நானும் இயக்குனர் மகேந்திரனும் – பத்திரிகையாளர் சு.செந்தில் குமரன்

”செந்தீல்ல்ல்லல்ல்ல்…..”

கண்களில் சற்றே கண்ணீர் ஊற கண்ணாடிப் பேழைக்கு மேல் நான் வைத்த மலர் மாலைக்கு நடுவில் அவர் முகத்தை பார்த்தபோது , மீண்டும் அவர் என்னை இனி அப்படி அழைக்க மாட்டார் என்பது உறைத்து வலித்தது.

பேச்சின் இடையே மிஸ்டர் செந்தில் என்ற வார்த்தையை சரியான இடைவெளியில் அவர் உபயோகிக்கும் அழகே அழகு . அந்த மென்மை கண்ணியம் , தள்ளி வைக்கும் அந்த வார்தைக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் .. மிஸ்டர் என்ற வார்த்தையை அவர் அளவுக்கு அழகாக யாரும் நானறிந்து பயன்படுத்தியது இல்லை

இயக்குனர் மகேந்திரன் !

1990 களின் மத்தியில் ஆனந்த விகடன் இதழுக்காக நான் அமைத்த சினிமாவுக்கு முதுகெலும்பாக இருப்பது எது ? என்றஒரு ‘பட்டி மன்றப் பேட்டி’யில் டைரக்ஷனே என்ற கருத்தியலில் வாதிடவே அவரை முதன் முதலில் சந்திக்கிறேன் .

அந்த சமயத்தில் அவரது ராஜா அண்ணாமலை புறம் வீட்டில் தென் மேற்கு மூலையில் இருந்த கெஸ்ட் ஹவுசில் பல விதமான சத்யஜித்ரே மற்றும் சாய்பாபா போட்டோக்களுக்கு மத்தியில் அமர்ந்து பேசினோம் .

அது ஒரு பொன்வேளையாக இருந்திருக்க வேண்டும் .

அப்போது முதலே என் மீது அளவற்ற அன்பை அவரும் அவர் மீது பூமி நிகர்த்த மரியாதையை நானும் வைத்தோம் .

நடிகர் நம்பியார் அவர்களை ஒரு முறை நான் எடுத்த பேட்டி நம்பியாருக்கு மிகவும் பிடித்த ஒன்று . எனவே அவருக்கு என்னை நினைவிருந்த சமயம் .

அந்த நேரத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழா ஒன்றில் நம்பியாரைக் கண்ட மகேந்திரன் , உணர்ச்சி வசப்பட்டு ” எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதர் நீங்கள் . உங்கள் காலத்தில் வாழ்வது எங்கள் பெருமை ” என்று நெகிழ்ந்து போய் சொன்னார் .

ஆனால் நம்பியார் அப்போது என்ன மூடில் இருந்தாரோ தெரியவில்லை . ஏவ்வ்வவ்வ்வ்.. என்று கிண்டலாக ஏப்பம் விட்டு விட்டு நகர மகேந்திரனின் முகம் வாடியது . சு.செந்தில் குமரன்

பொறுக்க முடியாத நான் ” என்ன சாமி .. அவர் அப்படி சொல்றாரு நீங்கள் கிண்டல் பண்றீங்க ?” என்று சொல்ல , ஒரு நிமிடம் என்னை வெறித்த நம்பியார் “ரிப்போர்ட்டர் சார் சப்போர்ட்டர் வேலைக்கு வர்றாரு .. என்னை மன்னிச்சிடுங்க டைரக்டர் சார்” என்று அதே கிண்டலும் கம்பீரமுமாய் மகேந்திரன் காலை நோக்கி கும்பிட்ட படி குனிய , மகேந்திரன் விலகி ஓட , கும்பிட்ட படியே நம்பியார் துரத்த , மகேந்திரன் ஓட , ஏக கலாட்டா .

இன்னும் நெருங்கினோம் …

மகேந்திரனும் நானும் பேசிய விசயங்கள் ஒவ்வொன்றும் வரலாறு .

முள்ளும் மலரும் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் அடப் பாவி என் பணத்தை எல்லாம் வீணாக்கிட்டியே என்று கொந்தளித்து திட்டியது அந்த படம் வெளிவர கமல் ஹாசனும பாலு மகேந்திராவும் செய்த உதவிகள்….

