நடிகர் மாதவனுக்கு இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் நோட்டீஸ்!
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை!
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்தியாவின் ரகசியங்களை அந்நிய நாட்டுக்கு விற்றார் என்பதுதான் அவர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டு. பின்பு அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது நம்பி நாராயணனின் அனுமதியுடன் அந்த சம்பவங்களை திரைப்படமாக தயாரித்து அதில் நம்பி நாராயணன் கேரக்டரில் நடிக்கவும் முடிவு செய்திருககிறார் நடிகர் மாதவன். இந்த நிலையில் இந்தப்படத்தை நடிகர் மாதவன் தன் அனுமதியில்லாமல் தயாரிக்கக் கூடாது. அப்படி தயாரிப்பது நியாயப்படி குற்றம் என்று கூறி நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். இவர் பூ, களவாணி போன்ற படங்களுக்கு இசையமைத்ததுடன், கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து எஸ்.எஸ்.குமரன் சொல்வதென்ன?
இருபது ஆண்டுகளுக்கு முன்பே நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்திருந்தேன். சுமார் 20 எபிசோடுகள் வரைக்கும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட அந்த தொடர், பல்வேறு சட்ட சிக்கல்களின் காரணமாக வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நம்பி நாராயணனின் முழு சம்மதத்துடன் எடுக்கப்பட்ட அந்த தொடரினால் எனக்கு ஏராளமான பொருள் நஷ்டம். பல்வேறு சிக்கல்களை சந்தித்து நான் மீண்டு வந்திருக்கிறேன்.
என் நிலை குறித்து நான் மாதவனிடம் தெரிவித்த போதும் அவர் பிடிவாதமாக இந்தப் படத்தின் துவக்க விழாவை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த நிலையில் என் சம்மதம் இல்லாமல் நடிகர் மாதவன் நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பது நியாயம் இல்லை. எனவே அவர் மீது வழக்கு தொடர முடிவெடுத்திருக்கிறேன்.
இவ்வாறு எஸ்.எஸ்.குமரன் கூறியிருக்கிறார்.