சசிகலாவுக்கு பதவி! தமிழ்சினிமா என்னாகும்? பதறுகிறதா கோடம்பாக்கம்?
தமிழகத்திற்கு யார் முதல்வராக வந்தாலும், அவருக்கு ஜே… போட்டே வாழ வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது சினிமாவுலகம்! அப்படி போடாதவர்களுக்கு வரிவிலக்கில் ஆரம்பித்து, வருமான வரி ரெய்டு வரைக்கும் பிக்கல் பிடுங்கல் ஏற்படும். பிந்தையத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நடந்தது… நடப்பது… எல்லாவற்றிலும் தன் மூக்கை சுலபமாக நுழைக்க வல்லது மாநில அரசு.
சரி… சசிகலா விஷயத்திற்கு வருவோம். “இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்” என்று ஜெயலலிதா முழங்கும்போதெல்லாம் அதை முன் வந்து முடித்துக் கொடுக்கிற ஒரே கட்டப்பா…? சந்தேகமேயில்லை. சசிகலாவேதான்! அவரது ஒவ்வொரு ராஜகட்டளையையும் நிறைவேற்றுகிற தளபதியாக இருந்த சசிகலாவுக்கும் தமிழ்சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு.
ஜெ. தமிழ்சினிமா மீது பாய்ச்சிய அம்புகளுக்கும் சரி… அன்புகளுக்கும் சரி… மேடத்தின் ‘மோடம்’ ஆகவே செயல்பட்டவர் சசிகலா. ஜெயா தொலைக்காட்சிக்காக ஒரு படத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை நேரடியாக ஜெ.விடம் சொல்லியதில்லை நிர்வாகம். சசிகலாவுக்குதான் புரப்போசல் போகும். அதில் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களுக்கான விலையை சசிகலாதான் நிர்ணயித்தார்.
ஜெயா தொலைக்காட்சிக்கு தன் படத்தை விற்ற ஒரு தயாரிப்பாளர் நம்மிடம் விவரித்த அனுபவம் இது. “சார்… என் படத்தை வாங்க கேட்டு ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருந்தேன். திடீர்னு ஒரு நாள் போன். கார்டன்லேர்ந்து கூப்பிடுறோம். சின்னம்மாவுடைய அழைப்பு. சரியா பதினொரு மணிக்கு வந்திருங்க… என்றது. அவ்வளவுதான். வாரி சுருட்டிக் கொண்டு கார்டனுக்கு ஓடினேன்” என்றார். அப்புறம் என்ன நடந்தது?
வெளியில் நின்றிருந்த அதிகாரிகள், “சின்னம்மா உள்ள இருக்காங்க. போய் அநாவசியமா எதுவும் பேசக்கூடாது. அவங்க என்ன கேட்கிறாங்களோ… சுருக்கமாக பதில் சொல்லிட்டு திரும்பிடணும்” என்றார்கள். சரி என்றபடியே உள்ளே போன தயாரிப்பாளரை இன் முகத்தோடு வரவேற்ற சசிகலா, சம்பிரதாயத்திற்கு சில வார்த்தைகள் பேசிவிட்டு, “நீங்க கேட்டிருந்த அமவுன்ட் பார்த்தேன். குறைக்கணும்னு தோணல. அப்படியே வாங்கிக்குங்க…” என்று கூறியபடியே ஒரு துண்டு சீட்டில் விலையை எழுதி கையெழுத்தும் போட்டு கொடுத்தார். ‘இதை கொண்டு போய் ஜெயா டி.வியில் கொடுங்க. அவங்க தருவாங்க” என்று கூற… சந்தோஷத்துடன் வெளியே வந்த தயாரிப்பாளர், அந்த பணத்தை ஜெயா டி.வியில் பெற்றுக் கொண்டதாக கூறினார்.
இப்படி சின்னப்படங்கள் மட்டுமல்ல, ஜெயா டி.விக்காக வாங்கப்பட்ட பெரிய படங்கள் கூட சசிகலாவின் மேற்பார்வையில்தான் வாங்கப்பட்டன.
சினிமாவில் நடக்கும் எல்லா விஷயங்களும் அப்போதைய முதல்வர் ஜெ.வுக்கு போகிறதோ, இல்லையோ? சசிகலாவின் காதுகளுக்கு போய்விடும். இன்று பெரிய பெரிய படங்களை வெளியிடும் ஜாஸ் சினிமாஸ், அந்த நிறுவனத்தின் பராமரிப்பில் இயங்கும் தியேட்டர்கள் எல்லாமே சசிகலாவின் ஆளுமைக்குட்பட்டதுதான்.
எனவே சினிமாவின் எல்லா தட்ப வெப்ப நிலைகளும் அறிந்தவர் அவர் என்பதால், “சசிகலா வரட்டும்… சசிகலா வரட்டும்…” என்கிறது சினிமாக்காரர்கள் வட்டாரம்!
தூரத்தில் தெரிகிற வெளிச்சம், ஒளி விளக்கா? கொள்ளிவாய் பிசாசா? என்பது அருகில் வந்தால்தான் தெரியும்.
எப்பம்மா வருவீங்க?
https://www.youtube.com/watch?v=dJiHyk4w3v0&feature=youtu.be
“தூரத்தில் தெரிகிற வெளிச்சம், ஒளி விளக்கா? கொள்ளிவாய் பிசாசா? என்பது அருகில் வந்தால்தான் தெரியும்.” சரியான பஞ்ச்.
இந்தச் செய்தி அங்கே சேர்ந்தபின் உங்களைத் தேடி வரப் ேபாவது ஆட் ேடாவா அல்லது காவல்துறையா?