உதிரிப் பூக்கள் படத்துக்கு கதாநாயகி தேடி அலைந்தபோது , அஸ்வினியின் போட்டோ பார்த்து அவரை பார்க்க வேண்டும் என்று மகேந்திரன் சொல்ல, அவரது பெங்களூர் நண்பர் ஒருவர் . அந்த பொண்ணு நடிச்ச முதல் படம் ஓடல . அந்த பொண்ணை உன் படத்துக்கு கொடுத்து உன் படமும் ஓடாம போக காரணமாக இருக்க மாட்டேன் என்று மறுக்க,மகேந்திரன் கெஞ்ச , அவர் மகேந்திரன் மீது உள்ள அன்பின் மிகுதியால் மீண்டும் மறுக்க , மகேந்திரன் நிஜமாகவே தலையில் அடித்துக் கொண்டு அந்த பொண்ணு பொருத்தமா இருக்கும் என்று கெஞ்சி அப்புறம் பார்த்து , கதாநாயகி ஆக்கியது …சு.செந்தில் குமரன்

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் படப்பிடிப்பில் மூக்கு ஒழுகிக் கொண்டு இருக்கும் ஒரு குழந்தையை இயல்பாக ஒரு ஷாட் எடுக்க மகேந்திரன் சொல்ல, ” oh no its nasty ” என்று அசோக் குமார் மறுக்க, ”போடா பைத்தியக்காரா படத்துல பாத்துட்டு சொல்லு” என்று மகேந்திரன் திட்ட , சொன்னதுக்காக எடுத்துக் கொடுத்த அசோக் குமார் படத்தில் பார்த்து விட்டு மகேந்திரனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தது…

சுகாசினியை கதாநாயகியாக உணர்ந்த நிமிடம்… பருவமே புதிய பாடல் பாடு பாட்டில் அப்போதைய குமுதம் நிருபர் செல்லப்பாவை நடிக்க வைத்த போது நடந்த காமெடிகள் ..

கை கொடுக்கும் படத்தில் அவர் பட்ட சித்திரவதை …

சில நாட்கள் இன்னும் பின்னால்போகும் .. காஞ்சித் தலைவன் படப்பிடிப்பில் எம் ஜி ஆர் கலைஞர் இருவரையும் பேலன்ஸ் செய்த விதம்,

யாரும் (அல்லது பலரும்) அறியாத அவரது ஒரு காதல் …

”அய்யோ செந்தீல்ல்ல்ல்…. நல்ல நடிகரான ரஜினியை கெடுத்து வச்சாச்சு செந்தீல்ல்ல்”

இவை எல்லாம் நான் சொல்லி நீங்கள் கேட்டால் அது தகவல் .

மகேந்திரன் சொல்லிக் கேட்க வேண்டும் .. ஒவ்வொரு வார்த்தையும் கவிதை !

பல நாட்கள் காலை முதல் மாலை வரை பேசுவோம் . பேட்டி எல்லாம் இல்லை . சத்யஜித் ரே. சாந்தாராம், ஷ்யாம் பெனகல், குருதத் , ரித்விக் கட்டக், அகிரா குரோசேவா, ஹிட்ச் காக், பரதன், தகழி, எம் டி வி , … போய்க் கொண்டே இருக்கும்

புட்டபர்த்தி சாய்பாபாவின் கால் பாதம் புகைப்படம் ஒன்றையும் சாய்பாபா குனிந்து அமர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பொன் போல போற்றி வந்தார் . அந்த படங்களை அப்படி நேசித்தார் .

சாரு ஹாசன் மீது அவ்வளவு மரியாதை , வார்த்தைக்கு வார்த்தை சாரு அண்ணா… சாரு அண்ணா …

”பொறக்கறதுக்கு முன்ன வயித்துல உதைச்ச பொறந்த அப்புறம் நெஞ்சுல உதைக்கறியேடா … ” என்ற தங்கப் பதக்க வசனம் .. எப்படி சார் வந்துச்சு என்றேன் உணர்ச்சிவசப்பட்டு ஒரு முறை தற்குறியாய் ! போங்க செந்தில் என்று கூச்சத்துடன் வெட்கப்பட்டார் .

அவர் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா ? அது வேறொரு கவிதை .

அப்போதுதான் வயசுக்கு வந்த பெண் தனக்கு பிடித்த மாமனை பார்க்கும்போது படும் முதல் வெட்கம் எல்லாம் அதன் முன் ஒன்றுமே இல்லை .

அவருடைய 60 வயசு வரை அந்த வெட்கத்தை அவரிடம் நான் பார்த்திருக்கிறேன். சு.செந்தில் குமரன்

சற்றே தளர்ந்த நிலையில் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது, உதிரிப் பூக்கள் படத்தில் கடைசியில் அஞ்சுவும் ஹாஜாவும் ஓடும் ஷாட்டில் நிறுத்தி டைட்டில் போடும் இடம் என்னை எப்படி உருக்கியது என்று சொல்லும் போதே அழுது விடுவேன் .

நம்மை ஒரு சந்தோஷ கிண்டலோடு பார்ப்பார் . “விடுங்கப்பா நான் பண்ணதுலயே கம்மியான தப்பு உள்ள படம் அதுதான் ” என்றார் ஒரு முறை .

” உங்களை சந்தோஷமா திட்டனும் . எப்படின்னு தெரியல சார் ” என்றேன் நான் .

