விஷாலை டென்ஷன் ஆக்கிய புஸ்ப்பா புருஷன்?
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கதையும் இல்லை. சதையும் இல்லை. ஆனால் நீதான் புஸ்ப்பா புருஷனா என்கிற ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு படத்தை ரணகள காமெடியாக எடுத்து, வெற்றிப்படமாகவும் ஆக்கிவிட்டார் எழில். அதற்கப்புறம் சில படங்கள் பிரஷ்ஷாக ரிலீஸ் ஆனாலும், வெள்ளைக்காரன் இன்னமும் தியேட்டரை விட்டு நகர்வதாக இல்லை. ஜனங்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குப் போய், கூட்டம் கூட்டமாக சிரித்தபடி திரும்புகிறார்கள். நிற்க!
இப்படி ஊரையே சிரிக்க வைத்த இந்தப்படம் ஒரு குரூப்பை மட்டும் கதற கதற அழ வைத்திருக்கிறது. இருபது நாள் வேஸ்டா போச்சு. பணம் வேஸ்ட். டைம் வேஸ்ட் என்று புலம்ப விட்டிருக்கிறது. அப்படியா? அதென்னய்யா அவ்ளோ பெரிய பஞ்சாயத்து?
“அட இந்த புஸ்ப்பா புருசன் இம்புட்டு வேலை பண்ணிட்டானேப்பா…” என்று பேஸ்த் ஆகிக்கிடக்கிறாராம் விஷால். எல்லாம் பாழாய் போன அந்த காமெடி டிராக்கால் வந்த வினை. ‘கத்தி சண்டை’ என்ற படத்தை சுராஜ் இயக்கி வருகிறாரல்லவா? இந்த படத்தில்தான் புஸ்ப்பா புருஷன் டைப்பில் ஒரு காமெடி டிராக்கை உருவாக்கியிருக்கிறார்களாம். விஷாலும் வடிவேலும் கலந்து கட்டி காமெடி பண்ணுவது போல எழுதி, 20 நாட்கள் ஷுட்டிங்கும் எடுத்து முடித்துவிட்டார்கள். இந்த நேரத்தில்தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் வெளியானது. நண்பன் விஷ்ணு விஷால் தயாரிச்ச படமாச்சே என்று ஆசை ஆசையாக தியேட்டருக்கு போன விஷாலுக்கு பலத்த அதிர்ச்சி. இருக்காதா பின்னே? அவர் இருபது நாட்களாக விழுந்து விழுந்து நடித்த காட்சிகள் எல்லாம் சூரி அண் கோ வடிவத்தில் திரையில் வர, யாரு யாரை காப்பியடிச்சாங்க என்ற பெரும் கோபத்தோடு வெளியே வந்தாராம். சுராஜிடம் கேள்வி மேல் கேட்டதுடன், “இருபது நாள் இப்படி வேஸ்டா போச்சே” என்று முணுமுணுப்புடன், “மொத்த புட்டேஜையும் தூக்கி எறிஞ்சுட்டு பிரஷ்ஷா வாங்க” என்று கூறிவிட்டாராம்.
அனுபவசாலிகளுக்கே ஆப்பம் சுட்டுத் தர்ற இண்டஸ்ட்ரி இது. உஷாரா இல்லேன்னா புஸ்ப்பா புருசனாட்டம் தெருத் தெருவா திரிய வேண்டியதுதான் போலிருக்கு.