தமிழ் கத்துக்கணும்… அறிமுக நடிகை யாமினி ஆசை!
ஒரு தெலுங்கு நடிகை வார்த்தைக்கு வார்த்தை “தமிழ் கத்துக்கணும் சார்…” என்று கேட்பதே ஒரு சங்கீதமாக இருந்தது. மொழி மேல் ஆர்வமா, தமிழ்சினிமா கொடுக்கிற சம்பளத்தின் மீது ஆர்வமா தெரியவில்லை. ஆனாலும் யாமினி பாஸ்கரின் ஆசைக்கு தகுந்தபடி ரிட்டையர்டு ஆன சாலமன் பாப்பையாக்கள் வந்து சேர வாழ்த்துக்கள்! இந்த யாமினி பாஸ்கருக்கு சொந்த பந்தம் அத்தனை பேரும் ஆந்திராவில்தான். ஆனால் திடீரென ஒரு தமிழ் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும், தெலுங்கில் வந்த வாய்ப்புகள் இரண்டை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு தென்காசிக்கு ரயில் ஏறிவிட்டார்.
இத்தனைக்கும் அவர் நடித்த இரண்டு படங்கள் தெலுங்கில் ரிலீசாகி சுமாராக ஓடியும் இருக்கிறதாம். ‘முன்னோடி’ என்கிற படத்தின் நாயகிதான் இவர். அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.ராஜசேகருக்கு சொந்த ஊர் தென்காசி. கல்லூரியில் படிக்கிற காலத்திலிருந்தே நான் டைரக்டர் ஆகணும் என்று சொல்லி சொல்லியே மனசை ட்யூன் பண்ணியிருப்பார் போல. சொந்தப்பணத்தில் இந்த முன்னோடியை எடுத்திருக்கிறார். “யாரிடமும் வொர்க் பண்ணியதில்ல. ஆனால் நானே ஒரு குறும்படம் எடுத்திருக்கேன். நல்லாயிருக்குன்னு நண்பர்கள் சொன்னதால், முழு நீள படம் எடுக்க முன் வந்தேன்” என்றார்.
ஒரு ரவுடியை வாழ்கையின் முன்னோடியா எடுத்துகிட்டு வாழுற ஒருவன், அது சரிதானா என்று உணர்வதுதான் முழுக்கதை. அழுத்தமான ஒரு மெசேஜ் இருக்கு என்கிற எஸ்.பி.டி.ஏ ராஜசேகர், தமிழ்சினிமாவின் வியாபார டெக்னிக்குகளையும் அலசி ஆராய்ந்து வைத்திருக்கிறார். சினிமா ரசிகர்களுக்கு ஒரு படம் எப்படியிருந்தா புடிக்குமோ, இந்தப்படம் அப்படியிருக்கும் என்றார்.
படத்தில் ஒரு அம்மா கேரக்டரில் சித்தாராவும், வில்லன் கேரக்டரில் கங்காரு பட ஹீரோ அர்ஜுனாவும் நடித்திருக்கிறார்கள். குற்றம் கடிதல் படத்தில் மிக முக்கியமான ரோலில் நடித்து எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்த பாவெல் நவநீதனும் இருக்கிறார்.
காஸ்டிங் கலக்கலா இருக்கு. கதையும் அப்படியிருந்தால்… ஆஹா ஓஹோதான்!
அழகு பாப்பா ஆசைப்படுது. அப்படியே செஞ்சிற வேண்டியதுதான்!?