என்றும் மறக்கா கணங்கள் அவை .

சன் நியூஸ் தொலைக்காட்சியில் பள்ளிக் கூட மாணவ மாணவிகளை வைத்து நான் இயக்கிய சின்னச் சின்ன ஞாபகங்கள் நிகழ்ச்சிக்கு ஒரு முறை சிறப்பு விருந்தினராக வர வைத்தேன் .

பேட்டி மிக அற்புதமாக வந்தது .

ஜானியில் வரும் ஆசைய காத்துல தூது விட்டு பாடலின் முதல் பி ஜி எம் மை வைத்து நான் அந்த நிகழ்ச்சிக்கு உருவாக்கிய புரோமோ வை சன் டி வி யே கொண்டாடியது .

அவருக்கும் அவ்வளவு சந்தோசம் . இதுவரைக்குமான எனது சிறந்த பேட்டி அது என்றார் (2001)

அது ஒளிபரப்பான அடுத்த வாரம் நக்கீரன் கோபால் அண்ணனை அந்த நிகழ்ச்சிக்காக சந்தித்து பேசினேன் .

மகேந்திரன் பேட்டி அற்புதம்ணே … அதனாலேயே அந்த நிகழ்ச்சிக்கு வரணும்ணே என்று சந்தோஷமாக வந்தார் .

இன்னும் எவ்வளவோ .. சொல்லி முடியாதவை பல . சொல்ல முடியாதவை சில .

சாசனம் எடுக்கப்பட்ட சமயத்தில் அடுத்து NFDC தயாரிப்பில் எனது கதை ஒன்றை அவர் இயக்க முடிவு செய்து என் கதையை வாங்கி வைத்து இருந்தார் .

ஆனால் சாசனமும் NFDC யும் அவருக்கு தந்த அனுபவம் ..அந்த முயற்சி நடக்காமல் போனது .

இடையில் அவர் சொன்ன ஒன்றை அவர் நலன் கருதி நான் மறுக்க சந்திப்புகள் குறைந்து அப்புறம் நின்றே போனது .

நீண்ட இடைவெளிக்குப் பின்பு தெறி பட பூஜையில் ஒரு கிழக்கு கடற்கரை சாலை பங்களாவில் சந்தித்தோம். மீண்டும் பழைய உற்சாகத்தோடு பேசினார்

தெறி படத்தின் ஆடியோ விழாவில் மகேந்திரன் பற்றிய திரையிடலில் அவரது முள்ளும் மலரும் உதிரிப் பூக்கள் படக் காட்சிகள் திரையிடப்பட, என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் .

மேலே இருந்தே அதை கவனித்தவர் , கீழே இறங்கிப் போகும் போது கன்னத்தில் தட்டி விட்டுப் போனார் .

தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு முறை பிரசாத் லேப் விழா ஒன்றில் ” செந்தில் குமரன் நடிகர் ஆகிட்டார் . அண்ணாதுரை படத்தில் நல்லா நடிச்சு இருந்தார்” என்று சொல்ல ,

“அச்சச்சோ.. நான் பாக்கலையே . பார்க்கறேன் மிஸ்டர் செந்தில். வாழ்த்துகள் . நல்லா பண்ணுங்க ” என்றார் . [பார்த்தாரா தெரியவில்லை . நானும் கேட்கவில்லை . )

சேரனின் திருமணம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா .

நிகழ்ச்சி முடிந்து இறங்கிய மகேந்திரனிடம் வணக்கம் வைத்துவிட்டு “உடம்பை பார்த்துக்குங்க சார் “என்றேன் . ”ஏன் மிஸ்டர் செந்தில் .. இப்ப நல்லாதானே இருக்கேன் ” என்றார் .

“இன்னும் நல்லா பார்த்துக்குங்க சார்” என்றேன் சமாளிப்பாக .

பார்த்துக் கொண்டாரா தெரியவில்லை . இனி அந்த கேள்விக்கு அவசியம் இல்லை

அஞ்சலி மகேந்திரன் சார் . !

(இவ்வளவு பழகியும் அவருடன் நான் எடுத்த போட்டோ என்று எதுவும் என் கைவசம் இல்லை என்பது எனக்கு இன்னொரு சோகம் )

— சு.செந்தில் குமரன்

1 Comment
  1. RAJA MOHAMMED says

    ரஜினி கமலால் வாழ்ந்தாராம்… ஓங்கி விட்டேனு வை, மார்ஸ்லதான் போய் விளக்கு புடிக்கனும். கமலால் வீழ்ந்தவர்கள் வரலாறு எடுத்தா, முதல்ல கமல்ல இருந்து சமீபத்துல விஸ்வரூபம் 2 வால காணாமல் போன ரவிச்சந்திரன் வரை எடுக்கலாம். வெக்கமே இல்லாம வந்துரானுங்க மய்யத்துங்க..!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்

Close