பணக்காரனுக்கு பணியாரம்! ஏழைன்னா இளக்காரம்! தலைமீது ஏறி ஆடும் தமிழக சென்சார்!
இன்று நேற்று அல்ல. மதியழகன் என்பவர் தமிழக தணிக்கை குழுவின் தலைவராக வந்த நாளிலிருந்தே குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முதலை தோலில் புரண்டு, முள்ளம்பன்றி சூப் குடித்த நிலைமைக்கு ஆளாகி வருகிறார்கள். லேட்டஸ்ட் அழுகை ‘சாய்ந்தாடு’ பட தயாரிப்பாளர் கஸாலியுடையது. அதற்கப்புறம் ‘விழித்திரு’ பட இயக்குனர் மீரா கதிரவன். இப்போது ‘கன்னா பின்னா’ பட இயக்குனர் தியா.
சென்சாருக்கு தன் படத்தை அனுப்பிவிட்டு, தாங்கொணா துயரத்தோடு வெளியே வந்திருக்கிறார் இவர். உள்ளே என்ன நடந்தது? விசாரித்தால் துலாபாரம் படத்தை நாலு தடவை இடைவிடாமல் பார்த்த மாதிரி மனசு கனக்கிறது.
இந்தப்படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டவர்.. இந்தப்படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.. நாயகியாக ‘வன்மம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.
படத்தை பார்த்த தணிக்கை குழு முதன்மை அதிகாரி மதியழகன் இந்தப்படத்தில் ஆட்சேபகரமான சில விஷயங்கள் இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுக்கமுடியும் என கறாராக கூறியுள்ளார். பின்னர் அது குறித்த விளக்கம் கேட்ட இயக்குனரிடம் சில குறிப்பிட்ட வசனங்களையும் சில காட்சிகளையும், ஒரு பாடலையும் நீக்கும்படி. கூறியுள்ளார். இத்தனைக்கும் வன்முறை, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் என எந்த திணிப்பும் இல்லாமல் தான் இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தியா..
ஆனாலும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் முக்கியம் என்பதாலும், அதுதான் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளரை தேவையில்லாத நட்டத்தில் இருந்து காப்பாற்றும் என்பதாலும் சென்சார் அதிகாரி சொன்ன மாற்றங்களை செய்துள்ளார்.. ஆனாலும் சில இடங்களில் அவர் குறிப்பிட்ட காட்சிகளை, வசனங்களை நீக்கினால் கதையின் தன்மையே மொத்தமாக சிதைந்துவிடும் என விளக்கமும் கூறியுள்ளார் இயக்குனர் தியா. இவ்வளவு செய்தும் கூட ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தரமுடியும் என பிடிவாதம் காட்டியுள்ளார் தணிக்கை அதிகாரி மதியழகன். இதுதவிர, படத்தின் தயாரிப்பாளரையும் வைத்துக்கொண்டே, இந்த மாதிரி படங்களை எல்லாம் ஏன் எடுத்து காசை வீணாக்குகிறீர்கள், பேசாமல் என்ன தொழில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதையே உருப்படியாக பண்ணலாமே, அல்லது படம் எடுப்பதற்கு முன் என்னை கலந்து ஆலோசித்திருக்கலாமே என தயாரிப்பாளரின் மனதை குலைக்கும் விதமாக பேசியுள்ளார் அந்த அதிகாரி..
படம் எடுப்பதற்கு முன்பே அதுகுறித்து சென்சார் அதிகாரியிடம் ஆலோசிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என அவரிடம் கேள்வியும் எழுப்பிய தியா, சமீபத்தில் வெளியான ஆபாசமான காட்சிகள், வசனங்கள் நிறைந்த, ஒரு படத்திற்கு எந்த அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதனால் கோபமான அந்த அதிகாரி, மற்ற படங்களை பற்றி பேச உங்களுக்கு அதிகாரமில்லை என கூறியுள்ளார்.. மேலும் உங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாக ரிவைசிங் கமிட்டிக்கு செல்லுங்கள் என தெனாவெட்டாகவும் கூறியுள்ளார்.. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படம் பார்த்தீர்களா..? அதற்கு எப்படி ‘யு’ சான்றிதழ் கொடுத்தோம் தெரியுமா என அவரே இன்னொரு படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். இப்போது மட்டும் இன்னொரு படம் குறித்து நீங்கள் எப்படி பேசலாம் என இயக்குனர் தியா கேட்டதும் டென்சன் ஆன தணிக்கை அதிகாரி, இயக்குனர் தியாவை தனது அறையைவிட்டு வெளியே செல்லுமாறு கூறினாராம்.
இயக்குனர் தியா முன் வைக்கும் கேள்விகள்…
எஸ்.வி.சேகர் போன்ற தணிக்கை குழுவில் இருக்கும் நபரே, இந்த அதிகாரியிடம் தனது படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வாங்குவதற்கு ‘கபாலி’ படத்தை உள்ளே இழுத்திருக்கிறார். அதன்பின்னர்தான் அவர் தயாரித்துள்ள படத்திற்கே ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டது.. ஆனால் எங்களைப்போன்ற சிறிய படங்களை எடுப்பவர்கள் அப்படி கேள்வி எழுப்ப முடியுமா..?
படத்திற்கு ‘யு’ அல்லது ‘ஏ’ என எந்த சான்றிதழும் தராமல் ‘யு/ஏ’ தான் தருவேன் என தணிக்கை அதிகாரி மதியழகன் அடம்பிடிக்கவேண்டிய காரணம் என்ன..?
ஆபாசமான, சர்ச்சைக்குரிய சில படங்களுக்கு மட்டும் அவர் ‘யு’ சான்றிதழ் வழங்கியிருப்பது எதன் அடிப்படையில்..?
எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் ஒரு படத்தை தயாரித்து ரிலீஸுக்காக கொண்டுவரும் நேரத்தில், எந்தவித காரணமும் சொல்லாமல் இல்லாமல் இப்படி சான்றிதழ் தர தணிக்கை அதிகாரி மறுப்பது ஏன்.,?
ஒரு படத்தின் இயக்குனரை வெளியே போ என சொல்லிவிட்டு, தயாரிப்பாளருடன் தனியாக் பேசும் உரிமை தணிக்கை அதிகாரிக்கு இருக்கிறதா..?
என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பும் இயக்குனர் தியா, ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பி தயாரிப்பாளருக்கு இன்னும் செலவு வைக்க விரும்பவில்லை. அதேசமயம் தணிக்கை அதிகாரியின் பேரத்துக்கு படிந்து பணம் கொடுத்து படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வாங்கவும் விரும்பவில்லை..
வரும் டிச-9ஆம் தேதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில், தணிக்கை அதிகாரியின் இந்த செயலால், அதிர்ச்சியடைந்துள்ள இயக்குனர் தியா, சட்டபூர்வமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்.