தமிழ்சினிமா காதலும்… சகிக்க முடியாத பரிணாம வளர்ச்சியும்!

ஆண்டவன் ‘ஆக்ஷன்’ சொன்ன பிறகுதான் அந்த ஆதாமே, ஏவாளை ‘லுக்’ விட்டிருப்பார் என்று தோன்றுகிறது! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது லவ் என்கிற நீதியை, கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறது சினிமா.

சினிமாதான் காதலை பிறப்பிக்கிறது. சினிமாதான் காதலுக்கு நடைவண்டி வாங்கிக் கொடுக்கிறது. சினிமாதான் காதலுக்கு மராத்தான் ஓட கற்றுக் கொடுக்கிறது. சினிமாதான் ‘காதலுக்கு மரியாதை’ செய்கிறது. ஒரு காலத்தில் எஸ்.ஏ.சி பெரிய டைரக்டர். இப்போது அவரை எப்படி அடையாளம் சொல்கிறார்கள் தெரியுமா? “நம்ம விஜய் இருக்காருல்ல, அவருக்கு அப்பாடா…’’ என்று. பிரபு, சிவகுமாருக்கெல்லாம் கூட இதுதான் கொடுப்பினை! எது முன்னால் நிற்கிறதோ, மற்றதெல்லாம் ‘ஒரு காலத்தில் நாங்கள்லாம்…’ என்ற ஏக்கத்தில் தள்ளப்படுவது இயற்கைதானே? அந்த தியரிப்படி இன்று சினிமாதான் முன்னால் நிற்கிறது. அதன் கை பிடித்து நடக்கிறது பல பேருடைய காதல்!

‘அலைபாயுதே’ படத்திற்கு முன்பு வரை ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை அநேகமாக இருந்ததில்லை. “கல்யாணம் பண்ணிக்கலாம். நீ உன் வீட்டில் நீ இரு. நான் என் வீட்டில் இருக்கிறேன்” என்பது அந்த படத்தோடு போகவில்லை. அதற்கப்புறம் நிஜத்தில் ஆங்காங்கே புழங்க ஆரம்பித்தது. படம் வெளிவந்த வருஷம் 2000. அதற்கப்புறம் பதினைந்து வருஷம் கழித்து காதலுக்கு வேறொரு வர்ணம் அடித்தார் மணிரத்னம். ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், “நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிலேன்னு உத்தரவாதம் கொடுத்தால், சேர்ந்து வாழலாம்” என்கிறாள் காதலி. அலைபாயுதேவும் ஹிட்! ஓ காதல் கண்மணியும் ஹிட்! ஒன்று புரிகிறது. காதல் சீரான வேகத்தில் உருப்படாத திசை நோக்கி நகர்ந்து, எந்த நேரத்திலும் குப்பைத் தொட்டியில் விழத் தயாராகிக் கொண்டிருக்கிறது…

இந்த படம் வெளிவருவதற்கு முன்பு வரை, கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்வதாக காட்டப் போகிறார் மணிரத்னம் என்று கிசுகிசுக்கள் கிளம்பின. நல்லவேளை… அப்படியில்லை. ஒருவேளை இன்னும் பத்து வருஷம் போகட்டும். பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறாரோ என்னவோ?

ஒரு காலத்தில் பேட்டை ரவுடியாகவே இருந்தாலும் பெண் பார்க்கப் போகும்போது முடி வெட்டி, தலைசீவி, வெள்ளையும் சள்ளையுமாக போவான். இன்று குடித்துவிட்டு ‘ப்ரப்போஸ்’ பண்ணுகிறார்கள் இளைஞர்கள். ‘அலைபாயுதே’ மாதவன்களுக்கு காதல் மார்க்கெட்டில் இடம் இல்லை. பரட்டைத்தலை பருத்தி வீரன்களையும், எஸ்.எம்.எஸ் சக்திகளையும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் பெண்கள்.

ஒருவேளை ரோசப்பட்டு அரசே டாஸ்மாக்கை மூடினாலும், இந்த கண்றாவிக் காதலின் தாக்கம் இன்னும் இருபத்தைந்து வருடங்களுக்கு நீடிக்கும் போல தெரிகிறது.

