சூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

கதை சொல்கிற ஸ்டைலில் ஒரேயடியாக ரசிகனை வீழ்த்திவிடுகிற அற்புதமான படைப்பாளிகள் கூட, கெட்ட வார்த்தைகளையும், ஆபாச அசிங்கங்களையும் கட்டவிழ்த்து விடுவதுதான் படைப்பு என்று நம்பியிருப்பதை என்னவென்று சொல்லி புலம்ப? ‘சூப்பர் டீலக்ஸ்’ அப்படியொரு ஆபாச அர்ச்சனை! அதிலும் மூன்று மணி நேரப்படம்! நகர்வேனா என்று அடம் பிடித்து பின்பு சுதாரித்துக் கொண்டு திக்கித் திணறி ஓடி முடியும்போது, ஒருவித அலுப்பு சுற்றி சுற்றி அடிக்கிறது. நம்ம சினிமாவுக்கு என்னதான் ஆச்சு?!

பிட்டுபிட்டான சம்பவங்களுடன் துவங்குகிறது படம். கணவன் வீட்டில் இல்லாத போது கல்லூரி காதலனை வீட்டுக்கு வரச்சொல்கிறார் சமந்தா. சில நிமிஷ சந்தோஷத்திற்கிடையில் கள்ள காதலால் சொல்லொணா துயரம் வந்து சேர, சமந்தாவின் நிலைமை சங்கடமோ சங்கடம்.

இன்னொருபக்கம் வீட்டை விட்டு ஓடிப்போன கணவன் ஏழு வருஷம் கழித்து திரும்பி வருகிறான். வீடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், வந்தவன் எப்படி வந்தான்? ஏன் வந்தான்?

வேறொரு கிளைக்கதையில் மூன்று விடலை பையன்கள் வீட்டுக்கு தெரியாமல் பிட்டு படம் பார்க்கிறார்கள். அதில் ஒருவனின் அம்மா அந்த ஆபாசப்படத்தில்! ஷாக் ஆகும் அவன் கோபத்தில் அம்மாவையே குத்தப்போகிறான். அப்போது அவனுக்கு நேரும் திடீர் இக்கட்டு என்ன?

இவர்களையெல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கிற சம்பவத்துடன் படம் முடிகிறது. தமிழ்சினிமாவில் இப்படியெல்லாம் படம் வரவில்லை என்று யார் அழுதார்கள்? நாடு இருக்கிற சுச்சுவேஷனில் நம்மை சுற்றி கட்டப்படுகிற இவ்வித கரையான் புற்றுகள் எந்த பாம்பை வளர்ப்பதற்கு? ஆயிரம் சந்தேகங்கள் எழுகிறது.

சரி… படத்திற்கு வருவோம். இந்த சமூகம் என்ன மாதிரியான இக்கட்டுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அதை சொல்வதற்கு தேர்வு செய்த கதையும் சம்பவங்களும்தான் அருவறுப்பு. பட்… இவரது அசாத்தியமான திரை மொழி மட்டும் நிமிஷத்துக்கு நிமிஷம் ‘அட்றா சக்க’ போட வைக்கிறது. படம் நெடுகிலும் வருகிற ஆபாச வசனங்களும் அதற்கு துணை தொங்கும் ‘உவ்வே’ டைப் காட்சியமைப்புகளும் தாங்கலடா சாமி!

பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள், சிறுவன் அஸ்வந்த், அப்புறம் அந்த மூன்று இளைஞர்கள் என்று கிட்டதட்ட எல்லாருமே மிரட்டியிருக்கிறார்கள். அந்த சிறுவனுக்கு மட்டும் மெடல்களும் விருதுகளும் குவியும்!

மேற்படி லிஸ்ட்டில் ஏன் விஜய் சேதுபதியை சேர்க்கவில்லை? காரணம் இருக்கிறது. புடவை கட்டியிருந்தால் திருநங்கை ஆகிவிடுவாரா? மேனரிசங்களில் திருநங்கையின் சாயல் துளி கூட இல்லை வி.சேவிடம். அட… கடை வாசலில் நின்று கைதட்டுகிற அந்த இடத்தில் கூட ஒரு திருநங்கையின் உடல் மொழியை கொண்டுவர முடியாதா? வேண்டுமென்றே அரைகுறையாக நடித்தாரா விஜய் சேதுபதி? டவுட்! மற்றபடி தன் இமேஜை முற்றிலும் அடகு வைத்து இப்படத்தில் இந்த கேரக்டரை செய்தமைக்காக கோடானு கோடி பாராட்டுகள் வாத்தியார்…!

தன் மகனுக்காக மருத்துவமனையில் கெஞ்சுகிற காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். பகவதி பெருமாளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிற காட்சியில் நம்மை நடுங்க வைக்கிறார் சமந்தா. மிஷ்கினின் அளவான நடிப்பு அசர வைக்கிறது.

படத்தில் எழுதப்பட்டிருக்கும் வசனங்களில் பல, நமக்கு ஒவ்வாமையை தந்தாலும் சில வசனங்கள் நெத்தியடி. குறிப்பாக கடவுள் குறித்த வசனங்கள். ஒரு தேர்ந்த தத்துவஞானியின் சிந்தனை நெருப்பு ஒவ்வொன்றும்.

யுவனின் பின்னணி இசையில் லயித்துப் போகிறோம். பல வருஷங்கள் கழித்து ராஜா வீட்டு சின்ன ராஜா கவனிக்க வைத்திருக்கிறார். பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவுக்குள் உயிரும் உணர்வுமாக ஐக்கியமாகியிருக்கின்றன சம்பவங்கள்!

ராஜவீதிகளில் கம்பீரமாக நடந்து வந்த தமிழ்சினிமா என்கிற திருவாரூர் தேரை, ஏதோ ஒரு மூத்திர சந்துக்குள் இழுத்து நிறுத்திய பெருமை இப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவைப் போய் சேரட்டும். அதே நேரம் இந்தப்படத்தை தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பு என்று கொண்டாடி இந்த மூத்திர சந்தில் மேலும் அசிங்கம் செய்யாதிருங்கள் தோழர்களே… அதுவே இதுபோன்ற சூப்பர் டீலக்சுகளை குட்டி போட விடாமல் தடுக்கும். ப்ளீஸ்…!

கடைசியாக ஒரு டவுட்! வாந்தியில் எந்த வாந்தி நல்ல வாந்தி?

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. taa ran tea no says

    உங்க விமர்சனம் பார்த்து ஒண்ணு சொல்ல தோணுது… “நல்லவன் வாரான், சொம்ப தூக்கி உள்ள வையி”ன்னு. நன்றி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீசையை ஒதுக்குறேன்னு மூக்கை நறுக்கிக் கொண்ட பாபிசிம்ஹா!

Close