch?v=2AXpBxA0tRc

Close