நடிகைக்கு திட்டமிட்ட அடி உதை! படப்பிடிப்பில் நடந்த பயங்கரம் கண்டுகொள்ளுமா நடிகர் சங்கம்?

கோடையில் மழை வந்தால் கண்டிப்பாக இடி மின்னல் இருக்கும் என்பார்கள்! ‘கோடை மழை’ படப்பிடிப்பிலும் அப்படியொரு இடி இடித்ததால் மிரண்டு போயிருக்கிறார் நடிகை பிரியங்கா. இந்த தாக்குதல் ஏதோ இயல்பாக நடந்த விஷயம் போல தெரியவில்லை என்பதுதான் இந்த சம்பவத்திற்கு பிறகு நமக்கு கிடைத்த பரபர பகீர் தகவல்கள். சில வருடங்களுக்கு முன் நடிகை பத்ம ப்ரியாவை இயக்குனர் சாமி தான் இயக்கிக் கொண்டிருந்த மிருகம் படப்பிடிப்பில் ஓங்கி அறைந்ததும், அந்த சம்பவத்தை கண்டிக்கும் விதத்தில் சாமிக்கு தயாரிப்பாளர் சங்கம் சுமார் ஒரு வருடத்திற்கு படம் இயக்க தடை விதித்ததும் நாடறிந்த விஷயம்தான். இப்போது அவரே இயக்கி வரும் ‘கங்காரு’ படத்தின் நாயகியாக நடித்து வரும் பிரியங்காவுக்கும் அதே போல ஒரு தாக்குதல் சம்பவம். ஆனால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பவர் சாமியல்ல. இயக்குனர் மு.களஞ்சியம்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே ‘கோடை மழை’ படத்தில் தனது போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டாராம். அதற்கப்புறம் காட்சிகளை கொஞ்சம் ரீ ஷுட்டிங் செய்ய நினைத்திருக்கிறார்கள். மீண்டும் பிரியங்காவை நடிக்க அழைத்த போது அவர் வேறு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும், அந்த புதிய பட இயக்குனரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு இந்த படத்தின் படப்பிடிப்புக்கு கிளம்பினார். கிளம்புகிற நேரத்தில் கூட, ‘உங்கள் சொந்த செலவில்தான் வர வேண்டும். நாங்கள் தனியாக கார் கொடுக்க முடியாது’ என்று கூறிவிட்டாராம் இயக்குனர். ‘அப்படி செலவு பண்ண மனமில்லை என்றால் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் பஸ்சில் வாங்க’ என்று கூறிவிட, ‘கார் மட்டும் கொடுங்க. பெட்ரோல், டோல்கேட் செலவு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டுதான் கிளம்பி போனாராம் பிரியங்கா.

திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இவர் மீது இயக்குனருக்கு என்ன கோபமோ, வந்ததிலிருந்தே பிரியங்காவை கடுமையாக திட்டிக் கொண்டிருந்ததாக கூறுகிறார்கள் படப்பிடிப்பு குழுவினர். அதையெல்லாம் சமாளித்தவாறே நடித்துக் கொண்டிருந்திருக்கிறார் பிரியங்காவும். ஒரு காட்சியில் பிரியங்காவுக்கு அண்ணனாக நடிக்கும் இயக்குர் மு.களஞ்சியம் அவரது கன்னத்தில் அறைய வேண்டும். ரிகர்சல் காட்சியிலேயே அவர் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம், ‘அண்ணா… ரொம்ப வலிக்குது. கொஞ்சம் மெதுவா அடிங்க’ என்று கூறினாராம் பிரியங்கா. அதற்கப்புறமும் கூட அவர் அதே வேகத்தில் அறைந்தாராம். மூன்றாவது முறை அவர் அறைந்ததுதான் மிகப்பெரிய கொடூரம். காது லேசாக கிழிந்து ரத்தம் கொட்டுவது போல அறைந்திருக்கிறார். காதுக்குள் ங்கொய்… என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறதாம் இப்போதும். சட்டென்று மயங்கி விழுந்த பிரியங்காவுக்கு அதற்கப்புறம் வலிப்பும் வந்துவிட்டது. அதற்கப்புறம் அவசரம் அவசரமாக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

மனிதாபிமானத்தின் மிச்சத்தையும் உச்சத்தையும் அதற்கப்புறம்தான் கவனிக்க வேண்டும். மறுநாள் ‘நாங்கள் சென்னைக்கு போய்விட்டு திரும்புகிறோம்’ என்று கேட்ட பிரியங்காவுக்கு கார் கூட ஏற்பாடு செய்து தரவில்லையாம் தாக்குதல் நடத்தியவர்கள். ‘ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்க. வரும். அதில் ஏறிப் போங்க’ என்று அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. எப்படியோ… உயிர் பிழைத்தால் போதும் என்று சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறார் பிரியங்கா. இங்கு மருத்துவரிடம் காட்டியபோது, ‘இது போலீஸ் கேஸ் ஆகக் கூடிய அளவுக்கு நடத்தப்பட்ட தாக்குதல். யதார்த்தமாக அடித்தது போல தெரியவில்லையே’ என்றாராம். ஒரு வாரமாவது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறாராம் மருத்துவர்.

இதற்கப்புறமும் பிரியங்கா எவ்வித மேல் நடவடிக்கையும் தேவையில்லை என்று கூறி அமைதி காத்து வருகிறார். நடிகர் சங்கத்தில் முறைப்படி உறுப்பினராக சேரவில்லை அவர். இருந்தாலும், மனிதாபிமானம் உறுப்பினர் கார்டு பார்த்து வருவதல்ல. மேக்கப் போட்டு கேமிரா முன் நிற்கும் ஒவ்வொருவரும் நம் இனம்தான் என்பதை மனதில் கொண்டு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் நடிகர் சங்கம். இனிமேல் இதே படப்பிடிப்பில் கலந்து கொள்ள செல்கிற பிரியங்காவுக்கு வேறெந்த ஆபத்தும் நேராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் சங்க தலைவர் சரத்குமாரின் நியாயமான பார்வையில் இருக்கிறது.

இதுபோல கொடூர சம்பவத்திற்கு ஆளாகும் கடைசி நடிகையாக பிரியங்கா இருக்கட்டும்….

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
அதாண்டா நயன்தாரா கட்ஸ்….

எல்லா சங்கங்களும் கையில் வைத்திருக்கிற ஆயுதம் எதுவென்றால் ரெட்! ஒத்துழைப்பு தரலேன்னா ஒரு வேலையும் தர மாட்டோம் என்கிற இந்த ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு மத...

Close