தமிழ்சினிமாவில்தான் எத்தனையெத்தனை காதல்கள்? வளையல் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விதவிதமான வளையல்கள் போல ஆயிரக்கணக்கில் இருந்தாலும், ஏதோ ஒன்றிரண்டுதான் அசல் முத்து வளையல்களாக நம் கவனம் ஈர்த்தன. அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கோட்டை’ அப்படியொரு காதல் அனுபவம்! நாயகனும் நாயகியும் காதலிப்பார்கள். ஆனால் ஒருவர் முகம் இன்னொருவருக்குத் தெரியாது. அந்த கடைசி காட்சியிலாவது அவர்கள் சேர்வார்களா? மாட்டார்களா? என்ற ட்விஸ்ட்டை நமது நாடி நரம்புக்குள் ஏற்றி பதற வைப்பார் அகத்தியன். எல்லா தியேட்டர்களிலும், “அதோ பக்கத்திலேயே நிக்கிறானே, அவன்தான் உன் லவ்வர்” என்று தேவயானிக்கு கேட்கிற மாதிரி கத்தினார்கள் ரசிகர்கள். அதற்கப்புறம் இதே டைப்பில் ஏராளமான படங்கள் வந்தன. இங்குதான் ரப்பர் ஸ்டாம்ப் வியாபாரம் தெருவுக்கு தெரு சாத்தியமாச்சே?

காதலுக்காகவும் காதலிக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பேன் என்று சொன்ன படங்கள் சிவாஜி எம்ஜிஆர் காலத்திலேயே வந்திருந்தாலும், தன் சொந்த நாக்கை ‘காவு கொடுத்து’ முந்தைய எல்லா பெருமைகளையும் ஒரேயடியாக அழித்து சாய்த்த பெருமை, சசி இயக்கத்தில் வெளிவந்த ‘சொல்லாமலே’ படத்திற்கு உண்டு. பேரதிர்ச்சிக்குரிய படம் அது. ஒரு ஈ பறந்தால் கூட அதன் இறக்கை சப்தம் கேட்கிற அளவுக்கு நிசப்தத்தை தியேட்டருக்குள் ஏற்படுத்திய க்ளைமாக்ஸ் அது. கதாநாயகியை நேரில் சந்திக்கும்போது, ஊமை போல நடிப்பான் ஹீரோ. அதற்கப்புறம் அவள் இவனை காதலிக்க துவங்கிய பின், ஒருவேளை நாம் ஊமை இல்லை என்று தெரிந்தால் நம்மை பற்றி என்ன நினைப்பாள்? நம் காதல் என்னாவது? என்று பதறுகிற ஹீரோ, அவளுக்காக தன் நாக்கை கட் பண்ணிக் கொள்வதுதான் அந்த க்ளைமாக்ஸ். படம் வெள்ளி விழா கண்டது.

அதற்கப்புறம் வந்த பல படங்களில் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டினார்கள். கிட்னி, இதயம், நுரையீரல், கட்டைவிரல், காது என்று ஒன்றும் தப்பவில்லை! “இதற்கப்புறமும் வெட்றது மாதிரி படம் எடுத்தீங்கன்னா, மவனே… ஒரு பயலுக்கும் தல இருக்காது” என்று ரசிகர்கள் கொந்தளிக்கிற அளவுக்கு வெட்டித்தள்ளினார்கள். இது தமிழனுக்கேயுரிய ‘காப்பி’ ரைட்ஸ்!

‘இதயம்’ படத்தில் தன் காதலை சொல்ல தவியாய் தவிப்பார் முரளி. மொத்த படமுமே அதுதான். அந்த ஒரு படத்தில் மட்டுமல்ல, முரளி என்றாலே “மாங்கொட்டை மரமாயிடும்டா… அப்பவும் இவரு காதலை சொல்ல மாட்டாரு” என்று ரசிகர்கள் காத்திருப்பார்கள். இப்படியே பல படங்களை ஓட வைத்தது அந்த டைப் காதல். இப்போதெல்லாம் காதலிக்க ஒரு வினாடி போதும். கண்டதும் காதல் கான்சப்ட் அநேகமாக எல்லா படங்களிலும் இருக்கிறது. பாயும் புலி படத்தில் ரோடு கிராஸ் பண்ண உதவுவார் விஷால். உடனே காஜலுக்கு காதல் வந்துவிடும். கேமிராவில் ஸ்பீட் லென்ஸ் இல்லையென்றால், இந்த ஒரு வினாடி காதலை ஜீரணிக்கவே முடியாது. கண்கள் இமைப்பதையும், உதடு லேசாக துடிப்பதையும் பைக் கடந்து போவதையும் ஸ்லோமோஷனில் காட்டி இந்த ‘ஒரு வினாடி நூடுல்ஸ் காதலை’ உண்மை என்று நம்ப வைத்துவிடுகிறது சினிமா.

