எஸ்.எஸ்.ராஜமவுலியின் தம்பியும் இப்போ டைரக்டர்! குடும்பத்திற்கே மவுசு கூடிடுச்சு!
பாகுபலி பார்ட் 1, பார்ட் 2 கதை யார் தெரியுமா? அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பா கே.வி.விஜயேந்திர பிரசாத்! சென்னையில் வாழ்ந்த இவருக்கு தமிழ் அத்துப்படி. அதே போல இங்கிருந்த கல்கி, சாண்டில்யன், கோவி.மணிசேகரன் போன்ற சரித்திர எழுத்தாளர்களின் கதைகள் இன்னும் அத்துப்படி. அப்போது பாய்ந்த சரித்திர ரத்தம்தான், அவரை இப்போது மணி மணியாய் கதை வடிக்க கற்றுக் கொடுத்திருக்கிறது.
பாகுபலியின் வெற்றிக்குப்பின் ராஜமவுலியின் குடும்பம் பற்றி அறிய கூகுள் தேடல் நடத்திக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்தத் தகவல் புதுசாக இருக்கும். யெஸ்… அவரது தம்பி எஸ்.எஸ்.காஞ்சி தற்போது ஒரு தமிழ் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் காட்சி நேரம். இதே படத்தை தெலுங்கில் ஷோ டைம் என்ற பெயரிலும் இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் ஹீரோ… நம்ம பரத்!
இந்தப்படத்தை தயாரித்திருக்கும் ஜான் சுதிர் மிகப்பெரிய தொழிலதிபர். இந்தியாவிலிருந்து மென்பொருட்களை மட்டுமல்ல. விவசாய பொருட்களையும் உலக சந்தை படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் படங்களின் மீது தீராக் காதலில் இருக்கும் இவர் தொடர்ந்து மூன்று படங்களை தயாரிக்கிறார். அதில் ஒன்றுதான் இது. இன்னொரு படம் கடைசி பெஞ்ச் கார்த்தி. அதிலும் பரத்துதான் ஹீரோ.
“விட்டால் பாகுபலி மாதிரி கூட படம் எடுக்க ஆசைதான். எல்லாம் கூடி வரணும் இல்லையா?” என்று சிரிக்கும் ஜான் சுதிருக்கு, சரித்திரக் கதையை எடுக்கத் தெரிந்தவர்கள் ஒரு ரிங் கொடுத்துப் பார்க்கலாம்.
கரிகால் சோழனோ, ராஜராஜ சோழனோ… அவர் கனவில் போய் உசுப்பினால் கூட ஆச்சர்யமில்லை!