ஸ்ருதியின் தொடர் தோல்வி சென்ட்டிமென்ட்! வேதாளம் டப்பிங்கில் அடக்க ஒடுக்கம்?
7ஆம் அறிவு, மூணு, பூஜை, என்று ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ் படங்களின் வெற்றி பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. மேற்படி படங்களை பொருத்தவரை பெருமாள் கோவில் பிரசாதமே கிடைக்கும் என்று நம்பியிருந்த தயாரிப்பாளர்களுக்கு, சுண்டு விரலில் ஒட்டிக் கொள்ள விபூதி கூட தேறவில்லை! கலெக்ஷன் அந்தளவுக்கு படு மோசம். தியேட்டருக்கு வந்த ஸ்ருதியின் கடைசி படம் புலி. அதன் ரிசல்ட் பற்றி அதிகம் விவாதிப்பது வெந்த புண்ணில் வெங்காயத்தை பிழிவதற்கு ஒப்பாகும் என்பதால் லீவ் இட்!
ஸ்ருதிஹாசனின் தமிழ்ப்பட சென்ட்டிமென்ட் இப்படி பூதாகரமாக இருப்பதால், சிவகார்த்திகேயன் படத்திலிருந்து அவர் திடீரென விலகியது குறித்து சம்பந்தப்பட்ட வட்டாரம் படு ஹேப்பியாக இருக்கிறதாம். நல்லவேளை… தெரிஞ்சே வுழுந்துடப் பார்த்தோம் என்று ஆறுதல் பட்டுக் கொள்கிறார்களாம். பிரச்சனை அதுவல்ல இப்போது.
அஜீத் ரசிகர்களுக்கும் இந்த சென்ட்டிமென்ட் ஜூரம் தாவியிருப்பதுதான் கொடுமை. ஸ்ருதி நடித்த படங்களுக்கெல்லாம் இப்படியொரு சென்ட்டிமென்ட் இருக்கே. தல புண்ணியத்தில் அதெல்லாம் தகர்க்கப்படுமா? என்பதுதான் அவர்களின் பெரும் பிரார்த்தனையாக இருக்கிறது. புலியின் பின்னடைவால் பெரும் சோகத்திலிருக்கும் ஸ்ருதியும், கடந்த நான்கு நாட்களாக எவ்வித குடைச்சலும் கொடுக்காமல் வேதாளம் பட டப்பிங் பணியில் பிசியாக இருக்கிறார். நடுநடுவே ஏதாவது கரெக்ஷன் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தனை டேக் வேண்டுமானாலும் பேசி ஒத்துழைக்கிறாராம்.
தெலுங்குல பொழியுற மழையை அப்படியே தமிழுக்கும் திருப்பிவிட்டால், ஸ்ருதிங்கிற பேருக்கு சீட்டெடுக்கிற எல்லா கிளிகளும் நிம்மதியா நெல்லு தின்னும்! ஜக்கம்மா காதுல விழுதா?