சினிமாவில் காதல் என்பது உப்பு மாதிரி. சமையலில் எது செய்தாலும், இதையும் கொஞ்சம் போட்டுக் கொள்வார்கள். ஆக்ஷன் படமாக இருந்தாலும் சரி, அழுகாச்சி படமாக இருந்தாலும் சரி, விசு டைப்பான குடும்ப படங்களாக இருந்தாலும் சரி, அந்த உப்பு இல்லாமல் எந்த பருப்பும் வெந்ததில்லை.

காதலனும் காதலியும் தொட்டுக் கொள்ளாமல், கனவுக் காட்சியில் கட்டிப்பிடித்து உருளாமல், அவ்வளவு ஏன்? நேருக்கு நேர் வளவளவென்று பேசக் கூட செய்யாமல் உயிருக்குயிராக காதலித்ததை எண்பதுகளில் துணிச்சலாக காட்டிய டி.ராஜேந்தரும் காணாமல் போனார். தமிழ்நாட்டையே பேச வைத்த அந்த மாதிரி படங்களும் இப்போது காணாமல் போய்விட்டன. ‘வசந்த மாளிகை’ படத்தை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து ரிலீஸ் செய்கிறார்கள். படம் பிய்த்துக் கொண்டு வசூலை குவிக்கிறது. அப்படியென்றால் டீசன்ட்டான காதலுக்கு இன்னும் ஜீவன் இருப்பதாகதானே அர்த்தம்? பிறகு ஏன் இப்போதுள்ள இயக்குனர்கள் பொடி மட்டைக்குள் சுற்றிக் கொடுக்கிறார்கள் அதை?

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ என்றொரு காதல் படம். பதினெட்டு கோடி வசூல் என்கிறார்கள். படம் முழுக்க லெக் பீஸ் தேடியே அலைகிறான் ஹீரோ. இங்கு லெக் பீஸ் என்பது குறியீடு! (புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்க)

சினிமாவும் இப்போது சீசன் பிசினசுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆக்ஷன், மசாலா, கண்ணீர், குடும்பக் கதைகள் போய்விட்டன. ஆவி பேய் பில்லி சூனிய காலம் இது. இங்கேயும் கூட பொருத்தமாக தன்னை மிக்ஸ் பண்ணிக் கொள்கிறது காதல்! இப்போதெல்லாம் ஹீரோக்கள், படங்களில் வரும் பெண் ஆவியை காதலிக்கிறார்கள். பிசாசு படத்தில் வரும் பெண் ஆவி மீது காதல் கொள்கிறான் அப்படத்தின் ஹீரோ.

இன்னொரு படத்தில் விபத்திற்குள்ளாகும் பெண் ஒருத்தி உயிரழக்க, அவள் ஆவி ஹீரோவின் கண்ணுக்கு மட்டும் தெரியும். “என் வீடு மறந்து போச்சு. கண்டு பிடிச்சு சொல்லேன்” என்று அந்த ஆவி கேட்க, கண்டுபிடிக்கக் கிளம்புவான் ஹீரோ. படம் முடிவதற்குள் இருவருக்கும் லவ்!

இந்த பொல்லாத சினிமாக் காதல், இப்போதுதான் ஆவி வரைக்கும் வந்திருக்கிறது. அடுத்து என்னவாம்? அதை நினைத்தால்தான் ஒரே பீதியாக இருக்கிறது! ஒருவேளை அஸ்தியை காதலிப்பார்களோ என்னவோ? அதையும் நெற்றியில் பூசிக் கொண்டு கதை செய்தாலும் செய்வார்கள்!

காதலே நமஹ…

(ஆர்.எஸ்.அந்தணன் எழுதி கல்கி வார இதழில் காதலர் தின சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Swathishta Krishnan Stills

Close