அறிமுக இயக்குனரின் படம்! மார்க் போட்ட சுந்தர்சி!
இம்மாதம் 29 ந் தேதி திரைக்கு வரப்போகும் புதிய படம் துருவங்கள் பதினாறு. அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. கோடம்பாக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இப்படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்று கூறி வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல இயக்குனர் சுந்தர்சி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் பேசும்போது, ” இந்தப் படம் தமிழில் அரிதான முயற்சி. இந்த வகையில் இதுவே முதல் படம் என்று கூறலாம். புதிய இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு 100 க்கு 100 மார்க் தரலாம். இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அருமை. படம் ஹாலிவுட் தரத்துக்கு உள்ளது. யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் அற்புதம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் படம் மனநிறைவு தரும். இம்மாதிரி இளைஞர்களை ஊக்கப்படுத்தினால் மேலும் நல்ல படங்கள் வரும்.படக் குழுவுக்கு பாராட்டுகள்” என்றார்.
பொதுவாக ஊடகங்கள் மார்க் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் படைப்பாளிகள், ஆனந்த விகடன் போடும் மார்க்கை மட்டும்தான் ஓரளவுக்கு நம்புகிறார்கள். இந்த நிலையில் ஒரு படைப்பாளியே இன்னொரு படைப்பாளிக்கு மார்க் போட்டிருப்பதை ஆச்சர்யத்தோடு கவனிக்கிறது கோடம்பாக்கம்.
திரையுலகத்தின் இந்த பாராட்டுகள் போதாது என்று தனிப்பட்ட முறையில் இப்படத்தின் திரைக்கதையை பார்த்துவிட்டு கதையை ஆர்டராக வரிசைப்படுத்தி எழுதி அனுப்புகிறவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்றும் அறிவித்திருக்கிறது இப்படக்குழு!
29 ந் தேதியே சீக்கிரம் வா…